நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

விதைபோல் வீழ்ந்து மரம் போல் எழுச்சி பெற்ற அந்த அறப்போர் வீரர்

அண்மி வந்துவிட்டது உலகத்தின் அழிவு. நிகழத் தொடங்கிவிட்டன அதன் பிரளயங்கள். அச்சமயம் கைவசம் ஒரு விதை உள்ளது. என்ன செய்யலாம்? என்ன செய்வோம்?

“அதை நடவும்” என அறிவுறுத்துகிறது நபிமொழி.

முஸ்னது அஹ்மது தொகுப்பில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்று உள்ளது.

“உலக முடிவு நாள் வந்துவிட்டாலும், உங்கள் கையில் ஓர் ஈச்சங்கொட்டை இருந்தால் அதை நட்டுவிடுங்கள்” (அஹ்மது 12902).

குர்ஆனிலுள்ள ஆயத்களும் நபிமொழிகளும் உலக அழிவு நிகழ்வுகளைப் பற்றி விவரித்துள்ளவை பேரச்சத்திற்குரியவை. உள்வாங்கிச் சிந்தித்தால், பீதியில் உறக்கமே தொலைந்து போகும். அப்பேற்பட்ட தருணத்தைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழலில், ’விதை ஒன்று இருப்பின் அதை நட்டுவிடு’ என்றால்?

முஸ்லிம் என்பவன் தனது பணியை, கடமையை எந்தளவு உளப்பூர்வமாய் செய்யக்கூடியவனாய், நற்காரியத்தில் கண்ணுங்கருத்துமாய் இருக்க வேண்டும் என்பதன் உச்சபட்ச அறிவுரை அது!

அந்த ஹதீஸை நினைக்கும் போதெல்லாம் சிந்தித்து, பிரமிக்காமல் இருக்க முடியாது. காரணம், அத்தகு மனோநிலை, மன வலிமை நம்மில் எத்தனை பேருக்குச் சாத்தியம் என எழும் மாபெரும் வினாக்குறி. ஆனால் அத்தகையோரும் உள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணத்தை உரசிக்காட்டி விடை ஒன்றை அளித்துள்ளது அண்மைய நிகழ்வொன்று. மனத்தை வியப்பில் ஆழ்த்தி, கண்களை நீரில் மூழ்கடித்தது ஓர் எளியவரின் வீரியம்.

oOo

இங்கு, அமெரிக்காவில் உள்ள மஸ்ஜிதுகளில் தொழுகை நேரங்களைத் திரையில் காட்டவும் திறன்பேசி செயலிகளுடன் இணைக்கவும் cloud technologyயைப் பயன்படுத்தி அருமையான மென்பொருளை உருவாக்கியுள்ளது Masjidal எனும் நிறுவனம். அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள பல மஸ்ஜித்கள் அதைப் பயன்படுத்துகின்றன. வெறுமே நேரங்காட்டியைப் போலன்றி அதன் வடிமைப்பும் இதர வசதிகளும் தொழுகையாளிகளுக்கும் மஸ்ஜிதுகளுக்கும் அளித்துள்ள பலன்கள் பல.

கணினியின் பல பிரிவு வித்தகர்கள் ஒன்றுகூடி வடிவமைத்துள்ள அந்த மென்பொருளில் graphic design ஓர் அபார அங்கம். அப்பிரிவின் தலைமைப் பொறியாளார் அப்துல்லாஹ் அல்-கய்யாலி. இந்த ஆண்டின் ரமளானின் போது பல புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்த மும்முரமாக இயங்கியபடி இருந்தது அவரது தலைமையிலான குழு.

அமெரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஓர் ஊரில் தொலைத்தொடர்பு அலுவராகத் தம் பணியைச் செய்துவந்தார் அப்துல்லாஹ். அவரது இருப்பிடம் ஃபலஸ்தீனின் கஸ்ஸா. இஸ்ரேலின் பயங்கரவாதம் தொடங்கியதும் அவரைச் சுற்றிச் சூழ்ந்தது பெருஞ்சோதனை. நாளும் பொழுதும் பொழிந்தது குண்டு மழை. கொத்துக் கொத்தாய் மரணம். சிதறுண்டு சிதறினர் பிஞ்சுகள். அவரும் குடும்பத்தினரும் தொடர்ந்து இடம்விட்டு இடம் நகரும் கட்டாயம்.

அந்தச் சூழலில் உள்ள ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்? அடுத்துத் தமக்கும் எந்நேரமும் எதுவும் நிகழலாம் என்ற நிலையில் எங்கு ஓட, ஒளிய? அத்தகு தருணத்திலும் பொறுமையுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று உரைத்தபடி தமக்கிட்டப் பணியை, அது அளிக்கப் போகும் நற்பலனைக் கருத்தில் பொருத்தி, விடாமல் தொடர்ந்தபடி இருந்தார் அப்துல்லாஹ்.

பிப்ரவரி 11, 2024. அவர் மீதும் விழுந்தது இஸ்ரேலிய குண்டு. படைத்தவனிடம் மீண்டது அவர் உயிர்.

சில நாட்களுக்குப் பிறகு தம் வாடிக்கையாளர்களுக்கு அச்செய்தியை மின்னஞ்சலில் பகிர்ந்தது Masjidal. அதன் பிறகுதான் அத்தகு அபார graphic designக்குப் பின்னால் அப்படி ’கருமமே கண்ணாக’ ஒருவர் இருந்தார், போர்க்களத்தில் இருந்தபடி செயலாற்றிக்கொண்டிருந்தார் என்பதே தெரியவந்தது. மின்னஞ்சலை வாசித்த கண்களில் துளிர்த்த கண்ணீர் அடங்கச் சற்று நேரமானது. ரமளானில் அச்செயலியில் வெளியான புதிய வடிவங்களைக் காணும் போதெல்லாம் அந்தச் சகோதரரின் பிரகாச முகம் எதையோ அறிவுறுத்தியபடி இருக்கிறது.

சோதனைகள் வலி நிறைந்தவை. அநீதிகள் ஆயாசப்படுத்தும்தாம். அரசாளும் அரக்கர்கள் நமது வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் போது, திக்கற்றுத் திகைத்து நிற்பது இயல்புதான். இன்று கஸ்ஸாவில் அம்மக்கள் சந்திக்கும் அவலத்தை மிகைத்தவையா நம் பிரச்சினைகள்?

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவத் திறமையை அளித்திருக்கிறான் படைத்தவன். இனங்கண்டு இன்னல்கள் பலவற்றின் மத்தியிலும் அதை அவன் வழியில் செலவு செய்தபடி கழிய வேண்டும் வாழ்வின் நொடிகள். அதன் பலாபலனுக்குப் பொறுப்பு அவன்.

விரக்தியில் விக்கித்துத் துவண்டு, செயலற்று ஓய்ந்து விடாது ஓடப் பாடம் புகட்டியிருக்கிறார் அப்துல்லாஹ் அல்-கய்யாலி.

நம் மனத்தில், கஸ்ஸா மண்ணில் இருந்துகொண்டு விதை ஒன்றை நட்டுவிட்டு மறைந்திருக்கிறார் அச்சகோதரர்.

முளைப்போம் !

கட்டுரையாளர்: -நூருத்தீன் USA


“முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அல்லது #விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் கனிகளை அல்லது விளைச்சலை) ஒரு பறவையோ ஒரு மனிதனோ ஒரு விலங்கோ உண்டால், அதன் காரணத்தால் தர்மம் (செய்ததற்கான பிரதிபலன்) அவருக்குக் கிடைக்காமல் போகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 2904

தொடர்புடைய செய்திகள்

+ - reset