செய்திகள் சிந்தனைகள்
இறைவனிடமிருந்து உதவியாளர் ஒருவர் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா? - வெள்ளிச் சிந்தனை
உறவைப் பேணி வாழ்வது சிறப்பும் மாண்பும் நிறைந்ததாய் இருக்க, உறவைத் துண்டிப்பது கடுமையான பாவமாக இருக்க, உறவினர்களுடனான உறவு அறுபட்டுப் போகின்ற, ஒருவர் மற்றவருடன் மோசமாக நடந்துகொள்கின்ற கதிக்கு ஆளாவதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
நெருக்கமான உறவினர்களுடனான உறவும் தொடர்பும் சீர்குலைந்து போவதைப் போன்று அந்நியர்களுடனான உறவும் தொடர்பும் சீர்குலைந்துபோவதில்லை என்பது வெளிப்படை.
சின்னச் சின்ன விஷயங்களும் வளர்ந்து, வளர்ந்து மிகப் பெரும் குழப்பமாக பேருருவம் எடுத்துவிடுகின்றன. அதன் பிறகு நல்ல முறையில் நடந்துகொள்வதை விடுங்கள், சலாம் சொல்வதும் துஆ செய்வதும் அல்லவா நின்று போய்விடுகின்றது.
சில சமயம் மிகவும் ஆர்ப்பாட்டமாக ‘இனி உம்மோடு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை’ என அறிவிப்புகள் வேறு நடக்கின்றன.
ஏதோ பெரிய நல்லறத்தைச் செய்வதாக நினைப்பு.
சில சமயம் சில மனிதர்கள் இந்தப் பாவச் செயலையே தம்முடைய பெருமையையும் கர்வத்தையும் வெளிப்படுத்துகின்ற சாதனங்களாய் ஆக்கிக் கொள்கின்றார்கள்.
மேலும், ‘நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் முடிவு செய்ததுதான்; மாற்றத்துக்கான பேச்சுக்கே இடமில்லை’ என வீறாப்பாகச் சொல்லிச் சொல்லி பெருமைப்படுகின்றார்கள்.
மேலும் நான் ஒருபோதும் கீழே இறங்கி வர மாட்டேன். மற்றவர்கள்தான் வெட்கங்கெட்டு நம்மிடம் வந்து நம்மை அழைப்பார்கள் என்கிற இறுமாப்பு வேறு!
இத்தனைக்கும் ‘மனக் கசப்புகளைத் துடைப்பதற்காக சலாம் சொல்வதில் முந்திக் கொள்பவர்தாம் உங்களில் சிறந்தவர்’ என்று தான் நபிமொழிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உண்மை என்னவெனில் உறவினர்களுடனான உறவுகளைச் சீராக வைத்திருப்பதற்கும் தக்க வைப்பதற்கும் தளரா மன உறுதி, பொறுமை, நிதானம், சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை, பிழைகளைப் பொறுத்துகொள்கின்ற தன்மை ஆகிய அனைத்தும் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன.
ஏனெனில் சில சமயம் இரு தரப்பினரில் எந்தவொரு தரப்பினரும் வேண்டுமென்றே தவறாகவோ, மோசமாகவோ நடந்திருக்கவே மாட்டார்கள். தவறான புரிதல்களால், தவறான கற்பிதங்களால், தவறான கருத்துகளால்தாம் அவை வளர்ந்துகொண்டே போய்விடுகின்றன.
எங்கிருந்து இதெல்லாம் தொடங்கியது என ஒருவர் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினால் அவரால் உண்மைநிலையைக் கண்டறியவே இயலாது. ஏனெனில் இதனை எவருமே தொடங்கியிருக்க மாட்டாகர்கள் என்பதுதான் உண்மை.
அதே சமயம் பரந்த மனப்பான்மை, அசைக்க முடியாத உறுதி, மன்னிக்கும் குணம், பிழை பொறுத்தல் போன்றவற்றை ஒருவர் வலுவாகப் பிடித்துக் கொள்வாரெனில் யார் தொடங்கியது என்கிற ஆராய்ச்சிக்கே அவசியம் இருக்காது. எத்தகைய நிலையிலும் நமக்கு இறைச்சட்டங்களின்படியும் நபிவழிப்படியும் நடந்தாக வேண்டிய பொறுப்பும் கடமையும் உ ண்டு.
அப்படியே நாம்தான் முதலில் மோசமாக நடந்துகொண்டு மனக் கசப்புக்கு வித்திட்டோம் எனில், சமரசத்துக்கான முதல் முயற்சி நம் தரப்பிலிருந்து எடுக்கப்பட வேண்டியது இன்னும் கூடுதலாக அவசியமாகிவிடுகின்றது. அல்லது மனக் கசப்புக்கு வித்திட்ட தொடக்கம் அந்தப் பக்கத்திலிருந்துதான் நடந்ததெனில் நாம் பாவம் எதுவும் செய்யாத நிலையிலும் உறவைச் சீராக்குவதற்காக முந்திக் கொள்வது நமக்கே சிறப்பைத் தரும்.
‘நம்முடன் உறவைப் பேணி வாழாத உறவினர்களுடன் நாம் நல்ல முறையில் உறவைப் பேணி வாழ்வதுதான் உண்மையான உறவைப் பேணி வாழ்வதாகும்’ என நபிகளார்(ஸல்) தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ரூ(ரலி) அறிவிக்கின்றார்கள்: நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘தம்முடன் நல்ல முறையில் உறவைப் பேணி வாழ்கின்ற உறவினர்களுடன் உறவைப் பேணி வாழ்வதற்குப் பகரமாக உறவைப் பேணி வாழ்வது உறவைப் பேணி வாழ்வதாகாது. அதற்கு மாறாக, தம்முடனான உறவைத் துண்டித்தவருடனும் உறவைப் பேணி வாழ்பவர்தாம் உண்மையில் உறவைப் பேணி வாழ்பவர் ஆவார்’ (திர்மிதி)
‘பிற முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து, பழகி அவர்களிடமிருந்து வருகின்ற தொல்லைகளைச் சகித்துக்கொள்கின்ற முஸ்லிம், மக்களோடு சேராமல், பழகாமல் தனித்திருக்கின்ற, மற்றவர்களிடமிருந்து வருகின்ற தொல்லைகளைச் சகித்துக்கொள்கின்ற வாய்ப்பே இல்லாத முஸ்லிமை விடச் சிறந்தவராவார்’ என்கிற நபிகளாரின் கூற்று திர்மிதியில் பதிவாகியிருக்கின்றது.
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்: ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து, ‘இறைத்தூதரே! என்னிடம் உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் உறவைப் பேணி வாழ்கின்றேன். ஆனால் அவர்களோ என்னுடனான உறவை முறிக்கின்றார்கள்.
நான் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்கின்றேன். ஆனால் அவர்களோ என்னுடன் மோசமாக நடந்துகொள்கின்றார்கள்.
(என்னைப் புண்படுத்துகின்ற போது) நான் பொறுமையுடன் சகித்துக் கொள்கின்றேன். ஆனாலும் அவர்கள் என்னுடன் அறியாமையோடு நடந்து கொள்கின்றார்கள்’ என்று கூறினார்.
நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘நீர் சொல்வதைப் போன்று உம்முடைய நடத்தை இருக்கின்றதெனில், நீர் அவர்களின் வாயில் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றவராவீர். மேலும் இதே நடத்தையை நீர் மேற்கொண்டிருக்கின்ற வரையில் *இறைவனிடமிருந்து உதவியாளர் ஒருவர்* அவர்களுக்கெதிராக உம்முடன் இருந்துகொண்டே இருப்பார்’. (முஸ்லிம் 5000)
இறைவனிடமிருந்து உதவியாளர் ஒருவர் உடன் இருக்கின்ற இந்தக் கண்ணியமும் வல்லமையும் எவருக்குக் கிடைத்துவிடுகின்றதோ அவருக்கு இந்த உலகில் வேறு எந்தப் பொருளின் தேவைதான் இருக்கப் போகின்றது!
- லுத்ஃபுல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am