செய்திகள் சிந்தனைகள்
கெஅடிலானில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? கட்சியில் 40%, ஆட்சியில் 0%
கோலாலம்பூர்:
நாட்டில் 40% இந்தியர்கள் உள்ள கெஅடிலான் கட்சியில் அவர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல் முறையாக ஒரு பல்லினக் கட்சியின் தலைவர் பிரதமராக வந்திருப்பது என்றால் அது கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தான்.
பல்வேறு இனம், சமயம், கலாச்சாரம் கொண்ட மலேசியர்களின் வேற்றுமையை ஏற்று எவ்வித புறக்கணிப்பும் இன்றி மக்களை வளர்ச்சிப் பாதையில் ஒருங்கிணைத்து செல்வதுதான் கெஅடிலான் கட்சியின் அடிப்படை கொள்கை.
இந்த கொள்கையில் ஈர்க்கப்பட்டுத்தான் வேறு கட்சிகளில் இருந்த இந்தியர்களும் புதிய தலைமுறை இந்திய இளைஞர்களும் அக் கட்சியில் இணைந்தனர்.
கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் கடந்த 25 ஆண்டுகளில் அடிக்கடி நீதிமன்றம் சிறை என சென்று கொண்டு கட்சியை வழிநடத்த வாய்ப்பில்லாமல் இருந்தபோதுகூட அன்வார் எப்படியாவது பிரதமராக வந்து விட வேண்டும் என கொடியேந்தி, வீதியில் போராடி, கைதாகி, அடி உதை வாங்கி அல்லும் பகலும் உழைத்தவர்களில் பெரும் பங்கு அக்கட்சியின் இந்திய உறுப்பினர்களுக்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.
எதிரும் புதிருமாக இருந்த பல கட்சிகள் இன்று ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் ஒரு குடையின் கீழ் இருந்தாலும் அன்று அன்வாருக்காக எதற்கும் தயங்காமல் பிற கட்சி உறுப்பினர்களை எதிர்த்து பல பேராட்டங்களில் களம் இறங்கியவர்கள் இந்திய உறுப்பினர்கள்.
பல தேர்தல்களில் பணம், பதவி என்று எதனையும் எதிர்ப்பார்க்காமல் இயந்திரமாக உழைத்தவர்கள் இந்தியர்கள்.
நாம் பிற கட்சிகளால் ஓரங்கட்டப்பட சமூகம், புறக்கணிக்கப்பட்ட சமூகம் என பிற இந்தியர்களிடம் வாதத்தை முன்வைத்து, இதற்கு தீர்வுக் கண்டு இந்திய சமூகத்துக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கக் கூடிய ஒரே பிரதமர் அன்வார் என அவரை சமூகத்தின் முன் நிறுத்தி ஆதரவு திரட்டியவர்கள் இந்த இந்திய உறுப்பினர்கள்.
அப்படிப்பட்ட தியாகத்திற்கு கிடைத்த வெற்றிதான் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 24ல் அன்வார் பிரதமராக பதவி ஏற்றது.
ஆனால், அன்வார் இனி இந்திய சமூகத்துக்கு உரிய அங்கீகாரத்தையும் இழந்த செல்வாக்கையும் மீட்டுக் கொடுப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் அன்வாரின் அண்மைய செயல்பாடுகள் அதே இந்திய உறுப்பினர்கள் மத்தியில் நாம் சரியான இடத்தில்தான் உள்ளோமா எனும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை விரக்தியில் தள்ளியுள்ளது.
முதலில் அவர் அறிவித்த அமைச்சரவையில் அவரது கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கூட அமைச்சராக நியமிக்கப்படவில்லை.
அண்மையில் நடந்து முடிந்த மாநில தேர்தல்களில் பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்கம் ஆட்சி அமைத்த நிலையில் கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய சட்ட மன்ற உறுப்பினரும் ஆட்சி குழுவில் இடம் பெறவில்லை.
பிற மாநிலங்களான ஜொகூர், மலாக்கா, பேரா, பகாங் ஆகிய மாநிலங்களில் ஒற்றுமை அரசாங்க ஆட்சி நடந்தாலும் அங்கும் கெஅடிலான் கட்சி இந்திய உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் எதிலும் இல்லை.
அன்வார் தமது கட்சியில் உள்ள இந்திய உறுப்பினர்களுக்கே உரிய அங்கீகாரத்தை கொடுத்து நியாயமான அதிகாரப் பங்கீட்டை வழங்க முடியாத பட்சத்தில் எப்படி ஓட்டு மொத்த இந்திய சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை ஈடுசெய்யப் போகிறார்?
வேண்டும் வரை பயன்படுத்தி விட்டு கழற்றிவிடும் சமுதாயமா இந்திய சமூகம் என பல கட்சி உறுப்பினர்கள் நம்மிடம் கேள்வியை முன்வைப்பதோடு இவ்விவகாரம் பொது வெளிக்கு கொண்டுவரப்பட வேண்டும் என கோரி வருகின்றனர்.
நாட்டின் பெரும்பான்மை சமூகத்துக்கு உதவ வேண்டும், உரிய பங்கீட்டை வழங்க வேண்டும் என்பது நியாயமே.
அன்வார் அப்படிப்பட்ட சூழலில் எடுக்கின்ற முடிவுகளை கட்சியில் உள்ள இந்திய உறுப்பினர்களோ, ஏன் இந்திய சமூகம் கூட கேள்வி கேட்டதில்லை.
அதே அடிப்படையில் பார்த்தால் கெஅடிலான் கட்சியில் 40% கூடுதலாக பெரும்பான்பையாக உள்ள உறுப்பினர்கள் இந்தியர்கள்.
ஆனால் கட்சியில் பெரும்பான்பையாக உள்ள அவர்களுக்கு மட்டும் ஆட்சியில் ஏன் இடமில்லை?
இங்கு மட்டும் பெரும்பான்மை முக்கியமில்லை போலும்.
அன்வார் இதை கவனிக்கவில்லையா? அல்லது இந்தியர்கள்தானே என அலட்சியமா?
அவரே இந்தியர்களின் ஆதரவு இன்றி தமது கட்சியின் தலைவராக நீடிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் அவர்களை ஓரங்கட்டுவது நியாயமா?
அலங்காரத்துக்காக தமது கட்சியில் உள்ள ஒருவருக்கு மட்டும் துணை அமைச்சர் பதவி கொடுத்திருப்பது எவ்விதத்திலும் ஏற்கக்கூடியது அல்ல.
இந்தியர்களைப் பற்றி அக்கறை கொள்ளாத பிரதமர் என வர்ணிக்கப்பட்ட துன் மகாதீர் முதன் முறையாக பிரதமராக இருந்தப் போது கூட ஒரு இந்திய அமைச்சர் 3 துணையமைச்சர்கள் இருந்துள்ளார்கள்.
அப்துல்லா அஹ்மத் படாவி ஓர் இந்திய அமைச்சர் 4 துணையமைச்சர்களை நியமித்திருந்தார்.
நஜிப் துன் ரசாக் காலத்தில் இரு இந்திய அமைச்சர்கள் 5 துணையமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். மகாதீரின் இரண்டாவது பிரதமர் தவணையின் போது நான்கு இந்திய அமைச்சர்கள் ஒரு துணை அமைச்சர் நியமிக்கப்பட்டனர். ஆனால் இன்றைய நிலையோ பரிதாபம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஅடிலான் கட்சியில் உள்ள ஒரு இந்திய நாடாளுமன்ற அல்ல சட்டமன்ற உறுப்பினருக்கோ முழு அமைச்சராகவோ ஆட்சிக் குழுவிலோ இடம் பெற தகுதி இல்லையா? பிற கட்சியில் வாய்ப்பில்லை.
சமூக்கத்துக்குப் பங்காற்ற உரிய அதிகாரம் இல்லை எனக் கருதி கெஅடிலானில் இணைந்த இந்தியர்கள் வேறு எதிர்க்கட்சிகளை தேடிச் செல்லும் நிலையை அன்வாரே உருவாக்கிவிடுவாரோ என கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், இந்தியர்கள் புறக்கணிக்கபடுகிறார்கள் என கூறி ஜசெக கட்சிகளிலிருந்து சில முக்கியத் இந்தியத் தலைவர்கள் வெளியேறியதை அண்மையில் பார்த்தோம்.
அதே நிலை கெஅடிலான் கட்சிக்கு வருமா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am