நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஆறு சட்டமன்ற தேர்தல்களும் மஇகாவின் நிலைமையும்! சிறப்பு கண்ணோட்டம்

கோலாலம்பூர்:

நாட்டின் ஆறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் எவ்வாறு அமையப் போகிறது. இதில் மஇ காவின் நிலை என்ன என்பதும் புரியாத புதிர் அல்ல.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியை பொறுத்தவரை அதன் கூட்டணி கட்சிகளின் இட ஒதுக்கீட்டில் பிகேஆர்,அமானா, டிஏபி ஆகிய கட்சிகள் தங்களது இட  ஒதுக்கீட்டில் 90 விழுக்காடு பேச்சுவார்த்தையை நிறைவு செய்து விட்டன.

அம்னோ தேசிய முன்னணியை பொறுத்தவரை அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையே மிகப் பெரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளன.

மசீச, மஇகாவுக்கான இட ஒதுக்கீட்டில் அம்னோ அலட்சியப் போக்கையே காட்டி வருவதாக தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. ஏன் பகிரங்கமாகவே பேசப்பட்டு வருகிறது.

அம்னோவுக்கு போக மிச்சம் உள்ள தொகுதிகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்கப்படும் என்ற அலட்சியமே அது.

அப்படியே இந்த இரண்டு கட்சிகளுக்கும் தொகுதிகள் வழங்கப்பட்டாலும் அவர்கள் இன்னென்ன தொகுதிகள்தான் வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தால் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியிடம் எடுபடாது. கொடுக்கும் தொகுதியில் வாங்கிக்கொண்டு செல்லுங்கள் என்றே அம்னோவின் பதிலாக அமைவது உறுதி.

குறிப்பாக பினாங்கு, கெடா, சிலாங்கூர், நெகிரி ஆகிய  மாநிலங்களில் தலா ஒரு தொகுதி மட்டுமே மஇகாவுக்கு வழங்கப்படும் சாத்தியம் தென்படுகிறது. அப்படி நடக்குமானால் மஇகா இதனை ஏற்குமா அல்லது புறக்கணிக்குமா என்ற கேள்வி எழுகிறது.

மஇகாவை பொறுத்தவரை தனது அரசியல் பயணத்தில் பரந்த நோக்கத்தை தலைமை கொண்டிருக்கவில்லை. டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் செயல்படும் தனி அணி என்ற நிலைமை மஇகாவில்  உருவாக்கப்பட்டு விட்டதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது. அந்த அணியினரின் தவறான வழிகாட்டலே  15ஆவது பொதுத் கேர்தலில் சுங்கை சிப்புட்டில்  விக்னேஸ்வரனின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

ஆனாலும் அவர் அதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. துதிபாடிகளை நம்பி தோல்வியையும் தழுவினார். 

இப்போது இந்த ஆறு மாநில தேர்தலிலும் ம இகாவுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகள் கட்சியின் தேசியத்தலைவர் என்ற அதிகார பின்னணியை கொண்டு யாருக்கெல்லாம் வழங்கப் போகிறார்? அதைப் பொறுத்தே வெற்றி வாய்ப்பினை நெருங்க முடியும்.

துணைத் தலைவரான சரவணனின் கோரிக்கைக்கும் முக்கியத்துவம் தரவேண்டிய இடத்தில் விக்னேஸ்வரன் இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

3லிருந்து 5 சீட்டுகள் ம இகா போட்டியிட வாய்ப்பு கிடைக்குமானால் அதனை விக்னேஸ்வரன், சரவணன் இருதரப்புக்கும் பகிர வேண்டும் என்பதே தற்போதைய நிலைமை. அப்படி வழங்கப்படும் பட்சத்தில் வெற்றி பெறுவது எளிதுமல்ல. கட்சிக்குள்ளேயே சதி வேலைகளும் குழிபறிப்புகளும் நடக்கும் சாத்தியம் உண்டு.

மேலும் அம்னோ மஇகாவின் வெற்றிக்கு துணை நிற்குமா என்பதும் பதிலே இல்லாத மில்லியன் டாலர் கேள்வி.

மஇகாவின் பாரத்தை இனியும் எங்களால் சுமக்க முடியாது என்று அம்னோ பட்டவர்த்தனமாக கூறி விட்டது. ம இ காவின் மாநிலத் தலைவர்கள் அம்னோவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.  மேலிடத்து உத்தரவின் பேரில்தான் அவர்கள் அப்படி பேசுகிறார்களா என்ற சந்தேகம் அம்னோ தலைவர்களுக்கு உண்டாகிவிட்டது.

எனவேதான் ம இ காவும் ம சீ ச வும் தேவையற்ற சுமை என்று கூறி அம்னோ தலைவர்கள் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு பிரச்சினை முற்றி போய்விட்டது. அதுகுறித்து இதுவரை தலைவர் விக்னேஸ்வரன் பதில் சொல்லவில்லை.

மஇகா, நீங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று பல சந்தர்ப்பங்களில், பல கோணங்களில் அம்னோ கூறி வருவதை மஇகா புரிந்தும் புரியாமலும், தெரிந்தும் தெரியாமலும் இருப்பது கட்சிக்கு நல்லதல்ல. 

அதே சமயத்தில் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அம்னோ தேசிய முன்னணியோடு நாங்கள் விசுவாசமாக இருக்கிறோம். ஆகவே தேசிய முன்னணியை விட்டு வெளியேற மாட்டோம் என்று மஇகா தனக்குதானே சமதானம் சொல்லிக் கொள்வதிலும் அர்த்தமில்லை.

இந்த விசுவாசம் அம்னோ தேசிய முன்னணிக்கும் இருக்க வேண்டும். அவர்கள் ம இ கா எங்களுக்கு சுமை என்று தொடர்ந்து கூறுகிறார்கள். இன்னமும் நாங்கள் விசுவாசமாக இருப்போம் என மஇகா சொல்லுமேயானால் அதன் அரசியல் பயணம் அஸ்தமம் என்றே கணிக்க தோன்றுகிறது.

இதனிடையே 6 சட்டமன்ற தேர்தல்களில் பிகேஆர், டிஏபி ஆகிய கட்சிகளும் தங்களது இந்திய வேட்பாளர்களை களத்தில் நிறுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. அப்படியிருக்கையில் தேசிய முன்னணி மூலமாக மஇகாவுக்கு தொகுதிகள் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. அம்னோவுக்கே சீட் பிரச்சினையாக உள்ளது. அந்த கட்சியில் தலைவலி அரசியலாக இருக்கும் பட்சத்தில் மஇகா, மசீசவுக்கு சீட் ஒதுக்குவது நிச்சயமற்ற ஒன்று. அப்படியே ஒதுக்கப்பட்டாலும் 1லிருந்து 2 சீட்டுகள் மட்டுமே என்ற நிலை உருவாகலாம்.

எதுவானாலும் மஇகா தலைமை விவேகமான முடிவினை எடுப்பதற்கு இன்னமும் காலம் நாட்களின் எண்ணிக்கையில் இருக்கிறது. 

அம்னோ தேசிய முன்னணியிடம் நறுக்கென்று பேசி என்னத்தான் முடிவு என்று துல்லிதமாக தெரிந்துக் கொண்டு கட்சியின் முடிவு இருக்க வேண்டியது அவசர அவசியம்.

இல்லை இல்லை நாங்கள் தேசிய முன்னணியை நேசிக்கிறோம் காதலிக்கிறோம் என்ற காலவதியான வசனத்தை பேசிக் கொண்டிருப்பார்களேயானால் அது ஒருதலை காதலாகவே இருக்கும். என்ன செய்யப் போகிறது மஇகா தலைமை!

அல்லது வா ஒருகை சேர்ந்து பார்க்கலாம் என்று காத்திருக்கும் மொஹைதீன் யாசினிடம் தஞ்சம் அடையப்போகிறார்களா? பச்சையோடு கலந்து அம்னோவிற்கு கை காட்டப்போகிறார்களா? யாருக்கு யார் செக் வைக்கப் போகிறார்கள்? 

- எம்.ஏ.அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset