நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நவீன வசதிகளுடன் மாறப்போகும் மதுரை ரயில் நிலையம்: சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை: 

நவீன வசதிகளுடன் முன்னுதாரணமாக மதுரை ரயில் நிலையம் மாறும் என மறுசீரமைப்பு பணியை ஆய்வு செய்த சு.வெங்கடேசன் எம்.பி கூறினார்.

மதுரை ரயில் நிலையத்தில் ரூ.347 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டுமான பணியை சு.வெங்கடேசன் எம்.பி ஆய்வு செய்தார். இதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இந்த ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரயில்வே துறை ஒப்புதல் வழங்கி அறிவிப்பு செய்தது. அதற்காக ரயில்வே அமைச்சரிடம் நேரில் நன்றி கூறினேன். ரூ.347 கோடியில் மதுரை ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது, பயணிகள் அதிகரிப்புக்கேற்ப நவீன வசதிகளோடு புனரமைக்கப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு 49,000 பயணிகள் பயன்படுத்தினர். இன்றைக்கு 42,000 பேர் பயன்படுத்துகின்றனர். 

தினமும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 

ஏற்கெனவே இருந்த 6 நடைமேடைகள் ஏழாக அதிகரிக்கப்படுகிறது. இது கூடுதல் ரயில்களை இயக்க, அதிக ரயில்கள் ரயில் நிலையத்திற்குள் நிறுத்த பயன்படும். மூன்று ஆண்டில் இப்பணி நிறைவடையும்.

பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு சுரங்க நடைபாதை நேரடியாக ரயில் நிலையத்துக்கு வருவதைப் போன்று திட்டமிடவேண்டும் என கோரியிருந்தோம். 

அக் கோரிக்கையை ஏற்று சுரங்கப்பாதை இணைப்பும் சேர்த்து திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வருவோர், வெளியே செல்வோருக்கென தனித்தனி வாசல் அமைகிறது. 

அநேகமாக தமிழ்நாட்டிலுள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் ஒரு வழிபாதையாகத்தான் இருக்கிறது. ஆனால், மதுரை ரயில் நிலையத்தில் மட்டும் இரு வழிப்பாதை நுழைவு வாயில் உருவாகிறது.

பயணிகள் தங்கும் இடம் மூன்று மடங்கு அதிகரிக்கப்படும். பயணிகள் அமரும் இருக்கைகள் 460-லிருந்து 1600 ஆக அதிகரிக்கப்படுகிறது. 

பார்சல், தபால் வசதிக்கென தனித்தனி பகுதியில் இருப்பதால் பயணிகள் நடக்கும் அதே பாதையில் பார்சலுக்கான வழி இருக்கிறது. இதை மாற்றி அமைத்தால் சிரமம் குறையும். 

இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தனி வசதி ஏற்படுத்தப்படுகிறது. பயணிகள் தங்குமிடம், வணிகப் பயன்பாட்டுப் பகுதிகள் குளிரூட்டும் பகுதியாக மாறுகிறது. இதுபோன்ற பல்வேறு நவீன மாற்றங்கள் மூலம் முன்னுதாரண ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் வடிவமைக்கப்படும்” என்று அவர் கூறினார்.

- செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset