நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இன்று பில்கிஸ் பானு; நாளை யாராகவும் இருக்கலாம்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

புது டெல்லி:

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் எந்த அடிப்படையில் டுவிக்கப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் இன்று பில்கிஸ் பானு; நாளை யாராகவும் இருக்கலாம் என்று கூறியது.

குஜராத்தில் 2002 மதவாத கலவரத்தின்போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரது 3 வயது மகள் உள்பட குடும்பத்தினர் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கின் 11 பேர் குற்றவாளிகளை தண்டனைக் குறைப்பு கொள்கையின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டில் குஜராத் அரசு விடுதலை செய்தது.

இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த நடவடிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானு உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பில்கிஸ் தாக்கல் செய்த மனுவில், "1992இல் அமல்படுத்தப்பட்ட தண்டனைக் குறைப்பு கொள்கையை 2003ஆம் ஆண்டே குஜராத் அரசு ரத்து செய்துவிட்டது.

அந்தக் கொள்கையின்படி 11 குற்றவாளிகளையும் விடுவித்தது பொருத்தமானதா?' என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

11 குற்றவாளிகளின் விடுதலை முடிவு தொடர்பான அசல் ஆவணங்களுடன் தயாராக இருக்குமாறு, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து கூறியதாவது:

ஒரு கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்; பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை, இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவு 302இன்கீழ் வரும் கொலை வழக்குகளுடன் ஒப்பிட முடியாது.

ஆரஞ்சுடன் ஆப்பிளை ஒப்பிட முடியாது என்பதைப் போல், கூட்டு கொலை சம்பவத்தை ஒற்றை கொலையுடன் ஒப்பிட முடியாது. 11 குற்றவாளிகளுக்கும் தண்டனைக் காலத்தில் பரோல்கள் வழங்கப்பட்டுள்ளன; இந்த வழக்கில் குற்றத்தின் தீவிரத்தை மாநில அரசு கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

குற்றவாளிகள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்? இன்று பில்கிஸ் பானு; நாளை யாராகவும் இருக்கலாம். நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். குற்றவாளிகள் விடுதலைக்கான காரணங்களை நீங்கள் ஒன்றிய, மாநில அரசுகள் தெரிவிக்காவிட்டால், நீதிமன்றம் சொந்த முடிவை எடுக்கும் என்று கூறி மே 2இல் இறுதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset