நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

என்று ஒழியும் இந்த ஊழல்? ஊழல் ஒழிப்பும் ஒரு வணக்கமே! வெள்ளிச் சிந்தனை - Dr KVS  ஹபீப் முஹம்மத்

ஊழலை ஒழிக்க முடியுமா ?

மதுவை ஒழிக்க முடியுமா?

நல்லவர்களை ஆட்சியில் அமர்த்த முடியுமா?

இந்த கேள்விகளுக்கு 'முடியாது' என்ற பதிலையே பெரும்பாலான மக்கள் தருவார்கள். இவற்றையெல்லாம் ஒழிக்க முயற்சிப்பது வீண் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர்.

இந்தத் தருணத்தில் சில நல்ல செய்திகளும் வரத்தான் செய்கின்றன.

சமீபத்தில் அறப்போர் இயக்கம் ஒரு ஊழலை ஆதாரத்துடன் வெளியில் கொண்டு வந்துள்ளது .
2021-23 இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசு வாங்கிய டிரான்ஸ்பார்மர்களில் அரசுக்கு நானூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக  நிரூபித்திருக்கிறார்கள் . இதற்கான டெ ண்டர்களை எடுத்த 30- 40 பேர்  கூட்டணி அமைத்துக் கொண்டு ஒரு சிண்டிகேட்டாக செயல்பட்டு அனைவரும்அதிக விலையை கேட்டுள்ளனர்.

நிச்சயமாக இது அரசியல்வாதிகள் , அரசு ஊழியர்களகளின் தயவு இன்றி நடந்திருக்க முடியாது.

ஊழலை துணிவாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அறப்போர் இயக்கத்தை நாம் மனதார பாராட்டுகின்றோம். மிரட்டல்கள் ,உயிர் உடமைக்கு  ஏற்பட ப் போகும் ஆபத்துக்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு தான் இந்தத்  துணிச்சலான காரியத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

இதுபோன்ற அறப்போர் இயக்கங்கள் மாவட்டம் தோறும், ஊர் தோறும் இயங்க வேண்டும். 
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் இணைந்து இத்தகைய அமைப்புகளை உருவாக்க வேண்டும். அரசை தட்டிக் கேட்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தட்டிக் கேட்பதும் ஒரு சமூக சேவையே ! வெள்ளம் ,புயல், சுனாமி போன்ற தருணங்களில் சேவை செய்வதும், வறுமை  நோய் ஆகியவற்றின் போது பணியாற்றுவதும் ஒரு சேவையே! இது போன்ற ஒரு சேவை தான் தீமைகளைத் தட்டி கேட்பதும் .

மதுவில் மயங்கி கிடப்பவனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுவதும் ஒர் அறமே! 

மதுவே கிடைக்காமல்  செய்வது அதைவிட சிறந்த அறம். 

வறுமையுற்றவர்களுக்கு உதவுவதும் ஓர் அறம்.

வறுமையே வராதவாறு தடுப்பது அதைவிடப் பெரிய அறம்.

எனவே சமூக சேவை செய்கின்ற பல்வேறு இயக்கங்கள் ஊழல் ஒழிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  மதம் சார்ந்த அமைப்புகளும் மத சார்பற்ற அமைப்புகளும்  இதில கவனம் செலுத்த வேண்டும் .

TMMK  , IUML  எஸ் டி பி ஐ, ஜமாஅத்தேஇஸ்லாமி, ஜமாத்துல் உலமா இன்னும் இதுபோன்ற அமைப்புகள் ஊழல் ஒழிப்பிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் .

ஊழல் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது .ஊழல் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுகிறது. ஊழல் ஒழிப்பும் ஓர் வணக்கமே !

நபிகள் நாயகம் மக்காவில் நபியாவதற்கு முன்னர் ஹில்புல் புளூல் என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. வெளியூரில் இருந்து வந்து பொருட்களை விற்பனை செய்பவரிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுக்காமல் மக்காவாசிகள் ஏமாற்றி வந்தனர்.

இதனைத் தடுக்கும் முகமாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. நபிகளாரும் அதில் ஓர் உறுப்பினராக இருந்தார்கள் .பின்னர் நபியாகி மதினா சென்று ஆட்சியில் அமர்ந்த பின்னர் சொன்னார்கள். "ஹில்புல் மீண்டும் துவக்கப்படும் என்றால் அதில் நான் என்னை இணைத்துக் கொள்வேன் . '

தீமைகளை செய்யாதிருப்பது மட்டுமல்ல அறம். தீமைகளை ஒழிப்பதும் ஒர் அறமே! 
சமூக சேவை செய்யும் அமைப்புகள் ஊழல் ஒழிப்பிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். பாசிசத்திற்கு அடுத்த ஆபத்தானது  இந்த ஊழல் .

ஊழலை சகித்துக் கொண்டிருந்தாலும் மறுமையில் இறைவனிடத்தில்  பதில் சொல்லியாக வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் போராட்ட குணம் குறைந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.

ஒப்பீட்டளவில் கேரள மாநில மக்கள் போராட்ட உணர்வு மிகுந்தவர்களாக காணப்படுகின்ற காரணத்தினால் அந்த மாநிலத்தில் ஊழல் தமிழ்நாட்டை விட குறைவாகவே உள்ளது.

போராடாமல் எதுவும் மாறாது .'தானாக எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா' என்ற கவிதை வரிகளுக்கு ஏற்ப நாம் முயற்சி எடுக்காமல் எந்த மாற்றமும் நிகழாது

இயக்கத் தலைவர்களே! பொதுமக்களே!

ஊழலுக்கு எதிராக கிளர்ந்து எழுங்கள்!

நன்மையை ஏவி  தீமையை விலக்கும் சமூகமே சிறந்த சமூகம் 'என்கிறது குர்ஆன்.

- Dr KVS  ஹபீப் முஹம்மத்

தொடர்புடைய செய்திகள்

+ - reset