செய்திகள் சிந்தனைகள்
நாட்டுமக்களின் நம்பிக்கையை தொலைத்த மோடியின் பேச்சு
மேடை பேச்சாளர் தோரணையிலான உடல் மொழி! கிண்டல், கேலி, வெற்றுச் சவடால்கள்! எதிர்கட்சிகளின் மீதான வசைபாடல்கள்! சாத்தான் வேதம் ஓதியதைப் போல! பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூர், ஹரியானா குறித்து பதில் இல்லை! சத்தியத்தை தொலைத்த, மோடியின் சாமர்த்திய பேச்சு.. ஓர் அலசல்:
‘பாஜக அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றுவிடும்’ என்பது யாருக்கும் தெரியாததல்ல. ஆனால், ‘நாட்டு மக்களின் நம்பிக்கையை தொலைத்துவிட்டோமே’ என எந்த பிரக்ஜையும் இன்றி, பிரதமர் மோடி சபையில் சுமார் இரண்டு மணி நேரம் 13 நிமிடம் பேசியது தான் வேதனை!
மணிப்பூரில் மனிதம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது….! அமைதி சீர்குலைந்து வன்முறை தாண்டமாடிக் கொண்டுள்ளது! கிறிஸ்துவத்தை தழுவிய பழங்குடிகள் இன அழித்தொழிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெண்கள் நிர்வாண ஊர்வலமாக இழுத்து வரப்பட்டதைக் கண்டு உலகமே கொந்தளித்தது. கிறிஸ்துவ தேவாலயங்கள் நூற்றுக்கணக்கில் தகர்க்கப்பட்டுள்ளன! அது பற்றி வருத்தப்படாத, அது பற்றிய எந்த குற்றவுணர்வுமில்லாத – அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமே இல்லாதவாறு -பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுகிறார்! உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானது கூட, நினைவில் இல்லை போலும்.
அதே போன்ற மற்றொரு கலவரம் ஹரியானாவில் திட்டமிட்டு இந்துத்துவ சக்திகளால் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநில அரசே அதற்காகவே காத்திருந்தது போல மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்கள் கடைகள், வீடுகள், சொத்துக்கள் ஆகியவற்றை புல்டோசர் கொண்டு இடித்தது. இஸ்லாமியர்கள் ஹரியானாவில் வாழ அச்சப்பட்டு வெளியேறி வருகின்றனர். அரசு நிர்வாகமே இந்த அழித்தொழிப்பில் ஒரு ரவுடியைப் போல இறங்கி செயல்படுவதைக் கண்டு ஒட்டுமொத்த இந்தியாவுமே பதைபதைத்தது. நல்ல வேளையாக, ஹரியானாவின் உயர் நிதிமன்றம் தலையிட்டு இந்த அட்டுழியத்தை உடனே நிறுத்த ஆணையிட்டது. இது வெட்கமாக இல்லையா?
உங்கள் ஆட்சியில் மக்கள் சமத்துவமாக நடத்தப்படமாட்டார்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் இன்னல்பட வேண்டியது தான் என்ற செய்தியை உங்கள் ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்படுத்தி வருகிறீர்கள்… ஆனால், இவற்றைக் குறித்து சற்றும் பொருட்படுத்தாமல் அட்டகாசமாக நக்கல், நையாண்டியுடன் எதிர்கட்சிகளின் பலவீனங்களை பட்டியலிடுகிறீர்கள்!
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து வைத்து வரும் மணிப்பூர், ஹரியானா உள்ளிட்ட எந்த பிரச்சினை குறித்த பிரக்ஜையும் இல்லாமல் பிரதமர் மேடைப் பேச்சாளரைப் போல பேசுகிறார். “நாட்டின் நம்பிக்கையை மிகப் பெரிய உயரத்துக்கு நாங்கள் கொண்டு சென்றிருக்கிறோம். ஆனால், உலகின் முன் நாட்டின் மதிப்பை சீர்குலைக்க சிலர் முயல்கிறார்கள். ஆனாலும், இந்தியாவின் நம்பிக்கை உலக அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது…’’ என்கிறார்.
“எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் எப்போதும் எங்களுக்கு ராசியானது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் நோ பால்களை வீசி உள்ளனர். 2024 தேர்தலில் இதுவரை வெல்லாத இடங்களில் எல்லாம் வென்று புதிய ரெக்கார்ட் படைப்போம்..! வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அதிக இடங்களில் வெற்றி பெறும்…” என்று தேர்தல் அரசியலைத் தான் பேசுகிறார்..! முந்திய நாள் ராகுல் காந்தி வைத்த எந்த குற்றச்சாட்டுக்குமே பிரதமரிடம் பதில் இல்லை.
இந்த லட்சணத்தில் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றம் தற்போது 21 நாட்களை கடந்துள்ள நிலையில், முதல் நாள் மட்டுமே வந்துவிட்டு நாடாளுமன்றத்தின் பக்கமே தலைகாட்டாத மோடி -நாடாளுமன்றத்தைக் கண்டு இவ்வளவு அச்சப்படும் ஒரு பிரதமரை இதற்கு முன் இந்திய வரலாறே கண்டதில்லை – என்ற அளவுக்கு கடும் விமர்சனங்களை வைத்த பிறகும் கூட வராத மோடி, எதிர்கட்சிகளைப் பார்த்து கூறுகிறார்;
மூன்று நாட்களாக எதிர்க்கட்சிகளின் முன்மொழிவு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் அவையின் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும். நாட்டின் வளர்ச்சியில் எதிர்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் மோதலால் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி உள்ளன. எவற்றை எல்லாம் அரசியல் செய்யக் கூடாதோ, அதை எல்லாம் அரசியல் செய்கின்றன. எல்லா தருணங்களிலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு துரோகம் செய்கின்றன.” எனப் பிரதமர் பேசுகிறார்.
பிரதமர் அவையில் இருந்து எதிர்கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் விளக்கமோ, வருத்தமோ தெரிவித்து இருந்தால், அவை முடங்காமல் ஆரோக்கியமான விவாதங்களுடன் நடந்திருக்குமே! ஆனால், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் திட்டமிட்டு கொந்தளிப்பில் வைத்து, பல மக்கள் விரோத மசோதாக்களை விவாதத்திற்கு இடமின்றி அதிரடியாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்’ என்பது தானே உங்கள் வியூகம். அதைத் தானே நிறைவேற்றினீர்கள்!
ஆனால், அதற்கும் எதிர்கட்சிகளையே குற்றவாளி ஆக்குகிறீர்கள்! எதிர்கட்சிகளுக்கு அரசியல்தான் முன்னுரிமையாம். ஏழைகள், பழங்குடியினர், தலித்துகளின் நலன்களைப் பற்றி விவாதிக்கும் இதுபோன்ற பல மசோதக்களை விவாதிக்க, எதிர்க்கட்சிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லையாம். இங்கு அனுப்பி வைத்த பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் இழைத்துள்ளனராம்…!
இந்த ஒன்பது ஆண்டுகளாக நாடாளுமன்ற விவாதங்களை முற்றாகத் தவிர்த்து, சபைக்கு முதல் நாளும், கடைசி நாளும் மட்டுமே வந்து கொண்டிருக்கும் பிரதமர் தான் இவ்வாறு எதிர்கட்சிகளைப் பார்த்து கூறுகிறார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து நடந்தது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இந்த இரண்டு நாட்களிலாவது பிரதமர் சபைக்கு வந்திருக்கலாம். இல்லையே!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இறந்து புதைக்கப்பட்டுவிட்டதாம். அதற்கு இறுதி காரியம் தான் பெங்களூரில் நடந்ததாம்! எதிர்கட்சிகள் ஒன்றுபடுவதைக் கண்டு எவ்வளவு பதைபதைப்புடன் பாஜக நடந்து கொண்டு வருகிறது என நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். ஆனால், யாரோ எழுதி தந்த வசனங்களை காலம் கடந்து சபையில் பேசி விரதீரம் காட்டுகிறார் பிரதமர் மோடி!
Also read
பாஜக, ஆர்.எஸ்.எஸ்சை எதிர்த்தால் சிறையா..?
நாட்டு மக்கள் மீதோ, அவர்களின் துயரங்கள் குறித்தோ எந்த அக்கறையுமில்லாமல் வெளிப்பட்டு உள்ளார் பிரதமர் மோடி. அந்த வகையில் தன் வாயாலேயே தன் அகங்காரத்தையும், அறியாமையையும் பிரதமர் வெளிப்படுப்படுத்தக்க வகையில் இந்த நம்பிக்கை இல்லா தீர்மான நிகழ்வு அமைந்தது மிக நல்லதே! எதிர்கட்சிகளின் நோக்கத்தை பிரதமர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்! ஆம், நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பலத்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெறலாம். ஆனால், நாட்டு மக்கள் மதிப்பீட்டில் வெற்றி பெற உண்மையின் பலம் வேண்டுமே! அது சுத்தமாக பிரதமர் மோடியிடம் இல்லையே!
- சாவித்திரி கண்ணன்
ஆதாரம்: அறம் இணைய இதழ்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am