நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

தேர்தலில் கழற்றிவிடப்பட்ட பினாங்கு  இராமசாமி: ஜ செ க வின் இந்தியத் தலைவர்கள் கள்ள மெளனம்?

கோலாலம்பூர்:

பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் ஜசெகவின் தலைவர் லிம் குவான் எங் போட்டியிடுகிறார். அதே வேளை ராமசாமி உட்பட 4  ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைமை செயலாளர் அந்தோனி லோக் அறிவித்தார்.

டிஏபி இந்திய முன்னணி தலைவர்கள் அவர்கள் தலை தப்பினால் போதும் மற்றவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியதில்லை  என்பதை பல சந்தர்ப்பங்களில் அவர்கள்  தொடர்ந்து நிருபித்து வருகிறார்கள் என அவர்களது கட்சினரே புலம்பி வருகின்றனர்.

குறிப்பாக பினாங்கு பி.இராமசாமி விவகாரத்தில் இதை மீண்டும் டிஏபி இந்திய தலைவர்கள் நிருபித்திருக்கிறார்கள்.

இராமசாமியை பொறுத்தவரை ஜசெகவின் முக்கிய முன்னணி இந்திய தலைவராவார். இந்திய சமுதாயம் இழப்பை சந்திக்கும் போதெல்லாம்  சமுதாயத் தலைவராக குரல் கொடுப்பதில் வீறுக்கொண்ட வேங்கையாக முதலிடத்தில் இருப்பவர். இருப்பினும் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து அவர் அடிபடுவதும் உண்டு. அவரை உறுத்தலாகவே பலரும் பார்த்து வருகிறார்கள். அவரது விடுதலைப் புலிகள் நிலைப்பாடு சிலருக்கு முகம் சுழிக்க வைத்துள்ளது.

இவரது பாணி என்பது ஜசெகவின் முன்னாள் தலைவர்களான மக்கள் தொண்டர் டாக்டர் வீ.டேவிட், பி.பட்டு, கர்ப்பால் சிங் ஆகியோரின்  துணிச்சலை அவர் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. இவரது துணிச்சலைக் கொண்ட இந்திய தலைவர்கள் ஜசெகவில் தற்போது இல்லைஎன்பதுதான் உண்மை.

அண்மையில் இவர் அரசு வேலை வாய்ப்பு குறித்து கொடுத்த குரல் மலாய் சமூகத்தின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மலாய் அரசுசாரா இயக்கங்களின் கண்டனமானது. ஜசெக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,அவரை கைது செய்ய வேண்டும்  என்றெல்லாம் அறிக்கை தாக்குதல்கள் அவர் மீது நடத்தப்பட்டது. 

அவரை தற்காத்து அவருக்கு ஆதரவாக ஜசெக குறிப்பாக அதன் முன்னணி இந்திய தலைவர்கள் ஒன்றுமே தெரியாதது போல பதுங்கி கொண்டனர்.

ஆனால், மஇகாவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பேராசிரியர் பி.இராமசாமியை தற்காத்து அவருக்கு ஆதரவாக பேசினார்.

"கட்சி வேறாக இருந்தாலும்  இந்திய சமுதாயத்திற்காக குரல் எழுப்பி வருவதற்காகவும், இந்திய தலைவர் என்ற அடிப்படையிலும் இராமசாமியை தற்காப்பது எனது தார்மீக உரிமை, கடமையென சரவணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அப்போதும் கூட இந்த ஜசெக முன்னணி இந்திய மாண்புமிகுகள் எதுவுமே நடக்காதது போல் பாசாங்கு செய்தனர்.

இப்போது இராமசாமிக்கு சீட் வழங்கப்படாது, அல்லது வழங்கவில்லை என்ற நிலை வந்தபோது அதே பாசாங்கை சொல்லி வைத்தாற் போல் கட்சிக்குள் இருக்கும்  இந்திய தலைவர்கள் கடைபிடிக்கிறார்கள் என்று அவரது கட்சி தொண்டர்கள் புலம்பி வருகிறார்கள்.

பி.இராமசாமியை பொறுத்தவரை ஜசெக அவரை ஒரங்கட்ட வேண்டுமென எடுத்த முடிவானது கட்சியின் முடிவாக மட்டுமின்றி கூட்டணிகளின் அழுத்தமும் கொண்டதாகும். மலாய்க்காரர்கள் உரிமை குறித்து இராமசாமி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார் என்பதே அவர் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களாகும்.  

ஆனால் ஜசெக  கூறும் காரணம் அவர் 3 தவணைகள் பதவி சுகம் அனுபவித்து இருந்து விட்டதால் இந்த முடிவு என்று கூறுகிறார்கள். 

3 தவணைகளுக்கு மேல் ஜசெகவில் யாரும் போட்டியிட வாய்ப்பை பெறவில்லையா? மூன்று தவணைகளுக்கு போட்டியிட்டு இன்னமும் மாண்புமிகுகளாக இருப்போர் பட்டியல் ஜசெகவிடம் இல்லையா? என்று ஒரு தொண்டர் கேள்வி எழுப்பினார்.

ஜசெக தனது கொள்கையை விட்டு நழுவி கட்சி பிறகட்சிகளின் கைக் கூலியாகி விட்டது. இனி அது தனித்து இயங்க முடியாது. ஜசெகவின் குடுமி மற்றவர்கள் கையில் சிக்கி விட்டது. தன்னிச்சையாக செயல்பட்டால் ஜசெகவின் குடுமி அறுக்கப்பட்டு விடும். இது கட்சியின் பொதுச்செயலாளர் உட்பட உயர்மட்ட தலைவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இராமசாமி இந்திய சமுதாயத்தின் தலைவர் என்பதை அவரது கட்சியினரே குறை மறுக்கிறார்கள். குழி பறிக்கும் வேலையும் அழகாக செய்து முடித்துவிட்டார்கள்.  6 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராமசாமியை கழற்றி விடப்பட்டதன் பலனை ஜசெக இழக்குமா? அல்லது கடந்து போகுமா என்று இனிமேல் தான் தெரியும்.

வாரிசு அரசியலை அப்பட்டமாக நடத்திவரும் ஜசெக தவணைகளை பற்றி பேசுவது காலத்தின் கொடுமையே என்று அடிமட்ட தொண்டர் நம்மிடம் தன் ஆதங்கத்தை கொட்டிவிட்டு சென்றார்.

- எம்.ஏ.அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset