நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பசியோடு பாய்ந்து தாக்குகின்ற பயங்கரமான ஓநாய்கள்..! - வெள்ளிச் சிந்தனை

கஅப் பின் மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்: அன்பு நபிகளார் (ஸல்) கூறினார்கள்:

‘பணம், பதவி, புகழ் ஆகியவற்றின் மீதான மனிதனின் பேராசை அவனுடைய மார்க்கத்தை அழித்தொழித்து விடுகின்ற அளவுக்குக் கூட பசியுள்ள நிலையில்  ஆட்டு மந்தையின் நடுவில் விட்டுவிடப்படுகின்ற இரண்டு ஓநாய்கள் (அந்த ஆட்டு மந்தையில்) நாசத்தை விளைவிப்பதில்லை.’

நூல் : திர்மிதி, தாரமி

மார்க்கம் என்பது என்ன

இறைவனை ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் மார்க்கம். இறையன்பின் ஆளுகையின் கீழ் ஒட்டுமொத்த வாழ்வும் ஜொலிக்கின்ற அளவுக்கு வாழ்வதுதான் மார்க்கம். 

அவர் இறைவனின் மகத்துவம், மாண்பு, கருணை, கண்ணியம், பேராற்றல் ஆகியவக்காக அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதற்கும் ஆயத்தமாக இருக்கின்றார் என்பதும் அவர் தம்முடைய இறைஞ்சுதல்கள், நேர்ச்சைகள், முறையீடுகள் ஆகிய அனைத்தையும் ஏக இறைவனுக்கு மட்டுமே உரித்தானவையாக ஆக்கிக்கொண்டிருக்கின்றார் என்பதும் அவருடைய  நடத்தையிலிருந்தும் அன்றாடச் செயல்களிலிருந்தும் தெள்ளத்தெளிவாக வெளிப்பட வேண்டும்.

இறைவனின் பேராற்றலும் வல்லமையும் மேன்மேலும் அதிகமாகவும் எடுப்பாகவும் தனித்துத் தெரிகின்ற வகையில் இறைவனின் திருமுன் தன்னை மிகமிக அடிமட்ட நிலைக்குத் தாழ்த்திக் கொள்வதுதான். இப்படிப்பட்ட மனிதர்களின் இதயப்பூர்வமான ஆசையாக இருக்கும்.

அழிந்து போகின்ற உலகப் பொருள்களின் மீதான மோகத்திலிருந்து தம்மை முழுமையாக விடுவிக்கின்ற அளவுக்கு இறைவன் மீதான அன்பிலும் பற்றிலும் தாம் திளைக்க வேண்டும் என்கிற விருப்பம்கொண்டவராய் அவர் இருப்பார். 

உண்மையென்னவெனில், எவருக்கு இறைவனைப் பற்றிய சரியான அறிவும் தெளிவும் கிடைத்துவிடுகின்றதோ  அவருடைய பார்வையில் இறைவனைத் தவிர வேறு எங்கும் எதிலும் கண்ணியமும் இருக்காது; மகத்துவமும் இருக்காது.

அது மட்டுமல்ல, நினைத்து நினைத்து உருகித் தவித்து கவலையில் அவரைத் தள்ளிவிடுகின்ற அளவுக்கு ஈர்ப்போ, மனத்தைக் கொள்ளை கொள்கின்ற திறனோ இறைவனைத் தவிர வேறு எங்கும் எதிலும் அவருக்குத் தெரிவதில்லை. இதுதான் உண்மையான மார்க்கம் ஆகும்.

இந்த நிலையில் உலக வளங்கள் மீதும், அற்பமான உலக இலாபங்கள் மீதும் பட்டம், பதவி, புகழ் ஆகியவற்றின் மீதும் ஒருவர் தீராத மோகமும் விடுபட முடியாத விருப்பமும் கொண்டிருக்கின்றார் எனில் அவர் மார்க்கத்தையும் அதன் இனிமைகளையும் இம்மியளவுகூட அறியாதவர் என்பது வெளிப்படை.

அவர் தம்மைத் திருத்திக்கொள்வதில் கவனம் செலுத்தவில்லையெனில் அவருடைய மார்க்கம் அவரை விட்டு முற்றாக கை விட்டுப் போகும் என்பதில் என்ன ஐயம் இருக்கப்போகின்றது?

மார்க்கம் எந்த அளவுக்கு முற்றாக அழிந்துபோய்விடும் என்பதை உணர்த்துவதற்காக ஆட்டு மந்தைக்குள் ஏவி விடப்பட்ட பசியுள்ள ஓநாய்கள் தொடர்பான எடுத்துக்காட்டை அன்பு நபிகளார்(ஸல்) எடுத்துரைத்துள்ளார்கள். பசியுள்ள ஓநாய்கள் அந்த ஆடுகளை எங்கே உயிருடன் விட்டு வைக்கப் போகின்றன?

முழுக்க முழுக்க இதே போன்றுதான் பொருளாசை, பதவிமோகம் ஆகியவற்றின் தகுதிநிலையும் பசியோடு பாய்ந்து தாக்குகின்ற அந்த இரண்டு பயங்கரமான ஓநாய்களை ஒத்ததாக இருக்கின்றது. இவை ஒருவரின் மார்க்கத்தையே முற்றாகத் அழித்தொழித்துவிடுகின்ற ஆற்றல் கொண்டவை.

இன்னும் சொல்லப்போனால் ஆட்டு மந்தையில் விடப்பட்ட பசியுள்ள இரண்டு ஓநாய்களை விடப் பன்மடங்கு அதிகமான நாசகர சக்தியைக் கொண்டவைதாம் அவை.

- மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான்

தொடர்புடைய செய்திகள்

+ - reset