நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்! – கதறும் பாஜக!

இந்திய ஊடகங்களை ஊமையாக்கலாம்! ஆனால், பிபிசி போன்ற உலக ஊடகங்களை ”உண்மையைப் பேசாதே” என மிரட்ட முடியுமா? நெருப்பு பொறி போல வந்து விழுந்துள்ளது பிபிசியின் ஆவணப் படம்! எத்தனை காலத்திற்கு மோடியின் உத்தமர் வேஷத்தை உலகம் வேடிக்கை பார்க்கும்?

இந்தியாவில் உள்ள அனைத்து பிரபல ஊடகங்களையும் ஆட்சி அதிகார பலத்தால் பேசா மடந்தைகளாக மாற்றி வைத்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு!

இந்தச் சூழலில் உலக அளவில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய ஊடகமான பி.பி.சி 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மத வன்முறையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதைக் கூறும், ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ (India: The Modi Question) என்ற தலைப்பிலான ஆவணப் படத்தை தயாரித்துள்ளது. இதில், வெளிப்படும் உண்மைகளை கண்டு அச்சமுற்ற ஒன்றிய பாஜக அரசு பிரதமர் நரேந்திர மோடி குறித்த, பிபிசி  ஆவணப்பட வீடியோக்களையும் அது தொடர்பான டுவிட்டர் பதிவுகளையும் முடக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது!

இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 17 அன்று வெளியிடப்பட்டு இருந்த நிலையில், இது நாடு முழுவதும் தற்போது விவாதததை உருவாக்கி உள்ளது. குஜராத் மத வன்முறையில், அன்றைய  முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள்  உள்பட மொத்தம் 64 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அதற்கு போதிய முகாந்திரம் இல்லை  எனக் கூறி சிறப்பு நீதிமன்றம் 2013ல் அவர்களை விடுதலை  செய்து விட்டது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும், கடந்த 2022 டிசம்பர் 9-ஆம் தேதி அன்று  உறுதி செய்திருந்தது.

இந்தப் பின்னணியில், மோடிக்கு மத வன்முறையில் தொடர்பு உள்ளது என்றும், குஜராத் வன்முறையில் மோடிக்கு நேரடி  தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கும் தெரியும் என்று கூறி, அதற்கான ஆவணங்க ளையும் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது,  பாஜகவினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, “பிபிசி ஆவணப்படம் அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தும் வகையிலான பிரச்சாரப் படம். அதில் பிரிட்டிஷ்  காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரிகிறது. இது கண்ணியமானதாக இல்லை. இந்தப் பிரச்சனையை  மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு  பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு  வியப்பளிக்கிறது” என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி  தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவ ணப்படத்தை முடக்குமாறு யூடியூப் நிறுவனத்துக்கும், அந்த விடியோவை இணைத்து வெளியிடப்பட்டிருக்கும் 50-க்கும் மேற்பட்ட டுவிட்டர் பதிவுகளை நீக்கு மாறு டிவிட்டர் நிறுவனத்துக்கும் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில், யூடியூப் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களுக்கு தகவல் தொழில்  நுட்ப சட்டம் 2021-இன் கீழ் இது தொடர்பாக அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது நிலையில், யூடியூப் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களும்  இந்த அறிவுறுத்தலுக்கு இணங்கியுள்ளதாக தெரிய வருகிறது. உச்சநீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்கி விட்டது. இந்தச் சூழலில், ”பிபிசி ஆவணப் படம் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மீதான நம்பகத் தன்மையின் மீது பாதிப்பு ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கிறது’’ என்று மோடி அரசு, சாதுர்யமாக பிபிசி-க்கு எதிராக உச்சநீதிமன்றத்தை தூண்டி உள்ளது.

பிபிசி வெளியிட்டுள்ளது எழுத்து வடிவிலான கட்டுரையல்ல. மிக உயிர்ப்பான காட்சிப் படிமங்கள்! கள உண்மைகள்! கலவரச் சூழலில் நேரடி அனுபவமுள்ள மிக உயர் நிலை அதிகாரிகள் தொடங்கி அடிமட்ட மனிதன் வரையிலான அனுபவப் பகிர்வுகள்! இதை பார்க்கும் மனித தன்மையுள்ள யாரும் அலட்சியமாக கடக்க மாட்டார்கள்!

இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ எனும் தலைப்பிலான ஆவணப்படம் தொடர்பாக பாகிஸ்தான் வம்சாவளி எம்பி இம்ரான் ஹுசைன் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் குறித்து பேசிய பிரிட்டன் பிரதமர் சுனக், “இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது என்பதை பதிவு செய்கிறேன். இந்த கருத்து நீண்டகாலமாக தொடரும் கருத்து. இதில் எந்தவித மாற்றமுமில்லை. நிச்சயமாக, துன்புறுத்தல்கள் எங்கு நடந்தாலும் அவற்றை இங்கிலாந்து பொறுத்துக் கொள்ளாது. ஆனால், மரியாதைக்குரிய இந்தியப் பிரதமர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அர்த்தமில்லை” என்று கூறினார்.

அதாவது, ”குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சியால் சொல்லப்பட்டவை தான் இங்கிலாந்தின் நீண்ட கால நிலைபாடு” என்று கூறிவிட்டு, மோடி மீது மரியாதை இருப்பது போல பாசாங்கு செய்துள்ளார் ரிஷி சுனக்!

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது டிவிட்டரில்,  ”இந்த ஆவணப்படம் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது. ஆகவே, அனைவரும் விரைந்து பார்த்து விடுங்கள்” எனக் கூறியுள்ளார்!

மோடி மீதான குற்றச்சாட்டுகள் உலக அளவில் உறுதிபடுத்தப்பட்டவை! இந்திய ஊடகங்களின் வாயை அடைக்கலாம். உலகின் மிகப் பெரிய நாட்டின் பிரதமர் என்ற வகையில் தவிர்க்க இயலாமல் மோடிக்கு மரியாதை தரப்படலாம். ஆனால், உண்மை, உண்மை தான்! அதை கொன்றிடலொண்ணாது. குறைத்திடலொண்ணாது!

உண்மை சுடத் தான் செய்யும்! ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்!

 - சாவித்திரி கண்ணன்

நன்றி: அறம் இணைய இதழ்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset