நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் நில அதிர்வு என்று பீதி: கட்டிடங்களைவிட்டு வெளியே ஒடிய மக்கள்

சென்னை: 

சென்னை அண்ணா சாலையில் நேற்று நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில், கட்டிடங்களை விட்டு ஊழியர்கள் அவசரமாக வெளியே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துருக்கி, சிரியாவில் கடந்த 6-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி சுமார் 48 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்தியாவிலும் ஜம்மு காஷ்மீர், பிஹார், அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்தனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலை, ஒயிட்ஸ் சாலை பகுதியில் உள்ள கட்டிடங்களில் நேற்று காலை சுமார் 10.45 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

அப் பகுதியில் உள்ள யூனியன் வங்கி கட்டிடம் மற்றும் அருகே உள்ள கட்டிடங்களில் செயல்படும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் பீதியடைந்து, அவசரமாக கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலையில் திரண்டனர்.

மெட்ரோ ரயில் பணியால் அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணி எதுவும் நடைபெறவில்லை என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துவிட்டது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணனிடம் கேட்டபோது, ‘‘நில அதிர்வு பதிவாகும் கருவி மீனம்பாக்கத்தில் உள்ளது. அங்கு தொடர்பு கொண்டு கேட்டதற்கு, சென்னையில் நில அதிர்வு ஏதும் உணரப்படவில்லை என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம்’’ என்றார்.

தேசிய நிலநடுக்கவியல் மைய விஞ்ஞானி ரவிகாந்த் சிங் கூறியபோது, ‘‘சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த நில அதிர்வும் பதிவாகவில்லை. சென்னைக்கு அருகில் உள்ள திருப்பதியிலும் நில அதிர்வு தொடர்பான சமிக்ஞை பதிவாகவில்லை. 

தேசிய நில அதிர்வு வலைப் பின்னலில் குறைந்தபட்சம் 3 முதல் 5 நிலையங்களில் நில அதிர்வு சமிக்ஞை உணரப்பட்டால் மட்டுமே நில அதிர்வாக ஏற்க முடியும்’’ என்றார். எதனால் இந்த அதிர்வு உணரப்பட்டது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

- செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset