
செய்திகள் சிந்தனைகள்
இறுதி மூச்சு வரை இறையழைப்பில்! - வெள்ளிச் சிந்தனை
அன்னை கதீஜா(ரலி) அவர்களின் இறுதி நாள்கள் அவை..!
மரணப் படுக்கையில் கிடக்கின்றார்கள்.
இந்த நிலையில் அவரைப் பார்ப்பதற்காக அவருடைய பால்ய சிநேகிதி நீண்ட நாள்களுக்குப் பிறகு வருகின்றார்.
அன்னை கதீஜாவை செல்வச் செழிப்புமிக்கவராக, செல்வாக்கு மிக்கவராக பார்த்தவர் அவர். சொல்லப் போனால் அன்னை கதீஜா(ரலி) எந்த அளவுக்கு வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள் எனில் ஓராண்டில் அவர்கள் செய்து வந்த வணிகத்தின் மதிப்பு அவரைத் தவிர்த்த மற்ற ஒட்டுமொத்த மக்கத்து வணிகர்கள் செய்து வந்த வணிகத்தின் மதிப்புக்குச் சமமாக இருந்தது.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் ஒட்டுமொத்த மக்கா மாநகரத்தின் வணிகத்தில் பாதி அவர் வசம் இருந்தது.
ஆனால் நபிகளார்(ஸல்) சத்திய மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்கத் தொடங்கிய போது நபிகளாருக்குப் பக்கபலமாக நின்றார்கள்.
தம்முடைய செல்வத்தையெல்லாம் சத்திய மார்க்கப் பரப்புரையில் செலவிட்டார்கள்.
இந்த நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்த அந்தத் தோழி அவரை தன்னுடைய பார்வையில் ஆதரவற்றவராக, வறுமையில் உழல்பவராக கண்டார்.
தம்முடைய வருத்தத்தையும் வேதனையையும் தெரிவித்த பிறகு இந்த இஸ்லாத்தையெல்லாம் துறந்துவிடு!
நீ இறந்த பிறகு மிகப் பிரம்மாண்டமான முறையில் இறுதி ஊர்வலமும் சடங்குகளும் நல்லடக்கமும் நடப்பதற்கான ஏற்பாடுகள் அமையும் என்று வாய் விட்டுச் சொன்னார்.
இணைவைப்பிலும் இறைமறுப்பிலும் ஊறிய வார்த்தைகளை, வாழ்வின் உண்மைநிலை அறியாததால் வந்து விழுந்த எண்ணவோட்டங்களைக் கேட்டு அன்னை கதீஜா(ரலி) துடித்துப் போனார்கள்.
தன்னுடைய தோழிக்கு சத்திய மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள்.
‘செல்வம், செல்வாக்கு, சீர், சிறப்பு, வசதி, வாய்ப்பு என எல்லாவற்றையும் இழந்து நிற்கிறீரே’ என்று சொல்லப்பட்ட போது எந்தக் காலத்திலும் அழியாத சொத்து - சத்திய மார்க்கம், அருள் மார்க்கம் எனும் கருவூலம் தமக்குக் கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள்.
இந்த உலகமும் இந்த உலகத்தின் வளங்களும் இந்த உலகத்தோடு முடிந்து போய்விடும். ஆனால் சத்திய மார்க்கமோ மறுமையிலும் கரை சேர்க்கும்.
இணைவைப்பு, இறைமறுப்பு ஆகிய கசடுகளை விட்டு என்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.
ஏக இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். உலகத்தை விட்டுப் பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது.
இளமையும் அதன் அனைத்து வனப்புகளும் மங்கிக் கொண்டிருக்கின்றன. மரணத்தின் இலக்கு நெருங்கிவிட்டது. நீ மரணத்தை நினை.
அதற்குப் பிறகு வருகின்ற மறுமையைப் பற்றி அக்கறை கொள். இறைவன் மீது நம்பிக்கை கொள்’ என்கிற ரீதியில் இதமாக, நிதானமாக, மென்மையாக, கனிவாக சத்தியச் செய்தியை எடுத்துரைத்தார்கள் அன்னை கதீஜா(ரலி) அவர்கள்.
அன்னை கதீஜா(ரலி) அவர்கள் எந்த அளவுக்கு பரிவோடு, கனிவோடு, வாஞ்சையோடு இந்தக் கருத்துகளையெல்லாம் மரணப் படுக்கையில் கிடந்த அந்த இறுதி மணித்திவாலைகளில் சொன்னார்கள் எனில் அது அவருடைய தோழியின் இதயத்தை இளகச் செய்துவிட்டது.
கண்ணீர் விட்டு அழுதார் அவர். எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது எனில் அந்தத் தோழி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
டெய்ல் பீஸ்:
இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லிம் தம்முடைய ஒட்டுமொத்த வாழ்வையும் அழகானதாய், சிறப்பானதாய் அமைத்துக் கொண்டார்கள்.
இறுதி மூச்சு வரை பிறருக்கு சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். நம்முடைய நிலைமை என்ன? நாம் எங்கே நிற்கின்றோம்?
- லுத்ஃபுல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am