செய்திகள் சிந்தனைகள்
மின்னலைப் போன்று மேகங்களைக் கிழித்து... ஒற்றைப்பட இரவில் பிரார்த்தியுங்கள்
சகோதர சகோதரிகளே!
ரமலான் மாதத்தின் ஒற்றைப் படை இரவுகள், மகத்துவம் வாய்ந்தவை. 21, 23, 25, 27, 29 இரவுகள் அருள்வளம் கொழிப்பவை...
பிரார்த்தனை எப்போது ஏற்றுக் கொள்ளப்படும் தெரியுமா?
மனிதன் தன்னைப் படைத்த அதிபதியோடு மனத்தளவில் நெருங்கி, மிகுந்த வேதனையுடனும் கருணையை யாசித்தும் அவனை அழைத்து, அவனிடம் தன்னுடைய எல்லா பலவீனங்களையும், இன்னல்களையும், ஊனங்களையும் காயங்களையும், பிழைகளையும் குற்றங்களையும் சமர்ப்பித்து உதவி கேட்டு
அழுது அரற்றும் போதுதான் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும்.
இய்யாக நஃ புது வய்யாக னஸ்தயீன் - “உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்” என்பதை விட அழகிய பிரார்த்தனை உண்டா?
ஒரே ஒரு நிபந்தனைதான்.
பிரார்த்தனை செய்வதற்கு முன், உதவி கேட்பதற்கு முன் இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து வாழ்பவர்களாக ஆக வேண்டும்; அந்த வாழ்வை அதிபதியின் முன் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்ற அளவுக்கு நம்முடைய வாழ்வு ஜொலிக்க வேண்டும்.
உலகமோகம் தலை விரித்தாடும் இன்றைய காலத்தில் முதல் அடி விழுவது தொழுகையின் மீது தான். தொழுகைதான் நம்மை இறைவனுடன் நெருங்கச் செய்யும் வாயில். அவன் முன்னால் மிகுந்த பணிவுடன் உதவி கேட்பதற்கான ஒரே வழியும் அதுதான்.
இதற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது இறைவனுடைய கட்டளை என்கிற சிறப்புதான்.
இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுகிற வகையில் தொழுகிற அதே நேரத்தில் அவனுடைய அவையில் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் ஆத்மார்த்தமாகவும், உள்ளச்சத்துடனும் எடுத்து வைப்பதற்கான வழியாக இருப்பது நவாஃபில் தொழுகைகளே.
அடியானுக்கு இன்னும் கூடுதலாக ஏதோ தேவை இருக்கிறது; தனிக் கவனம் வேண்டி தொழுகிறான் என அறிந்து கொள்ள உதவுவது நவாஃபில் தொழுகைகளே...!
எனவே, நண்பா...!
அலாரம் வைத்து பின்னிரவில் தூக்கத்தைத் துறந்து விட்டு எழுந்து விடு! குறிப்பாக லைலத்துல் கத்ரு இரவில் ஒரு நொடியையும் வீணாக்காமல் கையேந்து...
இறைவனுடைய திருமுன் நின்று மன்றாடு...!
இதனை முக்கியமான அலுவல் என்று நினைத்தாவது, தன்னைத் தானே நிர்ப்பந்தித்தாவது சில நாட்களாவது இவ்வாறு இறைவனுடைய அவையில் உன்னுடைய வருகையைப் பதிவு செய்...!
பேரண்டத்தை அடக்கி ஆள்பவனிடம் முக்கியமான அலுவல் ஆக வேண்டி இருக்கிறது. அவனுடைய அவையில் எளிதாக நுழைவதற்கு இந்த நேரம்தான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று நினைத்தாவது இதனைச் செய்.
மற்றவர்கள் எவருக்கும் தெரியாமல் அவனுக்கு முன்பு ஆஜராகி,
அவனை மட்டுமே அழைத்து,
அவனுடைய கவனத்தை ஈர்த்து அவனிடம் உள்ளக்கிடக்கைகளைக் கொட்டிவிடும் போதும்,
உலகப் பேரரசனை அணுகுவதற்கு இந்த அடியான் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டான் என்கிற செய்தி எவருடைய காதுகளுக்கும் எட்டாத நிலையில் மிகவும் மறைவாக இதனை நிறைவேற்றுகிற போதும்,
இறைவனிடம் மன்றாடுகிற பிரார்த்தனையில் ஆற்றலும் தாக்கமும் கூடிவிடுகிறது.
ஆத்மார்த்தமான ஈடுபாடு கிட்டியவுடன் மனிதனின் பிரார்த்தனை மின்னலைப் போன்று மனிதனின் இருப்பிலிருந்து மேலே எழுந்து வானங்களின் தொலைதூரங்களை வேகமாகக் கடந்து சென்று விடுகிறது...!
எனவே, என் சகோதரனே...சகோதரியே!
வியாபார அலுவலும் தொழிலும் உன்னைக் கட்டிப் போட்டிருந்தால், உன்னுடைய நகரத்தில் எந்தக் கடையும் திறந்திருக்காத, எந்த வியாபாரமும் நடை பெறாத அந்த நேரத்தில் உன்னுடைய அதிபதியின் அவையில் ஆஜராகி விடு!
உன்னுடைய கோரிக்கைப் பட்டியல்களை அவனிடமே கொடுத்து விடு...!
தொடக்கத்தில் ஈடுபாடு இல்லாமல் போனால் உன்னை நீயே நிர்ப்பந்தித்தாவது இந்த தொழுகைகளிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபடு!
பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான வாயில் உன்னுடைய இதயம்தான். அதனை நீ கனமான பூட்டால் மூடி வைத்திருந்தால் மற்றவர்களால் என்ன செய்ய முடியும்?
அதிகபட்சமாக உள்ளச்சத்துடன் நற்செயல்களைச் செய்கிற அருள் கிடைப்பதற்காக பிரார்த்திக்க முடியும். அந்தப் பிரார்த்தனை கூட நல்ல தாக்கத்தை எப்போது ஏற்படுத்தும், தெரியுமா?
நிலத்தில் மரக்கன்று நன்றாக வேர் பிடித்து விட்ட பிறகுதான். வேரே பிடுங்கப்பட்டு கிடக்க வெளியிலிருந்து எத்தனை குடங்கள் ஊற்றினாலும் மரம் செழிக்குமா?
- மௌலானா அஸத் கீலானி
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am