
செய்திகள் சிந்தனைகள்
அச்சத்துடன் ஏன்..?: வெள்ளிச் சிந்தனை - டாக்டர் நசீர் அஹ்மத் நாஸிர்
மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்.
(திருக்குர்ஆன்: அத்தியாயம் 7 அல் அஃராஃப் 56)
சிந்திக்கத் தூண்டுகின்ற இந்த இறைக்கட்டளையை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். இறைவனிடம் இறைஞ்சுகின்ற போது அச்சத்துடன் ஏன் அழைக்க வேண்டும்?
ஆவலுடனும் ஆசையுடனும் பிரார்த்திப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அச்சத்துடன் ஏன்?
அளவிலக் கருணையும் இணையிலாக் கிருபையும் மிக்கவன் அல்லவா இறைவன்? இன்னும் சொல்லப்போனால் அவன் எந்த அளவுக்குக் கருணை மிக்கவன் எனில் அவனுடைய அன்போடு ஒப்பிடும்போது உலகம் கண்ட தாய்மார்கள் அனைவருடைய அன்பும் கடலிருந்து எடுக்கப்பட்ட துளி போன்றதாகும் என்றுதானே சொல்கின்றோம்.
நம்முடைய அம்மாவிடம் நாம் எதனையாவது கேட்கின்ற போது அச்சத்துடனா கேட்கின்றோம்? உரிமையோடும் எப்படியும் கிடைத்துவிடும் என்கிற மன உறுதியுடனும்தானே கேட்கின்றோம்.
அப்படியானால் உலகம் கண்ட தாய்மார்கள் அனைவருடைய அன்பை விட பல்லாயிரம் கோடி மடங்கு அதிக அன்பைக் கொண்ட இறைவனிடமும் மிகுந்த நம்பிக்கையுடனும் எப்படியும் கிடைத்துவிடும் என்கிற மனஉறுதியுடனும்தானே கேட்க வேண்டும். திண்ணமாக இறைவனிடம் பிரார்த்திக்கின்ற போது அப்படித்தான் மிகுந்த நம்பிக்கையுடனே பிரார்த்திக்க வேண்டும்.
ஆனால் இங்கு அச்சத்துடன் அழையுங்கள் என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது? இதற்குப் பொருள் என்ன?
மறைவானவற்றைப் பற்றிய அறிவோ ஞானமோ மனிதனுக்கு இல்லை. தனக்குத் தேவை என அவன் எதனைக் குறித்துப் பிரார்த்திக்கின்றானோ அது அவனுக்கு நன்மை அளிக்குமா, தீங்கிழைக்குமா என்பதையும் அந்தச் செயல் நன்மையானதா, தீங்கானதா என்பதையும்கூட அறியாதவனாகத்தான் மனிதன் இருக்கின்றான்.
எடுத்துக்காட்டாக இணைவைப்பில் ஈடுபடுகின்றவர்கள் தம்முடைய செயலும் நடத்தையும் இறைவனுக்கு இணைவைப்பவை என்பதை அறியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இறைவனும் மன்னிக்காத மாபாதகத்தைச் செய்கின்றோம் என்கிற உணர்வும் அவர்களுக்கு இருப்பதில்லை. அதற்கு மாறாக ஏதோ புண்ணியத்தைத் தருகின்ற செயலாகத்தான் அவர்கள் அதனை நினைக்கின்றார்கள்.
இதே போன்றுதான் ஆன்மிக, மத, பொருளாதார, சமூக, இராணுவத் தளங்களிலும் அரசியல் களங்களிலும் குழப்பம் விளைவிப்பவர்களும் உண்மையில் தாம் மிகப் பெரும் சீர்திருத்தம் செய்வதாகத்தான் நினைத்துக்கொள்கின்றார்கள்.
அந்தக் காலத்து ஃபிர்அவ்ன் முதல் இந்தக் காலத்து ஒபாமா, மோடிகள் வரை எல்லாருமே தம்மைத்தாமே பெரும் சீர்திருத்தவாதியாகத்தான் கருதியும் பேசியும் வந்துள்ளார்கள். (பார்க்க:திருக்குர்ஆன் அத்தியாயம் 2 அல்பகறா 11, அத்தியாயம் 11 ஹூத் 116-117)
சில சமயம் நாம் எதனை நன்மை என உறுதியாக நினைக்கின்றோமோ அதுவே நமக்குத் தீங்கிழைப்பதாகவும் அமைந்துவிடுவதையும் பார்க்கின்றோம். (பார்க்க திருக்குர்ஆன் அத்தியாயம் 24 அந்நூர் 11)
இந்த விளக்கத்திலிருந்து நமக்குத் தெரிவதென்ன?
இறைவனிடம் எதனை வேண்டி விரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றோமோ அதுவே தமக்குக் தீங்கிழைக்கக்கூடியதாக இருந்து விடக் கூடாதே என்கிற அச்சத்துடன் இறைவனிடம் முறையிடுவதாகத்தான் இதனைப் பொருள் கொள்ள வேண்டும்.
மேலும் தாம் எதனை வேண்டாம் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றோமோ அது உண்மையிலேயே தமக்கு நன்மை அளிக்கக்கூடியதாய் இருந்துவிடுமோ என்கிற அச்சத்துடன் இறைவனிடம் முறையிடுவதாகத்தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.
-டாக்டர் நஸீர் அஹ்மத் நாசிர்
தமிழில்: லுத்ஃபுல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 9:12 am
எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை - ஜென்னி மார்க்ஸ்: இன்று கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்
May 2, 2025, 8:08 am
இறையுதவி கிடைக்குமா கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் தருணங்கள் - வெள்ளிச் சிந்தனை
May 1, 2025, 6:28 am
உழைப்பு என்பது... உழைப்பாளர் தின சிந்தனை
April 25, 2025, 8:26 am
உழைப்பில் இனிமை கண்ட உத்தமர்கள்..! - வெள்ளிச் சிந்தனை
April 11, 2025, 7:14 am
"எத்தனை கடவுள்களை வழிபடுகிறீர்கள்?” - வெள்ளிச் சிந்தனை
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm