
செய்திகள் சிந்தனைகள்
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
நன்மைகள் செழித்தோங்குகின்ற வளமார் ரமளானின் மிக முக்கியமான பரிசு ‘துஆ’ - பிரார்த்தனைதான் என உறுதியாகச் சொல்லலாம். அர்ஷைச் சுமந்துக் கொண்டிருக்கின்ற வானவர்கள் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ரமளான் மாதத்தில் நோன்பாளிகளின் பிரார்த்தனைகளுக்கு ஆமீன் சொல்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டு விடுகின்றார்கள்.
ஆக, இறைவனிடம் மன்றாடுவதற்காக, இறைஞ்சுதல்களையெல்லாம் ஒன்று விடாமல் சமர்ப்பிப்பதற்காக இதனை விட மதிப்பான, இதனைவிட சிறப்பான, வளங்கள் நிறைந்த, ஆற்றல் வாய்ந்த, வைரங்களை விட, பவளங்கள், முத்துக்களை விட விலை மதிப்பு மிக்க தருணங்கள் வேறு என்னவாக இருக்க முடியும்?
மகத்துவம் மிக்க குர்ஆனிலும் வளமார் ரமளான் தொடர்பான சட்டங்களும் சிறப்புகளும் விவரிக்கப்படுகின்ற போது இடையில் திடீரென்று பிரார்த்தனை பற்றிய குறிப்பும் வந்துவிடுவதைப் பார்க்க முடியும்:
..............................................
மேலும் (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், ‘நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவருடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன் (என்பதைத் தெரிவித்து விடுங்கள்). எனவே அவர்கள் என்னுடைய அழைப்பை விரைந்து ஏற்றுக்கொள்ளட்டும். என் மீது நம்பிக்கை கொள்ளட்டும். அதனால் அவர்கள் நேர்வழி அடைந்திட முடியும்.’
*(அத்தியாயம் 2 அல்பகறா 186)*
ஆக, *‘ரமளானுக்கும்’* *‘பிரார்த்தனைக்கும்’* இடையில் ஆழமான, நெருக்கமான தொடர்பு இருக்கின்றது என்பதையும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற விலைமதிப்பு மிக்க தருணங்கள் இந்த மாதத்தில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் இந்த வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
வழிபாடுகளின் வசந்தக் காலம்தான் ரமளான். வழிபாடுகளின் சாரம்தான் பிரார்த்தனை என்றும் (திர்மிதி) நபிமொழியில் சொல்லப்பட்டிருக்கின்றது. இதனால்தான் வளங்கள் நிறைந்த ரமளான் மாதத்தில் அதிகமதிகமாக இறைவனிடம் மன்றாடுங்கள்; இறைஞ்சுங்கள்; பிரார்த்தியுங்கள் என்று நபிமொழிகளில் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
வளமையிலும் வறுமையிலும் எல்லா நிலைமைகளிலும் இறைவனிடம் கை ஏந்தி முறையிடுவதுதான் அடியானின் அழகிய நடத்தையாக இருக்கின்றது. மேலும் தன்னுடைய பலவீனத்துக்குப் பதிலாக ஈருலகின் அதிபதியின் பேராற்றல் மீதும், தன்னுடைய இயலாமை, போதாமை போன்றவற்றுக்குப் பதிலாக தன்னுடைய அதிபதியின் கருவூலங்கள்மீதும் அருள்வளங்கள் மீதும் தாம் அவனுடைய பார்வைகள் குவிந்திருக்கின்றன. இறைவனிடம் ஏந்துகின்ற கைகளும், இறைவனிடம் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீள்கின்ற *கல்பே முனீப்* என்கிற இதயமும்தாம் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவையாய் இருக்கின்றன.
இதனால்தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்யாமல் இருப்பது தற்பெருமைக்கும் கர்வத்துக்கும் இணையானதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
..................................
உங்கள் இறைவன் கூறுகின்றான்: ‘என்னிடம் இறைஞ்சுங்கள்! நான் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வேன். திண்ணமாக எவர்கள் தற்பெருமை கொண்டு எனக்கு வழிபட மறுக்கின்றார்களோ அவர்கள் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாகி அவசியம் நரகில் நுழைவார்கள்’
*(அத்தியாயம் 40 அல்முஃமின் 60)*
அதாவது இறைவனிடம் மன்றாடாமல் இருந்துவிடுவதும், இறைஞ்சாமல் அலட்சியமாக இருந்து விடுவதும் தற்பெருமைக்கான அடையாளங்களில் ஒன்றாகும். இதே போன்ற திர்மிதியில் பதிவான நபிமொழி ஒன்றில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது:
‘இறைவனிடம் முறையிடாத, பிரார்த்திக்காத அடியான் மீது இறைவன் பெருங்கோபம் கொள்கின்றான்’.
அபூதாவூத் நூலில் பதிவான நபிமொழியின் விவரம் வருமாறு: ‘ஸல்மான் (ரலி) அறிவிக்கின்றார்: ‘நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘உங்களின் அதிபதி நாணத்தின் வடிவமாகவும் மானமும் கண்ணியமும் மாண்பும் நிறைந்தவனும் ஆவான். அடியான் இறைஞ்சியவாறு கைகளை ஏந்தி இருக்க, அவனை வெறுங் கையோடு திருப்பி அனுப்புவதற்கு இறைவன் நாணப்படுகின்றான்.’
அடியானை வெறுங்கையோடு திருப்பி அனுப்ப வெட்கப்படுவதோடு, அதற்கும் மேலாக அவனே அடியார்களை தன்னிடம் முறையிடுமாறும் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்குமாறும் அழைப்பு விடுக்கின்றான்.
இந்த அழைப்பை நாம் குர்ஆனில் பல இடங்களில் பார்க்க முடியும். வாருங்கள். பாவங்களுக்கு மன்னிப்பு கோருங்கள். என்னிடம் பாவமன்னிப்புக் கோரி விண்ணப்பியுங்கள். மேலும் தம்மைப் படைத்தவனின் பக்கம் திரும்புவதும் முறையிடுவதும், எல்லா நிலைமைகளிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவனிடம் மீள்வதும், சிறிய, பெரிய தேவைகள் அனைத்தையும் அவனிடமே கோருவதும், நிற்கும் போதும், அமரும்போதும், படுத்திருக்கும் போதும் எல்லாத் தருணங்களிலும் அவனையே அழைப்பதும்தாம் அடியானுக்கு அழகு. பிரார்த்திப்பதன் மூலமாக அதிபதியுடன் ஏற்படுகின்ற தொடர்புதான் வழிபாட்டின் உண்மையான உயிரோட்டம் ஆகும். எல்லாவற்றுடனும் தொடர்பைத் துண்டித்தவாறு, மற்ற அனைத்தையும் முற்றாக ஒதுக்கிவிட்டு அதிபதியின் சபையோடு எல்லாவற்றையும் பிணைத்துக் கொள்வதும்தாம் வழிபாட்டின் உயிரோட்டம் ஆகும். உண்மையான வழித்துணைச் சாதனும் அதுதான்.
இறைவனிடம் கை ஏந்தி மன்றாடும்படி அடியார்களுக்கு விடுக்கப்படுகின்ற அறிவுறுத்தல்களைக் கூறுகின்ற குர்ஆன், இறைவனிடம் இறைஞ்சும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்குமுறைகளையும் நிபந்தனைகளையும் விவரித்துள்ளது:
............ ..........................
மேலும், தீனை (நெறியை) அவனுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனை அழையுங்கள்.
*(அத்தியாயம் 7 அல்அஃராஃப் 29)*
வளம் கொழிக்கும் ரமளானில் நோன்பு நோற்கின்ற போதும், அதன் இறுதி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் வழிபடுகின்ற போதும் கூட ஈமானோடும் (இறைநம்பிக்கையோடும்) இஹ்திசாபோடும் (சுயமதிப்பீடு செய்தவாறும்) நிறைவேற்றும்படித்தான் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே ரமளானில் இறைவனுக்கு முன்னால் கைகளை ஏந்தி இறைஞ்சும் போதெல்லாம் குர்ஆனின் ‘தீனை அவனுக்கு மட்டுமே உரித்தாக்குகின்ற’ நிபந்தனையை மனத்தில் இருத்தியவாறு, நினைவுகூர்ந்தவாறு பிரார்த்திப்பது அவசியமாகும்.
நாம் உண்மையிலேயே தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே ‘உரித்தாக்கிக்’ கொண்டிருக்கின்றோமா? அல்லது மற்ற சித்தாந்தங்களும் மன இச்சைகளும் அதில் கலந்துவிட்டிருக்கின்றனவா?
மேலும் ‘மார்க்கத்தை’ நாம் எப்படி டீல் செய்கின்றோம்? சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கின்ற இஸ்லாத்துக்கு அப்பாற்பட்ட சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் கட்டுப்பட்டவாறு மார்க்கத்தை நம்முடைய ஆளுமையின் ‘இணைப்பாக’ ஆக்கிக் கொண்டிருக்கின்றோமா, என்ன? இ
லாபம் நட்டம் பற்றிய நம்முடைய அளவுகோல்கள் மார்க்கத்துக்கு அப்பாற்பட்ட மனிதர்களின் அளவுகோல்களாக தாம் இருக்கின்றனவா? இல்லை அவற்றை மார்க்கத்தின் மாண்புகளோடு இயைந்து போவதாக ஆக்கியிருக்கின்றோமா?
நம்முடைய மனத்தின் நிலை என்ன? சலுகைகளின் இருப்பிடமாக அது மாறிவிட்டிருக்கின்றதா? ஷரீஅத் தடை விதித்திருக்கின்றவற்றில் பெரும்பாலானவற்றை - ‘இஸ்திரார் நிலைமையில்’ இருப்பவர்களாக நம்மை நாமே நினைத்துக்கொண்டு - ஆகுமானவையாய் ஆக்கிக் கொண்டிருக்கின்றோமா?
இதுவும் கூடும் அதுவும் கூடும் என்று சலுகைகளை இங்கிருந்தும் அங்கிருந்தும் இழுத்துப் பிடித்து வளைத்து எல்லாவற்றையும் ஆகுமானதாய் ஆக்கிக் கொண்டிருக்கின்றோமா? மார்க்கம் தொடர்பானவற்றில் நம்முடைய கூட்டு நடத்தை எந்தக் கோலத்தில் இருக்கின்றது?
வழிபாடுகள் மீதே எல்லாக் கவனத்தையும் குவித்துவிட்டு விவகாரங்கள், கொடுக்கல் வாங்கல்கள், சமூக நடைமுறைகள் போன்ற அனைத்தையும் அல்லாஹ் அல்லாதவற்றிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களின் வழிகாட்டுதல்களின் அவற்றை அமைத்துக் கொண்டிருக்கின்றோமா?
நினைவில் வைத்திருங்கள். நம்முடைய அடிபணிதலும் கீழ்ப்படிதலும் முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொள்கின்ற நன்னாளில்தான் நம்முடைய பிரார்த்தனைகளும் வலிமை பெறும். பலிக்கும். நிறைவேறும்.
பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான மிக மிக முக்கியமான நிபந்தனை *‘ஹலாலான சம்பாத்தியமும்’* தான். அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்: நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘அல்லாஹ் தன்னுடைய இறைநம்பிக்கை கொண்ட அடியார்களைப் பார்த்துக் கூறினான்: ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நான் அருளிய வாழ்வாதாரங்களில் ஹலாலான, தூய்மையான பொருள்களை உண்ணுங்கள்.’
அதன் பிறகு நபிகளார்(ஸல்) ஒரு மனிதரைக் குறித்து - ஏதோவொரு புனிதமான இடத்திற்கு நீண்ட தொலைவு பயணம் செய்து வந்தடைந்த மனிதரைக் குறித்து - குறிப்பிடுகின்றார்கள். அந்த மனிதர் மிகுந்த கவலையும் களைப்பும் நிறைந்தும் தூசு படிந்தும் காணப்படுகின்றார். ஆனால் அவர் எந்த நிலைமையில் இருக்கின்றார் எனில், அவருடைய உணவு ஹராமானதாக, அவர் அணிந்துள்ள ஆடை ஹராமானதாக, அவருடைய உடல் ஹராமான வருவாயில் தின்று வளர்ந்ததாக இருக்கின்றது. ஆக, அந்த மனிதரின் பிரார்த்தனை ஏன்தான் எப்படித் தான் ஏற்றுக் கொள்ளப்படும்?’ *(திர்மிதி)*
நம்மில் பலரும் நம்முடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படாத போது மிகுந்த நிராசைக்குள்ளாகின்றோம். ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட நபிமொழி தருகின்ற செய்தியைக் கருத்தில் கொள்கின்ற போது நம்முடைய பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் போவதற்கான காரணம் தெளிவாகின்றது. நாம் வாழ்கின்ற சமூகத்தில் ஊழலும் இலஞ்சமும் முறைகேளுகளும் உச்சத்தில் இருக்கின்றபோது, ஹலாலானா வருவாய்க்கும் ஹராமான வருவாய்க்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவிட்டிருக்கின்ற போது, பொய்யும் மோசடியும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்ற போது, வட்டியின் அடிப்படையிலானதாக பொருளாதாரக் கட்டமைப்பு இருக்கின்ற போது அல்லாஹ் நம்முடைய பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதில்லையே ஏன் என்று புலம்புவது எந்த வகையில் சரியாகும்?
அதனையும் தாண்டி உண்மை நிலை என்னவெனில், இத்துணை கரும் புள்ளிகளும் கேவலமான நடத்தையும் ஒரு பக்கம் இருந்தாலும் அவன் நம்முடைய பிரார்த்தனைகளுக்காக தம்முடைய கதவை அடைத்துவிட்டிருக்க வில்லை. பாவ மன்னிப்புக் கோரி, அவன் பக்கம் மீள்வதை எதிர்பார்த்தவனாகவே அவன் காத்துக் கொண்டிருக்கின்றான்.
பிரார்த்தனை செய்கின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்பாக குர்ஆன் பின்வருமாறு அறிவிக்கின்றது:
..........................................
உங்கள் அதிபதியிடம் பணிந்தும் அழுது அரற்றியும் நீங்கள் இறைஞ்சுங்கள்.
*(அத்தியாயம் 7 அல்அஃராஃப் 56)*
அதாவது அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்ற போது சொற்களில் மட்டுமே பணிவும் அடக்கமும் இயலாமையும் பலவீனம் பற்றிய தெளிவும் தென்படக் கூடாது. அதற்கும் மேலாக அல்லாஹ்விடத்தில் முறையிடுகின்ற போது தம்முடைய பலவீனம், தாழ்ந்த நிலை, அடிபணிந்த நிலை, நாதியற்ற நிலை ஆகியவற்றைப் பற்றிய உயிரோட்டமான உணர்வோடு பணிவோடும் நடுநடுங்குகின்ற தொனியிலும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.
மேலும், அச்சமும் எதிர்பார்ப்பும் இரண்டும் கலந்த நிலையில் அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும்.
...................................................
மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்.
*(அத்தியாயம் 7 அல்அஃராஃப் 56)*
இன்னும் சொல்லப் போனால் அச்சத்துக்கும் ஆசைக்கும் நடுவில் இருத்தல் தான் இறைநம்பிக்கையாளனை சமநிலை நிறைந்த பாதையில் நிலைத்திருக்கச் செய்கின்றது. வெறுமனே ஆசையும் எதிர்பார்ப்பும் மட்டுமே கொண்டிருத்தல் மனிதனை பிடிவாதக்காரனாக பிரார்த்திக்க வேண்டிய தேவையில்லாதவனாக ஆக்கிவிடுகின்றது. அதன் பிறகு எந்தவிதமான அச்சமும் இல்லாமல் இறை வரம்புகளை மீறியும் மிதித்தும் நடந்துகொள்ளத் தொடங்கிவிடுகின்றான். அதே சமயம் ‘அச்சமோ’ மனிதனை இதயம் நொறுங்கச் செய்துவிடுகின்றது. உடைந்து போன உள்ளத்துடன் அவன் சோகத்துக்கும் துக்கத்துக்கும் ஆளாகி தவிக்கின்றான். மேலும் எந்தவொரு நல்லறத்திலும் ஈடுபடுகின்ற தீரத்தையும் மனத்திடத்தையும் அவன் இழந்துவிடுகின்றான். மேலும் அவனுடைய வாழ்வையே நிராசையில் தள்ளிவிடுகின்றது.
இதனால்தான் அச்சம் ஒருபக்கம் தீமையிலிருந்து தடுக்கிறது எனில் ஆவலும் எதிர்பார்ப்பும் மறுபக்கம் நல்லறங்களில் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்க ஊக்குவிக்கின்றன. இப்படி ஒரு பக்கம் அச்சத்துடனும் மறு பக்கம் ஆசையோடும் நடத்தையைப் பண்படுத்திக் கொள்வதுதான் இறை நம்பிக்கையாளனுக்கு அழகு.
இன்னும் சொல்லப் போனால் இந்தப் பண்பட்ட நடத்தைக்குப் பெயர்தான் இறையச்சமும். ரமளானில் நோன்பு நோற்பதற்கான நோக்கமும் இப்படிப்பட்ட பண்பட்ட நடத்தையை - இறையச்சத்தை உருவாக்கிக் கொள்வதுதான் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அத்தியாயம் அஸ்ஸஜ்தாவில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது:
.......................
மேலும் அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் உயர்ந்துவிடுகின்றன. அச்சத்துடனும் ஆவலுடனும் தங்கள் இறைவனைப் பிரார்த்திக்கின்றார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து செலவும் செய்கின்றார்கள்.
*(அத்தியாயம் 32 அஸ்ஸஜ்தா 16)*
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் அல்லாஹ்வின் அடியார்களுக்காவும், இறைமார்க்கத்தை நிலைநாட்டுவதற்கான பாதையிலும் அல்லாஹ்வின் அருள்வளங்களைச் செலவிடுவது உண்மையில் நம்முடைய பிரார்த்தனைகளின் இக்லாசை வெளிப்படுத்துகின்ற அறச்செயல்களாகும். குர்ஆனின் இந்த வசனத்தின் ஒளியில் அவர்களின் இறையச்சம் அவர்களை தூக்கத்தைத் துறப்பதற்கும் படுக்கைகளை விட்டு எழுந்துவிடுவதற்கும், தம்முடைய அதிபதியிடம் இறைஞ்சுவதிலும் அழுது அரற்றி பிரார்த்திப்பதிலும் ஈடுபடுத்துகின்றது எனில், அவர்கள் இறைவனின் உவப்பைப் பெறுகின்ற முயற்சியில் அவனுடைய படைப்புகளுடனான தொடர்பை அவர்கள் அறுத்து விடுவதுமில்லை.
அதற்கு மாறாக அந்தப் படைப்புகளின் நலத்தோடும் வெற்றியோடும்தாம் அவர்களின் இறையச்சம் முழுமை அடைவதற்கான சாத்தியம் பிணைந்துள்ளது. இது அந்தப் படைப்புகளின் நலத்துக்காக, வெற்றிக்காக ஓடியாடி உழைப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்துகின்ற உந்து சக்தியாகவும் மாறிவிடுகின்றது. எனவே, நம்முடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பம் எனில் அதற்காக வேண்டி நம்முடைய பணப்பையையும் சுவனத்தை அடைவதற்கான வழிவகையாக ஆக்க வேண்டியிருக்கும்.
ஜக்கரியா(அலை) அவர்கள் இறைவனிடம் மன்றாடிய நிகழ்வை குர்ஆன் பின்வரும் சொற்களில் விவரிக்கின்றது:
...........................
‘அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்த போது..’
*(அத்தியாயம் 19 மர்யம் 3)*
‘மெதுவாக’ என்கிற சொல்லிலிருந்து யாரை நாம் அழைக்கின்றோமோ அவன் நமக்கு மிக மிக அருகில் இருக்கின்றான் என எளிதாகக் கணித்துக் கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் அவன் மிக மிக அருகில் இருப்பதோடு நம் பக்கம் கவனம் செலுத்துகின்றவனாக, நம்முடைய முறையீட்டைக் காது கொடுத்துக் கேட்பவனாக இருக்கின்றான். அவன் ஒவ்வொரு நொடியும் நம்முடைய பிரார்த்தனையைக் கேட்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றான்.
நமக்கு வழங்குவதற்கும் ஆயத்தமாக இருக்கின்றான். நாம் எப்போது அவனிடம் மீளப் போகின்றோம், அவன் பக்கம் திரும்பப் போகின்றோம், அவனிடம் இருகரம் ஏந்தி இறைஞ்சப் போகின்றோம் என அவன் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
பாவிகளான தன்னுடைய அடியார்களை தன்னுடைய கருணைப் போர்வைக்குள் அரவணைத்துக் கொள்வதற்கு அவன் பேராவலோடு இருக்கின்றான். இந்த நிலையில் அந்த அருள்வளங்களின் பக்கம் திரும்புவதற்கும் பாவமன்னிப்பு கோருவதற்கும் வளமார் ரமளான் மாதம் பொன்னான வாய்ப்பாக இருக்கின்றது.
நள்ளிரவுக்குப் பிறகு தூக்கத்தை உதறித் தள்ளி படுக்கையை விட்டு எழுகின்ற வேளை அவனிடம் - எல்லாவற்றையும் நல்ல முறையில் கேட்பவனும் பார்ப்பவனுமாய் இருக்கின்ற அவனிடம் - பிரார்த்திப்பதற்கும் முறையிடுவதற்கும் மிகச் சிறப்பான நேரம் ஆகும். நாம் அவனுடைய நெருக்கத்தை உணர வேண்டும் என்றே அவன் விரும்புகின்றான்.
நம்முடைய இதயத்து துடிப்பை நம்மால் எளிதாக உணர முடிவதைப் போன்று நமக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கின்ற நண்பன் பேசுவதைத் தெளிவாகக் கேட்க முடிவதைப் போன்று அவனும் நமக்கு மிக அருகில் இருக்கின்றான் என்பதை நாம் உணர வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அவன் நம்முடைய பிடரி நரம்பை விடவும் நெருக்கமாக இருக்கின்றான். ‘என் அடியான் என்னை எப்போது அழைப்பான்?’ என்று அவன் காத்துக்கொண்டிருக்கின்றான்.
இமாம் முஸ்லிம் அவர்களின் அறிவிப்பு ஒன்றில் பதிவாகியிருக்கின்றது: நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘உறவைத் துண்டிக்குமாறு கோருகின்ற முறையீடு அல்லது பாவத்தைச் செய்வதற்கான பிரார்த்தனை போன்றவற்றைத் தவிர, உடனுக்குடன் பயன் கிடைத்துவிட வேண்டும் என்று அவசரப்படாத வரை அடியானின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.’
உறவைத் துண்டிப்பது என்பது இறைவனின் பெருங் கோபத்துக்கு வித்திடுகின்ற மாபாதகச் செயலாகும். எனவே ரமளான் மாதத்தில் நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் நமக்கு இருக்குமேயானால் ரமளானின் அருள்வளம் பொருந்திய இந்த நேரங்களில் நம்மை நாமே ஆய்ந்து பார்க்க வேண்டும்.
நம்முடைய உறவுகளுடன் நம்முடைய உறவும் தொடர்பும் எந்த நிலைமையில் இருக்கின்றன? அவர்களுக்கு ஆற்ற வேண்டிய உரிமைகளைக் கருத்தில் கொள்கின்றோமா? இந்த ஆண்டு அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதில் எங்கெங்கு என்னென்ன பிழைகளைச் செய்திருக்கின்றோம்? போன்ற கோணங்களில் நம்மை நாமே சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் இரத்தபந்த உறவுகளைத் தக்க வைப்பதிலும் பிணைத்து வைப்பதிலும் நாம் எந்த அளவுக்கு நம் மீதான பொறுப்புகளை நிறைவேற்றி இருக்கின்றோம்? தஜ்ஜாலிய குழப்பங்கள் தலைவிரித்தாடுகின்ற இன்றையக் காலகட்டத்தில் நம்முடைய குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்வதோடு நின்று விடாமல் நம்முடைய கணவன்மார்களின் சகோதரிகளின், சகோதரர்களின் பிள்ளைகளின் பண்புப் பயிற்சியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கும் அந்த உரிமை உண்டு.
ஒரு முறை நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘எவர் தம்முடைய வாழ்வாதாரத்திலும் அருள்வளத்திலும் பரக்கத்தை - அபிவிருத்தியை விரும்புகின்றாரோ அவர் இரத்த பந்த உறவுகளை பிணைத்து வைத்திருக்கட்டும்’. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவருக்கு எந்த வகையிலும் தம்முடைய பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்ற தகுதி அறவே இல்லை.
*அல்லாமா கர்தூபி(ரஹ்)* தம்முடைய விரிவுரையில் பின்வரும் அறிவிப்பைப் பதிவு செய்திருக்கின்றார்: ‘நபிகளார்(ஸல்) கூறினார்கள்: மூன்று பேருடைய பிரார்த்தனைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஹராமான பொருளைத் தின்பவர். புறம் பேசுபவர். தம்முடைய முஸ்லிம் சகோதரரைப் பற்றிய குரோதத்தையும் பொறாமையையும் தம்முடைய இதயத்தில் தேக்கி வைத்திருப்பவர்’.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் இறைவனிடம் மன்றாடுவதற்காக இரு கரம் ஏந்துவதற்கு முன்பாக நம்மை நாமே ஆய்வு செய்ய வேண்டும். மனத்தில் இருக்கக்கூடிய பொறாமை, காழ்ப்பு உணர்வு, குரோதம் போன்றவற்றை அப்புறப்படுத்துவதும அவசிமாகும். எந்த இதயத்தில் இறைவனின் பிற அடியார்கள் தொடர்பாக விரும்பத்தகாத உணர்வுகள் மண்டிக் கிடக்கின்றனவோ அந்த இதயம் ஒருபோதும் *கல்பே சலீம் - தூயமையான இதயம்* என்கிற உயர்ந்த தகுதிநிலையை அடையாது. ஆக உங்களின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் நீங்கள் தூய்மையான இதயத்தைப் பெற்றிருப்பது கட்டாயமாகும்.
அதுமட்டுமல்ல, இதயம் தூய்மையாக இருப்பதோடு நாவும்கூட எந்தவொரு பாவத்துக்கும் கருவியாய் இருந்துவிடக் கூடாது. புறம் பேசுவதுகூட பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மிகப் பெரும் முட்டுக்கட்டையாய் அமைந்துவிடும்.
*இப்ராஹீம் பின் அத்ஹம்(ரஹ்)* அவர்களின் கீழே தரப்படுகின்ற கூற்றின் ஒளியில் நாம் நம்முடைய பிரார்த்தனைகளின் உண்மைநிலையை எந்தவிதமான தயவுதாட்சண்யமுமின்றி ஆய்வு செய்து பார்க்க முடியும்.
அவர் கூறுகின்றார்: ‘நீங்கள் உங்களின் இறைவனைப் புரிந்துகொண்டீர்கள். அதன் பிறகும் அவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றவில்லை எனில்,
நீங்கள் இறைவனின் வேதத்தை ஓதினீர்கள். ஆனால் அதன் படி செயல்படவில்லை எனில்,
இப்லீசுக்கு எனக்கும் ஆகாது என்று அவனுடனான பகைமையைப் பறை சாற்றிக் கொண்டீர்கள். என்றாலும் அவனுடனான நட்பை நிலைநிறுத்திக் கொண்டீர்கள் எனில்,
நபிகளார்(ஸல்) மீது பேரன்பு கொண்டிருப்பதாக உரத்துச் சொன்னீர்கள். என்றாலும் நபிகளாரின் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை எனில்,
சுவனத்தை அடைவதுதான் உங்களின் விருப்பமாக இருந்தது என்றாலும் அதற்காக எந்தவொரு நல்லறத்தையும் மேற்கொள்ளவில்லை எனில்,
நரகத்தை நினைத்துப் பார்த்து பயந்து நடுங்கினீர்கள். என்றாலும் பாவங்களைச் செய்வதிலிருந்து விலகி நிற்கவில்லை எனில்,
மரணம் ஒருநாள் கண்டிப்பாக வந்தே தீரும் என்று உணர்ந்தே இருந்தீர்கள். என்றாலும் அதற்காக எந்த ஆயத்தமும் செய்யவில்லை எனில்,
மக்களின் குற்றங்குறைகளைக் கணக்கிட்டுக் கொண்டே இருந்தீர்கள். ஆனால் உங்களின் சொந்த குற்றங்குறைகள் மீது உங்களின் பார்வை படவில்லை எனில்,
இறைவன் அருளிய அருள்வளங்களையும் வாழ்வாதாரங்களையும் தின்றுக் கொண்டே இருந்தீர்கள். என்றாலும் அவனுக்கு நன்றி செலுத்தவில்லை எனில்,
சடலங்களை அடக்கம் செய்தீர்கள். ஆனால் படிப்பினை பெறவில்லை எனில்,
உங்களின் பிரார்த்தனைகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கின்றீர்கள்?
மகத்துவம் மிக்க குர்ஆன் நமக்கு ஏகப்பட்ட பிரார்த்தனைகளைக் கற்றுத் தருகின்றது. இறைத்தூதர்கள் செய்த பிரார்த்தனைகள் பற்றிய விவரங்களையும் குர்ஆனில் பார்க்க முடிகின்றது. அத்தியாயம் அல்ஃபாத்திஹாவே ஓர் அழகிய பிரார்த்தனைதான்.
நபிகளாரின் அழகிய பிரார்த்தனைகள் - நபிகளார்(ஸல்) வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செய்த இறைஞ்சுதல்கள் - அல்லாஹ்வுடனான அவர்களின் தொடர்பையும் உறவையும் வெளிப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு அழகிய பிரார்த்தனையில் பின்வரும் வாசகங்கள் இருக்கின்றன.
اَللّٰھُمَّ اجْعَلْ حُبَّکَ اَحَبَّ الْاَشْیَائِ اِلَیَّ وَاجْعَلْ خَشْیَتَکَ اَخْوَفَ الْاَشْیَائِ عِنْدِیْ وَاقْطَعْ عَنِّیْ حَاجَاتِ الدُّنْیَا بِالشَّوْقِ اِلٰی لِقَائِکَ وَاِذَا اَقْرَرْتَ اَعْیُنَ اَھْلِ الدُّنْیَا مِنْ دُنْیَاھُمْ فَاَقْرِرْ عَیْنِیْ بِعِبَادَتِکَ
இறைவனே! உன் மீதான அன்பை மற்ற அனைத்து பொருள்களின் மீதான அன்பைக் காட்டிலும் மிக அதிகமான அன்புநிறைந்ததாய் ஆக்கிவிடுவாயாக. மேலும் உன்னைப் பற்றிய அச்சத்தை மற்ற அனைத்து பொருள்களின் மீதான அச்சத்தைக் காட்டிலும் மிக அதிகமான அச்சம் நிறைந்ததாய் ஆக்கிவிடுவாயாக. மேலும் உன்னைச் சந்திப்பதற்கான பேரார்வத்தை - எப்படிப்பட்ட ஆர்வத்தை எனில் உலகத்தின் இல்லாமைகள் அனைத்தையும் போக்கிவிடக் கூடிய ஆர்வத்தை - தந்தருள்வாயாக. மேலும் உலகத்தாருக்கான இன்பத்தை உலகத்தில் வைத்திருக்கின்றாய். என்னுடைய இன்பத்தை என்னுடைய வழிபாடுகளில் வைத்துவிடுவாயாக.
அன்பு நபிகளாரின் மற்றுமோர் அன்பான பிரார்த்தனையின் வாசகங்கள் பின்வருமாறு:
رَبِّ اجْعَلْنِیْ لَکَ ذَکَّارًا لَکَ شَکَّارًا لَکَ رَھَّابًا لَکَ مِطْوَاعًا لَکَ مُطِیْعًا اِلَیْکَ مُخْبِتًا اِلَیْکَ اَوَّاھًا مُّنِیْبًا
என்னுடைய அதிபதியே! உன்னை அதிகமதிகமாக நினைவுகூர்பவனாக, உன்னை அதிகமதிகமாக நன்றி செலுத்துபவனாக, உன்னை அதிகமதிகமாக அஞ்சுபவனாக, அதிகமதிகமாக உனக்குக் கீழ்ப்படிந்து நடப்பவனாக, உன்னுடைய கட்டளைகளை ஏற்று நடப்பவனாக, உனக்கு முன்னால் சிரம் பணிந்து இருப்பவனாக, அழுது அரற்றுபவனாக, உன்னிடமே மீண்டும் மீண்டும் திரும்பி வருபவனாக என்னை ஆக்கிவிடுவாயாக.
நபிகளாரின் இந்த அழகிய பிரார்த்தனைகளின் வாசகங்களை உங்களின் நாவில் கொண்டு வருகின்ற போது இன்னொன்றையும் நினைவில் வைத்திருங்கள். நபிகளார்(ஸல்) இந்த இறைஞ்சுதல்களை பத்ரு பள்ளத் தாக்குகளில், உஹது மலைகளில், தாயிஃப் நகரத்து கடைவீதிகளில் கல்மழைக்கு நடுவில், ஷீபே அபூதாலிப்பில் சமூக புறக்கணிப்புக்கு ஆளான காலகட்டத்தில், போர் வாள்களின் நிழலில் இறைவனிடம் மன்றாடினார்கள்.இந்தப் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரங்கள் நம் கண் முன்னால் இருக்கின்றன. நாம் இந்த வாசகங்களைக் கொண்டு இறைவனிடம் மன்றாடுகின்ற போது சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான போராட்டத்தில் நம்முடைய பங்களிப்பும் பங்கேற்பும் எந்த நிலைமையில் இருக்கின்றன என்பதை மனத்தில் இருத்தியவாறு பிரார்த்திக்க வேண்டும்.
- சகோதரி அஃப்ஷான் நவீத்
தொடர்புடைய செய்திகள்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am
சிலர் கரத்தால் உதவுகிறார்கள்; இன்னும் சிலர் கருத்தால் உதவுகிறார்கள் - வெள்ளிச் சிந்தனை.
February 7, 2025, 7:57 am
உச்சம் தொட்டவர்கள் வீழ்ச்சி காண்பர் - வெள்ளிச் சிந்தனை
January 31, 2025, 8:19 am
வாள் எடுத்து போர் புரிவது மட்டும்தான் இறைப் பாதையில் போராடுவதாகுமா?
January 24, 2025, 7:22 am
இளைத்தல் இகழ்ச்சி - வெள்ளிச் சிந்தனை
January 10, 2025, 8:40 am