நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

என்.எல்.சி நிறுவனம் விளைநிலங்களில் கால்வாய் அமைத்தது சட்டவிரோதம்: பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா

சென்னை:
 
கடலூர் மாவட்டம் நெய்வேலியில்  சுரங்கங்களை அமைத்துச் செயல்படும் ஒன்றிய அரசின் என்எல்சி நிறுவனம், நிலக்கரிச் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக  மேலும் 25,000 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன்  இயங்கி வருகின்றது. 

தங்கள் மாவட்டத்தின் வளமான பூமியை மயானமாக்கும் இந்தத் திட்டத்திற்கு அந்தப் பகுதி மக்கள், விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
 
சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள வளையமாதேவி  கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்பயிர்கள் உள்ள விளைநிலங்களில் சுமார் 35 க்கும்  மேற்பட்ட இராட்சச இயந்திரத்தை வைத்து நாசம் செய்து கால்வாய் வெட்டும்  பணியை என்எல்சி நிறுவனம் செய்துள்ளது. 

காவல்துறையின் ஒத்துழைப்புடன் என்எல்சி நிறுவனம் இந்த நாசகரச் செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு நாசம் செய்யப்பட்ட விவசாய விளைநிலங்களுக்கு இழப்பீடு அளிக்கப்பட்டு விட்டது என்ற மாநில அரசின் விளக்கம் சரியானது அல்ல.
 
கால்வாய் தோண்டப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டை அரசு 2008-09 ஆம் ஆண்டுகளில் மக்களின் விருப்பத்தை மீறி கொடுத்திருந்தால் கூட  அந்நிலங்களை அரசு முறைப்படி கையகப்படுத்தவில்லை.

வாதத்திற்காக கையகப்படுத்தப்பட்ட உத்தேசிக்கப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு அளிக்கப்பட்டிருந்தாலும் கூட 10ஆண்டுகளுக்கு மேல் அந்த நிலங்களை அரசு தனது அனுபவத்தில் எடுத்துக் கொள்ளாத நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் காவல்துறையின் உதவியுடன் அறுவடைக்குத் தயாராகிக் கொண்டிருந்த நெற்பயிர்களை ராட்ச இயந்திரங்களை வைத்து அழித்தது சட்ட விரோதச்  செயலாகும்.
 
இந்தப்  பின்னணியில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மரு. அன்புமணி ராம்தாஸ் அவர்கள் தலைமையில் நேற்று நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப்போராட்டத்தின் போது நடைபெற்ற காவல்துறையின் தடியடியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக காவல்துறையின் ஒத்துழைப்புடன் செய்த அநீதியான நடவடிக்கைக்கு எதிரான மக்களின் சினத்தின் வெளிப்பாடாகவே நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை அமைந்துள்ளது.
 
கடலூர் மாவட்டத்தின் வேளாண்மையை  மொத்தமாக அழிக்க என்எல்சி நிறுவனம் துடித்து கொண்டிருக்கிறது. விரைவில் தனியார்மயமாகவுள்ள என்எல்சி நிறுவனத்திற்குத் தமிழ்நாடு அரசு உறுதுணையாக செயல்படக் கூடாது.  ஏற்கெனவே என்எல்சி நிறுவனம் எடுத்த நிலங்களுக்கு  அது உரிய இழப்பீடு வழங்கவில்லை.  மேலும் வாக்களித்தபடி நிலத்தை கொடுத்தவர்களுக்கு  என்எல்சி நிறுவனம் வேலையும் வழங்கவில்லை.
 
என்எல்சி நிறுவனம் அந்திம காலத்தில் உள்ள தொழில்நுட்பத்தைக் கைவிட்டு விட்டு
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் நோக்கிப் பயணப்பட வேண்டும். 

பருவநிலை மாற்றம் குறித்த 2021 கிளாஸ்கோ மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் மோடி, நிலக்கரி பயன்பாட்டை இந்தியா படிப்படியாக குறைக்கும் என்று பேசினார். இவ்வாறு பன்னாட்டு அரங்கில் வாக்குறுதி அளித்து விட்டு நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது இரட்டை வேடம் அல்லவா?
தமிழ்நாட்டின் வளத்தை அழிக்கத் தொடர்ந்து செயல்படும் என்எல்சி நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தவதை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

நேற்றைய போராட்டத்தின் போது காயமடைந்த காவல்துறையினர் விரைந்து நலம் பெறப் பிரார்த்தனை செய்கிறேன். நேற்றைய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாமகவினரை உடனே விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset