செய்திகள் சிந்தனைகள்
இதமான நிழல் தரும் மரமாக ஓங்கி நிற்க வேண்டாமா..? - வெள்ளிச் சிந்தனை
துல்கர்னைன் அவர்களின் ஒட்டுமொத்த வரலாற்றையும் கருத்தில் கொண்டு ஆய்ந்து பார்த்தீர்களெனில் இன்றைய கொந்தளிப்பான, நெருக்கடியான காலத்திலும் துல்கர்னைனின் பார்வையும் உறுதியும் நடத்தையும் ஊக்கமும் தாம் தேவைப்படுகின்றன என்பதை நீங்களே உணர்வீர்கள்.
இன்று ஒட்டுமொத்த உலகமே மிகப் பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. மிகப் பெரும் பொருளாதார நெருக்கடி உலகைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.
வறுமை, ஏழைமை, இல்லாமை, போதாமை, இயலாமை என எல்லாமே மனிதர்களை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டிருக்கின்றன.
பசி, பட்டினி, பிணி ஆகியவை மிக வேகமாக மனிதகுலத்தின் மீது பாய்ந்து குதறிவிடக் காத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த இக்கட்டான சூழலில் முஸ்லிம்கள் இதமான நிழல் தரும் மரமாக ஓங்கி நின்றாக வேண்டும்.
ஒட்டுமொத்த உலகத்தாருக்கும் நலன் தருகின்ற, பிணி போக்குகின்ற, துன்பத்திலிருந்து விடுவிக்கிற கருணையாய், அருட்கொடையாய் முஸ்லிம் சமுதாயம் உயர்ந்து நிற்க வேண்டும்.
அன்பும் அருளும் நிறைந்த கருணை மார்க்கம்தான் இஸ்லாம். மார்க்கத்தின் அந்த இயல்புக்கு சாட்சி அளிப்பவர்களாய் நம்முடைய நடத்தையும் செயலும் இருக்க வேண்டும்.
இதற்கான வழிமுறை என்னவெனில் நம்முடைய இளைஞர்கள் களம் இறங்க வேண்டும். வழிவகைகளை, வசதிவாய்ப்புகளை தேட வேண்டும். உருவாக்க வேண்டும்.
பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக புதுப்புது உத்திகளை அடையாளம் காண வேண்டும்.
நம்ம பலவீனம் என்னவெனில் வழிவகைகள், வசதிவாய்ப்புகள் குறித்து நாம அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. வெறுமனே பிரார்த்தனைகளாலும் இறைஞ்சுதல்களாலும் எல்லாமே கைகூடி விடும் என்றே நாம் நினைக்கின்றோம்.
தனிப்பட்ட நடத்தையாக இதனைச் சொல்ல முடியாது. நம்முடைய கூட்டு இயல்பை இது பிரதிபலிக்கின்றது.
கூட்டுவாழ்விலும் இதன் பாதிப்பை பார்க்க முடிகின்றது. நம் வசம் தொலைக்காட்சி சேனல்கள் இல்லை.
நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நாளிதழ்கள் இல்லை.
நம்மிடம் திங் டேங்குகள் இல்லை.
ஏன் இந்த நிலைமை?
நாம் இந்த மனோபாவத்தை உடைத்தெறிய வேண்டும். புதிய இலக்குகளை, புதிய சிகரங்களை வென்றெடுக்கின்ற தீரத்துடனும் தொலைநோக்குடனும் களம் இறங்க வேண்டும்.
புதுப் புது உத்திகளை அடையாளம் காண வேண்டும். வழிவகைகளை, வசதிவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
மனிதர்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக இந்த வழிமுறையைத்தான் இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்.
நாம் இந்த விஷயத்தில் சற்றே அலட்சியமாக நடந்துகொள்கின்றோம்.
இத்தனைக்கும் இஸ்லாத்தின் போதனையே எல்லாவகையான வியூகங்களை மேற்கொண்டு விட்ட பிறகு, அனைத்து உத்திகளையும் கையாண்ட பிறகு, நம்மால் சாத்தியமான அனைத்தையும் செய்து முடித்த பிறகு இறைவன் மீது சார்ந்திருக்க வேண்டும் என்பதுதானே.
பத்ரு போர்க்களத்துக்கு எல்லா வகையான ஏற்பாடுகளுடன் சென்று சேர்ந்த பிறகு,
சாத்தியமான அனைத்து வழிவகைகளையும் ஆயுதங்களையும் கருவிகளையும் திரட்டிக் கொண்டு சேர்ந்த பிறகு,
எங்கு கூடாரம் அமைக்க வேண்டும், தண்ணீருக்கான ஏற்பாடு என்ன என சின்னச் சின்ன விவகாரங்களையும் கலந்தாலோசித்து தீர்மானித்து விட்ட பிறகு,
இறுதியில்தான் இறைவனுக்கு முன்னால் சிரம் பணிந்து மன்றாடுகின்ற கட்டம் வருகின்றது.
முதலில் திட்டமிட வேண்டும். வியூகங்களை வகுக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை மேற்கொள்ள வேண்டும்.
வழிவகைகளை திரட்ட வேண்டும். உயர்ந்த திறமைகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
அதன் பிறகுதான் அல்லாஹ்விடம் உதவி கேட்டு மன்றாட வேண்டும். அவனையே சார்ந்து இருக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் தவக்குல்.
இந்த அழகிய நடைமுறையை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். துல்கர்னைன் அவர்களின் வாழ்விலிருந்து நமக்குக்கிடைக்கின்ற பாடமும் படிப்பினையும் இவைதாம்.
மக்கள் சேவை என்பது எது?
மக்கள் சேவை என்பது வெறுமனே மளிகை பொருள்களை தானம் செய்வதற்கு விநியோகம் செய்வதற்குப் பெயர் அல்ல.
உலகம் முழுவதிலும் செயல்படுகின்ற என்ஜிஓக்களைப் போன்று இயங்குவதும் மக்கள் சேவை ஆகாது.
இன்றும் மக்கள் சேவைப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு, மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, துயரங்களைத் துடைப்பதற்கு புதுப் புது உத்திகள் தேவைப்படுகின்றன.
இன்றைய மனிதர்கள் எதிர் கொண்டிருக்கின்ற பிரச்னைகளுக்கு தீர்வை கண்டுபிடித்து தருவது அவசியமாகும்.
இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் குர்ஆனின் அறவுரைகளின் அடிப்படையில் மனிதர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பற்கான உத்திகளை, தீர்வுகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவற்றை உலகத்தாருக்கு எடுத்துரைக்க வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்திக் காண்பிக்க வேண்டும்.
இந்த கொரோனா காலத்தில் லாக் டவுன் நாள்களில் நாடு முழுவதும் முஸ்லிம் இளைஞர்கள் இதற்கான அழகிய முன்மாதிரிகளை நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.
புதிய உத்திகளை உருவாக்கி மக்களின் சிரமங்களைப் போக்கினார்கள். அசாதாரணமான எடுத்துக்காட்டுகளை உலகத்தாருக்கு முன்னால் ஏற்படுத்தினார்கள்.
நாடு முழுவதிலுமிருந்து வருகின்ற செய்திகள், தகவல்கள் ஆகியவற்றைப் பார்க்கின்ற போது இந்த விஷயத்தில் மிகப் பெரும் எழுச்சி நம் சமுதாய இளைஞர்களிடம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகின்றது.
இந்தப் போக்கு தொடர வேண்டும். மேலும் நாம் இந்த நாட்டில் பிரச்னைகளைத் தீர்க்கின்ற அருமருந்தாய் மேலெழுந்து நிற்க வேண்டும்.
நாட்டின் மிகப் பெரும் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டுமா? முஸ்லிம் இளைஞர்களை அணுகுங்கள் என்கிற அளவுக்கு நிலைமை மாற வேண்டும். நம்மைக் குறித்து சாமான்யர்கள் மத்தியில் இந்த மாதிரியான சித்திரம் உருவாக வேண்டும்.
இது நடந்து விட்டால் மதவாதமும் மதவெறியும் கிளறிவிட்டிருக்கின்ற வெறுப்பு உணர்வு தணிந்துவிடும். மதவாதப் பிரச்னை தீர்ந்துவிடும்.
நாம் இந்த நாட்டு மக்களின் மூளைகளையும் இதயங்களையும் வெல்வதற்கும் இதுதான் வழி. சத்திய மார்க்க அழைப்பின் மூலமாக மூளைகளை வெல்வது சாத்தியமாகும். மக்கள் சேவை மூலமாக இதயங்களைக் கொள்ளை கொள்ள முடியும்.
- சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி
தொடர்புடைய செய்திகள்
November 29, 2024, 7:00 am
நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனாகவே இருப்பான்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am