நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இணக்கத்தின் இணைப்புக்கண்ணி – சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்

சிரமாறுடையான்

செய்குத்தம்பிப் பாவலர்  எழுதிய பாடல் ஒன்றின் தொடக்கமாக அமைந்த சொல் இது.

ஆறு தலைகளைக் கொண்ட சுப்பிரமணியன், மாறுபட்ட தலையினைக் கொண்ட விநாயகன், தலையில் கங்கை ஆற்றினைக் கொண்ட சிவபெருமான், முன்னும் பின்னுமாகத் தலைகளைக் கொண்டிருக்கும் பிரம்மன், ஆற்றில் தலையினை வைத்திருக்கும் திருமால், தலையாய வழிகாட்டும் அல்லாஹ் என்னும்  ஒன்றுக்கு மேற்பட்ட புரிதலை தன்னுள் கொண்டிருக்கிறது ‘சிரமாறுடையான்’ என்னும் சொல்.

பாவலர் என்னும்  மகாமனிதரின் தமிழ்ப் புலமையின் வெளிப் பாடாக மட்டும் ‘சிரமாறுடையான்’ என்னும் சொல் நின்றுவிட வில்லை. அதற்கப்பாலும் அது பயணிக்கிறது.

பதினாறு, பதினேழு நூற்றாண்டுகள் தொடங்கி தமிழில் உருவான தமிழ் அடையாளத்தை முன்னிறுத்திய விசாலப்பட்ட இரண்டாம் தமிழ் எழுச்சியின் கொடை ‘சிரமாறுடையான்’

“வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கில்
விளங்கும் பரம் பொருளே ...”
என்னும் வள்ளலார் மரபின் தொடர்ச்சி இது.

“சருவகுருவாய் சருவ சமய வடிவாய் நின்று
உறுவருனைத் தெரிசிப்பவர்க்கு உறுந்துணை செய்வோனே”
என்று பாடும் தக்கலை பீர்முஹம்மது அப்பாவின் மரபு இது .

தமிழ் என்னும் அடையாளத்தின் வழியாக மதங்கள் குறித்த தன்னுடைய பார்வையை விசாலமாக்கிக் கொண்டவர் செய்குத் தம்பிப் பாவலர்.

பதினாறாம்  நூற்றாண்டு தொட்டு தமிழ்மரபு சார்ந்து உருவான தமிழ் இஸ்லாமிய நல்லிணக்க வாழ்வின் இருபதாம் நூற்றண்டு முகவரி செய்குத்தம்பிப் பாவலர்.

இந்த மரபு முழுவதும் இதுபோன்ற பண்பாட்டுக் கூறுகளை காணமுடியும் .

உமறுப்புலவர் எழுதிய  நபி முஹம்மது அவர்களின் வரலாறு தமிழின் ஐந்திணை மரபில் இப்படிதான் சீறாப்புராணம் என்னும் காப்பியமாக உருவெடுத்தது.

அவரவர் நம்பிக்கை, அவரவவர் வழிபாடு, அவரவர் கடவுள் என்று எல்லைகள் குறுக்கப்பட்ட ஒரு வாழ்வியல் சூழலில் நின்று கொண்டு இந்த மரபுகளை , அவற்றைப் பேணிய முன்னோர்களை வியப்புடன் நோக்குகிறோம்.

தன் கடவுளைத் தவிர இன்னொரு கடவுளை பேசுவதும், அது குறித்து எழுதுவதும் தவறாகவும், உள்நோக்கம் கொண்டும் அணுகப் படும் காலத்தில் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் போன்றவர்கள் தன்னில் காலூன்றி நின்றுகொண்டு தான் அல்லாத எல்லாவற்றுட னும் இணக்கமான ஓர் அணுகுமுறையைக் கைகொண்டிருக்கிறார் என்பது முக்கியமானது .

தமிழகத்தில் முஸ்லிம் சமூகமும் , பொதுச்சமூகமும் பாவலரிடம் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய மரபு இது. குறிப்பாக தமிழகத்து முஸ்லிம்கள் .

“சிரமாறுடையான் செழுமா வடியைத்
திரமா நினைவார் சிரமே பணிவார்
பரமா தரவா பருகாருருகார்
வரமா தவமே மலிவார் பொலிவார்”

சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் பிறந்தநாள் இன்று.

- தக்கலை ஹாமிம் முஸ்தஃபா

தொடர்புடைய செய்திகள்

+ - reset