செய்திகள் சிந்தனைகள்
அந்த மூன்று பண்புகள் இல்லாத வரையில்...! வெள்ளிச் சிந்தனை - மௌலானா ஃபாருக் கான்
மனித வாழ்வில் குடும்பத்திற்கு மிகப் பெரும் முக்கியத்துவம் உண்டு. குடும்ப வாழ்வின் மூலமாகத்தான் எந்தவொரு மனிதனின் உண்மையான ஆளுமையும் நமக்கு முன்னால் வெளிப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் நபிகளார்(ஸல்) கூறினார்கள்:
‘உங்களில் தம் குடும்பத்தாருடன் நல்ல முறையில் நடந்து கொள்பவர்தாம் உங்களில் மற்றெல்லோரையும் விடச் சிறந்தவர் ஆவார்’.
ஒருவரின் ஒழுக்கத் தரம் எத்தகையதாய் இருக்கின்றது என்பதைத் துல்லியமாக எளிதாக அறிந்துகொள்வதற்கு உதவுகின்ற உரைகல்லாக இருப்பது குடும்பம் தான் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
கணவனும் மனைவியும் சேர்ந்துதான் குடும்பத்தை அமைக்கின்றார்கள்; வளர்க்கின்றார்கள். குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உருவாகின்றது.
இந்த வகையில் சமூகமெனும் கட்டடத்தின் அடிக்கல்லாக இருப்பது குடும்பம்தான் என்பதும் சமூகத்தின் வலிமையும் உறுதியும் குடும்பங்களின் வலிமையையும் உறுதியையும் சார்ந்தே இருக்கின்றன என்பது நிதர்சனம்.
குடும்பத்தில் மனைவிக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கின்றது. மனைவி எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவள் என்பதை அறிந்து கொள்வதற்கு பெண் தொடர்பான அடிப்படையான விஷயங்கள் சிலவற்றை மனத்தில் கொள்வது நல்லது.
பெண்:
பெண் உண்மையில் பேரண்டத்தைப் படைத்தவனின் தன்னிகரற்ற படைப்பாக இருக்கின்றாள். பெண்ணைப் படைத்த இறைவன் அவளுக்கு அழகு, தோற்றம், வடிவம் என எல்லாப் பரிமாணங்களிலும் அழகையும் வனப்பையும் கொட்டிக் கொடுத்த அதே நேரத்தில் அவளுக்கு இனிமையான, நுட்பமான உணர்வுகளைக் கொண்டும் அவளை அழகுபடுத்தி இருக்கின்றான்.
வெளித்தோற்றத்தில் பெண்ணுக்குத் தரப்பட்டிருக்கின்ற அழகுக்கும் வனப்புக்கும் சற்றும் குறையாததுதாம் அவளுடைய அகமும் உள் அழகும். பெண்ணின் உண்மையான மதிப்பும் மாண்பும் அவளுடைய பெண்மையில் பொதிந்திருக்கின்றது.
பெண்மை பெண்ணின் பலவீனம் அல்ல. அதற்கு மாறாக அதுதான் அவளுடைய உண்மையான பலமாகும்.
மனித வாழ்வில் இஸ்லாம் பெண்ணுக்குத் தந்திருக்கின்ற மதிப்பும் கண்ணியமும் மரியாதையும் நிறைந்த உயர்ந்த படித்தரங்களுக்கு அவற்றின் உண்மையான பொருளில் முழுக்க முழுக்க தகுதியானவள்தான் பெண்.
இஸ்லாம் தன்னுடைய போதனைகளின் மூலமாக பெண்ணின் ஒழுக்கப் பண்புகளையும் அவளுடைய ஆளுமையையும் நடத்தையும் முழுமையாக பாதுகாத்துள்ளது.
அது நாணத்தையும் தூய்மையான நடத்தையையும் பெண்ணின் உண்மையான அணிகலனாக அறிவித்திருக்கின்றது.
இறைவனிடத்தில் ஆணுக்கு என்ன தகுதிநிலையும் அந்தஸ்தும் இருக்கின்றனவோ அதே அந்தஸ்தும் தகுதிநிலையும் பெண்ணுக்கும் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும்.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஆணின் வாழ்க்கைத் துணைவியாக பெண் இருக்கின்றாள் எனில், ஆணும் பெண்ணின் வாழ்க்கைத் துணைவனாக ஆக்கப்பட்டிருக்கின்றான்.
ஆணும் பெண்ணும் இருவரின் இருப்பும் ஒருவர் மற்றவரின் ஆளுமையை முழுமைப்படுத்துவதற்கு அவசியமாகும். பெண் இல்லாமல் போனால் ஆணின் வாழ்க்கையில் எத்தகைய வெற்றிடம் ஏற்பட்டுவிடும் எனில் அதனை வேறு எந்தவொரு உத்தியைக் கொண்டும் நிரப்ப முடியாது.
முழுக்க முழுக்க இதே போன்று பெண்ணின் வாழ்க்கையும் ஆணின் துணையின்றி அரைகுறையாகத் தான் இருக்கும்.
வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வின் உரிமைகைளை நிறைவேற்றுகின்ற விவகாரம் ஆகட்டும், தம்முடைய ஆளுமையை முழுமைப்படுத்துகின்ற விஷயம் ஆகட்டும், முஸ்லிம் பெண்ணின் தரப்பிலிருந்து எல்லா வேலைகளிலும் எத்தகைய நடத்தையும் ஒழுக்கமும் வெளிப்பட வேண்டும் என்கிற நோக்கம் இலக்காகக் கொள்ளப்படுகின்றது எனில், அதன் பயனாக மனித வாழ்வில் உருவாகிவிடுகின்ற அழகையும் ஈர்ப்பையும் வேறு எங்கேயும் எதிலும் பார்க்கவே முடியாது.
பெண் தன்னுடைய கணவனின் நிம்மதிக்கும் மனநிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமாக, அடிப்படையாக அமைகின்றாள்.
ஒரு முன்மாதிரி முஸலிம் பெண் தன் மீதான பொறுப்புகளை - அவை குழந்தைகள் தொடர்பானவையாய் இருந்தாலும் சரி, உறவினர்கள் அல்லது அண்டை வீட்டார் தொடர்பானவையாய் இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் - குறித்து நல்ல முறையில் அறிந்தவளாய், உணர்ந்தவளாய் இருக்கின்றாள்.
அவற்றை எவ்வாறு செம்மையாக நிறைவேற்ற வேண்டும் என்பதிலும் தெளிவாக, விழிப்பாக இருக்கின்றாள்.
அவள் தன்னுடையகுடும்பத்துக்கும் சமூகத்துக்கும் சாபக்கேடாக இருப்பதில்லை. அதற்கு மாறாக முழுக்க முழுக்க அல்லாஹ்வின் ரஹ்மத்தாக - கருணையாக, அருளாக - மிளிர்கின்றாள்.
பெண் தன்னுடைய இருப்பால், தன்னுடைய நடத்தையால், ஒழுக்கத்தால் மனித வாழ்வில் எத்தகைய ஈர்ப்பையும் மனமகிழ்வையும் ஏற்படுத்தி விடுகின்றாள் எனில் அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது.
தன்னுடைய குடும்பத்தாரை எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், கேடுகளிலிருந்தும் பாதுகாப்பது ஆண் மீதான கடமையாகும்.
மேலும் நல்ல நல்ல நற்பண்புகளால் நன்மைகளால் குடும்பத்தாரை அழகுபடுத்தி முன்மாதிரி குடும்பம் என்று மெச்சத்தக்க அளவுக்கு உயர்த்துவதும் ஆணின் பொறுப்பாகும்.
முன்மாதிரி குடும்பங்களால்தான் முன்மாதிரி சமூகத்தைக் கட்டமைப்பது சாத்தியமாகும் என்பதுதான் உண்மை.
தம்முடைய குடும்பத்தாரைக் குறித்து அக்கறையில்லாமல் அலட்சியமாக இருப்பது எந்த வகையிலும் சரியான நடத்தை ஆகாது.
குறிப்பாக தம்முடைய குடும்பத்தாரின் மறுமை வாழ்வு சிறக்க வேண்டும் என்கிற தணியாத ஆசை நம்மிடம் இருந்தாக வேண்டும். உலக வாழ்வு சீராக, சரியாக, நேர்வழியில் அமைந்தால்தான் மறுமை வாழ்வின் வெற்றியும் வளமும் சாத்தியமாகும்.
குர்ஆன் அறிவிக்கின்றது:
இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருளாகக் கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
(அத்தியாயம் 66 அத்தஹ்ரீம் 6)
இறைநம்பிக்கையாளர்களுக்கான முன்மாதிரியாக ஃபிர்அவ்னின் மனைவியை குர்ஆன் முன் நிறுத்துகின்றது. அவர் ஒரு கொடூரமான, இறைமறுப்பில் ஊறித் திளைத்த, கொடுங்கோல் மன்னனின் பிடியில் இருந்த நிலையிலும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டும், சத்தியத்தின் மீதான தன்னுடைய நேசத்தையும் பற்றையும், ஈமானுடனான தன்னுடைய பந்தத்தையும் தக்க வைத்து இருந்தார்; ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயல்களிலிருந்தும் விலகி நின்றார்; ஃபிர்அவ்னின் தவறான செய்கைகளின் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாயாக என இறைவனிடம் மன்றாடியவாறு இருந்தார்; இறைவனின் கருணையையும் கிருபையையும் யாசித்தவாறு இருந்தார்; மேலும், ஃபிர்அவ்ன் மட்டுமின்றி கொடூரமான, அக்கிரமம் புரிகின்ற மனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பாயாக என்றும் பிரார்த்தித்து வந்தார் என்பதற்காக அவரை உதாரணமாக அறிவிக்கின்றது.
ஃபிர்அவ்னுடை மனைவியை அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான்.
ஒருபோது அவர் இறைஞ்சினார்: ‘என் அதிபதியே! எனக்காக உன்னிடத்தில் - சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும், ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயல்களை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும், கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!’.
(அத்தியாயம் 66 அத்தஹ்ரீம் 11)
நிலைமைகள் எந்த அளவுக்கு மோசமானதாக, பாதகமானதாக, பயங்கரமானதாக ஆகிவிட்டாலும் சரி, மனிதன் தன்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து இம்மியளவுகூட சறுக்கி விழுந்து விடக் கூடாது என்பதை உணர்த்துவதற்காகத்தான் இங்கே ஃபிர்அவ்னின் மனைவி உதாரணமாக எடுத்துரைக்கப்படுகின்றார்.
ஏனெனில், மனிதன் உயர்ந்த நிலையிலிருந்து கீழே விழுந்து விட்ட பிறகு இறைவனின் பார்வையில் அவனுக்கு மதிப்பையும் சிறப்பையும் அளிக்கக்கூடிய யாதொன்றும் அவனிடம் எஞ்சி இருப்பதில்லை.
நம்மிடம் மூன்று பண்புகள் இல்லாத வரை நம்முடைய குடும்பத்தார் தொடர்பான விவகாரங்களில் நம் மீதான பொறுப்புகளையும் கடமைகளையும் அழகாக, செம்மையாக, சிறப்பாக நிறைவேற்றவே இயலாது. அந்தப் பண்புகளின் விவரம் வருமாறு:
(1). பிணைந்திருத்தல் (Attachment)
(2). மென்மை, சகிப்புத்தன்மை (Tenderness and benevolence)
(3). சேவையாற்றுகின்ற உணர்வு (Passion of Service)
1. பிணைந்திருத்தல் (Attachment)
முதலில் தேவைப்படுவது தம்மைத்தாமே ஒப்படைத்துவிடுகின்ற உணர்வு தான். தம்முடைய குடும்பத்தாருடன் முழுமையான உணர்வுப்பூர்வமான பிணைப்போ, பற்றோ, பந்தமோ இல்லையெனில், அவர் தம்முடைய குடும்பத்தாருடன் ஏதேனுமோர் வகையான தொலைவை பராமரிக்கின்றார் எனில் குடும்பத்தார் தொடர்பாக தம் மீது விழுகின்ற பொறுப்புகளை அவரால் செம்மையாக நிறைவேற்ற இயலாமலே போய்விடும். தம்முடைய குடும்பத்தாருடன் இணக்கத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தி வைத்திருப்பது மனிதன் மீதான கடமையாகும்.
இவ்வாறாகத்தான் அவரால் குடும்பத்தார் தொடர்பாக தம் மீது இருக்கின்ற பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்ற முடியும். இன்னும் சொல்லப் போனால் அன்பு இல்லாமல், இணக்கமும் நெருக்கமும் இல்லாமல் அவரால் குடும்ப வாழ்வின் உண்மையான இனிமையையும் சுவையையும் அனுபவிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.
தம்முடைய குடும்பத்தாருடன் இணக்கமும் இனிமையும் நிறைந்த அழுத்தமான தொடர்பை ஒருவர் முதலில் நிறுவிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகுதான் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்த பிறகும் தன்னுடைய ஆளுமையின் தாக்கங்கள் நிலைத்து இருக்கும்; மேலும் தாம் இறுதி வரை மேற்கொண்டு வந்த இலட்சியப் பணியை தனக்குப் பிறகும் மக்கள் தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பை அவர் வளர்த்துக் கொள்வது கூடும்.
தம்முடைய குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி, தமக்குப் பிறகும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்ற அளவுக்கு எவருக்கு வாழ்வில் எந்தவொரு குறிக்கோளோ, உயர்வான, மேலான இலட்சியப் பணியோ இல்லையோ அப்படிப்பட்ட மனிதரைக் குறித்து என்னவென்று சொல்வது?
குர்ஆன் எத்தகைய இலட்சிய மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றது, தெரியுமா? யஃகூப்(அலை) மரணப் படுக்கையில் இருந்த போது, உயிர் பிரிகிற அந்தத் தருணத்தில் தம்முடைய மகன்களையெல்லாம் ஒன்று திரட்டி ‘எனக்குப் பிறகு நீங்கள் யாரை வழிபடுவீர்கள்?’ என்று கேட்டதாக குர்ஆன் விவரிக்கின்றது.
அப்போது அவருடைய பிள்ளைகள் அனைவரும் ‘நாங்கள் உங்களுடைய அதிபதியை - உங்களின் மூதாதையரான இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை), இஸ்ஹாக்(அலை) ஆகியோரின் அதிபதியை - தான் வழிபடுவோம். எங்களின் ஒட்டுமொத்த வாழ்வும் அவனுக்கு அடிபணிந்தும் கீழ்ப்படிந்தும் நடப்பதிலேயே கழியும். நாங்கள் ஒருபோதும் அந்த அதிபதிக்கு மாறு செய்யவே மாட்டோம். எங்களால் அப்படி நடந்துகொள்ளவே இயலாது. நாங்கள் அவனைச் சார்ந்தே வாழ்கின்றோம். எதிர்காலத்திலும் எங்களுடைய வாழ்வின் அச்சாணியாக அவனே இருப்பான்’ என்று பதிலளித்தார்கள்.
யஃகூப்(அலை) தம்முடைய பிள்ளைகளிடம் கேட்ட கேள்வி பொருள் பொதிந்தது. அது உண்மையில் அவர் அவர்களுக்கு செய்த வஸிய்யத் - மரண சாசனம் - ஆகும். தனக்குப் பிறகு ஏக இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்து, ஏக இறைவனை மையமாகக் கொண்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவுறுத்தல்தான் அந்தக் கேள்வியின் உயிர்நாடி ஆகும்.
யஃகூப்(அலை) அவர்களுக்கு முன்பாக இப்ராஹீம்(அலை) அவர்களும் இதே போன்ற இறுதி அறிவுரையைத்தாம் தம்முடைய குடும்பத்தாருக்குச் சொல்லி சென்றார்கள். (பாருங்கள் : அத்தியாயம் 2 அல்பகறா 131 - 133)
பிள்ளைகளை நல்ல முறையில் பயிற்றுவித்து அவர்களும் இறைப் பாதையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருப்பார்களேயானால் ‘நாம் இல்லாமல் போய்விடுகின்ற போதும், இவர்கள் எங்களின் இலட்சியப் பணியைத் தொடர்வார்கள். எந்த நிலையிலும் சத்தியத்தின் தீபத்தை அணையாமல் பார்த்துக் கொள்வார்கள்’ என முழுமையாக நம்புவதற்கும் ஆணித்தரமாக நம்புவதற்கும் சாத்தியம் இருக்கின்றது.
*(2). மென்மை, சகிப்புத்தன்மை (Tenderness and benevolence)*
குடும்பத்தார் தொடர்பாக நம்மிடம் கட்டாயமாக இருந்தாக வேண்டிய இரண்டாவது பண்பு மென்மையும் சகிப்புத்தன்மையும் ஆகும். நம்முடைய குடும்பத்தாருடனான நம்முடைய அணுகுமுறையும் நடத்தையும் எந்தவொரு கட்டத்திலும் எந்த வகையிலும் கடுமையானதாய், கசப்பானதாய் அமைந்திடவே கூடாது.
மென்மையால் எல்லாமே அழகு பெறும். எல்லாவற்றிலும் அழகு கூடும். கடுமையோ எல்லாவற்றையும் சீர்குலைத்து சிதைத்து விடும். அலங்கோலமாக்கி விடும்.
வாழ்வை சிக்கல் இல்லாததாய், இணக்கமும் இனிமையும் நிறைந்ததாய் ஆக்குவதில் மென்மைக்கு முக்கியமான பங்கு இருக்கின்றது. மனத்திலும் இயல்பிலும் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிறைந்திருப்பதன் அடையாளம்தான் - தனிச் சிறப்பான அடையாளம்தான் மென்மை என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.
குடும்ப வாழ்வில் மென்மை, பரிவு, கனிவு ஆகியவற்றின் பற்றாக்குறையும் போதாமையும் காணப்படுகின்றது எனில் நாம் நம்முடைய குடும்பத்தை பண்பட்ட, கண்ணியமான, மேன்மையான நடத்தையால், கனிவான, பரிவான சுபாவத்தால், மதிப்பும் மாண்பும் நிறைந்த பழக்கவழக்கங்களால் அழகுபடுத்தத் தவறிவிட்டோம் என்றே அதற்குப் பொருள்.
வாழ்வின் யதார்த்தங்கள் குறித்து விழிப்பு உணர்வுடன் இருப்பது மிக மிக அவசியமாகும். நம்முடைய இயல்போடு இயைந்து போகின்ற நடைமுறையை, நடத்தையை மேற்கொள்வதில் கிஞ்சிற்றும் தயங்கக் கூடாது. நமக்குள் மனித நேயத்தையும் பரிவையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஒருபோதும் நழுவ விடக்கூடாது. நம்முடைய பிள்ளைகளின் கல்வி, தொழில், வணிகம் போன்றவை குறித்து கவலைப்படுவதைப் போன்று அவர்களிடத்தில் இது தொடர்பான விழிப்பு உணர்வையும் இயல்பையும் ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதும் இன்றியமையாததாகும். மேலும் மனிதனுக்கு இறைவன் தந்த தனிச் சிறப்புமிக்க பரிசாக மிளிர்கின்ற மனித மாண்பையும், கண்ணித்தையும் குறித்தும் விழிப்பு உணர்வு பெற்றவர்களாய் அவர்களை மிளிரச் செய்வதிலும் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.
(3). சேவையாற்றுகின்ற உணர்வு (Passion of Service)
குடும்பத்தாரிடம் அவசியம் இருந்தாக வேண்டிய மூன்றாவது பண்பு சேவையாற்றுகின்ற உணர்வும் குணமும் ஆகும். குடும்பத்தில் இருக்கின்ற அனைவரிடமும் இந்த உணர்வு செழித்தோங்குவது அவசியமே. என்றாலும் தாய், தந்தை, மூத்த அண்ணன், மூத்த அக்கா ஆகியோரிடம் இந்த உணர்வு கட்டாயமாக இருந்தாக வேண்டும்.
சேவையாற்றுகின்ற உணர்வில் எந்த அளவுக்கு வலிமையும் சக்தியும் நிறைந்திருக்கின்றது எனில் அது ஒட்டுமொத்த குடும்பத்தையும் வளர்ச்சியின் மிகப் பெரும் உச்சத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.
சேவையாற்றுகின்ற உணர்வு எந்த அளவுக்கு வசியம் நிறைந்தது எனில் அதன் காரணமாக குடும்பத்தில் எந்த வகையான மோதலோ, இழுபறியோ அதிருப்தியோ ஒருபோதும் உருவாகாது.
சேவையாற்றுகின்ற உணர்வின் பயனாக குடும்பத்தாரில் ஒருவர் மற்றவருக்கு இடையில் எத்தகைய நேசமும் அன்பும் பற்றும் பந்தமும் செழித்தோங்குகின்றது எனில் அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது. இதன் விளைவாக குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒருவர் மற்றவருடன் எந்த அளவுக்கு பிணைந்து கொள்கின்றார் எனில் பூவின் இதழ்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு மணம் பரப்புவதைப் போன்று அவர்களின் பந்தமும் பிணைப்பும் மிளிரும்.
நினைவில் வைத்திருங்கள். ஆதாயங்களுக்காக செயல்படுகின்ற, எங்கும் எதிலும் ஆதாயத்தைக் கருத்தில் கொள்கின்ற, ஆதாயங்களை ஆராதிக்கின்ற போக்கு ஒருபோதும் சேவையாற்றுகின்ற உணர்வை மீட்டெழுப்பாது.
அந்த உணர்வைக் கிளறச் செய்வதற்கும் செழித்தோங்கச் செய்வதற்கும் உந்துசக்தியாய் இருப்பது அன்பும் பாசமும் நேசமும், ‘நம்மவர்’ என சொந்தங் கொண்டாடுகின்ற பந்தமும்தாம்.
இங்கே இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்பே தனக்கான இலக்காக, நோக்கமாக இருக்கின்றது. அதனை வேறோர் நோக்கத்தை அடைவதற்கான வழிவகையாக நினைப்பதும் செயல்படுவதும் மிகப் பெரும் பிழையாகும்.
- மௌலானா ஃபாரூக் கான்
தமிழில்: லுத்ஃபுல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am
கவிஞர் சீனி நைனா முகம்மதின் அரிய தமிழ்ப் பணி
September 7, 2024, 9:36 pm