செய்திகள் சிந்தனைகள்
மனிதத் தொடர்புகளின் மூன்று படித்தரங்கள்..! - வெள்ளிச் சிந்தனை
எவருடனும் எவற்றுடனும் தொடர்பு கொள்வதும், தொடர்பை நிறுவிக் கொள்வதும் மனித வாழ்வின் ஒரு தனிச்சிறப்புமிக்க நடத்தையாகும். இதனைப் புறக்கணித்து வாழ்வது சாத்தியமே அல்ல.
ஒருவர் தம்முடைய வாழ்வில் எவருடன், எதனுடன் தொடர்பை வளர்த்துக் கொள்கின்றார், அவருடைய தொடர்பில் வருபவையும் வருகின்றவர்களும் யார் என்பதுதான் அடிப்படையான கேள்வி. அதுமட்டுமல்ல தொடர்புகளிலும் பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன.
தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஒருவர் விழிப்புடன் இருக்கின்றாரா இல்லையா என்பதைப் பொருத்தே அவருடைய வாழ்வில் வெற்றியும் தோல்வியும் நிர்ணயம் ஆகும்.
அவர் தம்முடைய வாழ்வில் எல்லாவற்றுடனும் தொடர்போ, உறவோ ஏற்படுத்திக் கொண்டிருக்க, எவருடன் உண்மையிலேயே தொடர்பை நிறுவி இருக்க வேண்டுமோ அவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அவர் தவறி இருக்கக் கூடாது.
அதன் விளைவாக அவர் வாழ்நாள் முழுக்க செய்த உழைப்பும் முயற்சிகளும் முழுமையடையாமல் அரைகுறையாகத் தேங்கிவிடக்கூடும். அவர் தம்மைத்தாமே வெற்றிகரமான மனிதராகச் சொல்லிக் கொள்ளலாம். அவரைப் பற்றி அறியாத மனிதர்கள் அவரை வெற்றிகரமான மனிதராகக் கருதலாம். ஆனால் உண்மைநிலையை உள்ளது உள்ளபடி பார்ப்பவர்கள் அவரை வெற்றிகரமான மனிதர் என்றே சொல்ல மாட்டார்கள்.
1). வெற்று அறிமுகம் (Introduction)
ஒருவருடனான தொடர்பு அல்லது ஒன்றைப் பற்றிய தொடர்பு சில சமயம் அவரை அல்லது அதனைப் பற்றிய அறிமுகத்தோடு மட்டுமே முடங்கிப் போய்விடுவதுண்டு. எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறித்து அது இன்ன இடத்தில் கிடைக்கின்றது; இன்னின்னவற்றில் பயன்படுகின்றது என்கிற அளவுக்கு நாம் அறிந்துகொள்கின்றோம். அதற்கு மேலாக அதனைக் குறித்து கூடுதலாக ஒன்றுமே தெரியாமலே இருந்து விடுகின்றோம்.
தேனீக்கள் மலர்களிலிருந்து சாற்றை உறிஞ்சுகின்றன; அதிலிருந்து அவை தேனைத் தயாரிக்கின்றன; அந்தத் தேன் நம்முடைய உடல்நலத்துக்கு நலம் சேர்க்கின்ற அருமருந்து; அதனை அப்படியே அருந்துகின்றோம் அல்லது அதனைக் கொண்டு மருந்து, மாத்திரைகளையும் தயாரிக்கின்றோம் என்பதாக நாம் அறிந்து கொள்கின்றோம்.
ஆனால் இந்த விவரங்களையெல்லாம் நல்ல முறையில் அறிந்துகொண்ட பிறகு நாம் தேனைப் பார்க்காமலேயே இருந்து விட்டோமெனில், அதனை ருசிக்கவில்லையெனில், அதனுடான நம்முடைய தொடர்பு வெறும் தகவல்களை அறிந்து கொண்டதாக, அறிமுகம் என்கிற நிலையிலேயே இருந்து விடுகின்றது.
இதே போன்று இந்தப் பேரண்டத்துக்கு ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்பதையும் அவன்தான் நமக்கு வாழ்வைக் கொடுத்தவன் என்பதையும் நாம் அறிந்து கொள்கின்றோம். அவனுடைய அருள்வளங்களின் பின்னணியில் நம்மால் அவனுடைய சாயலைப் பார்க்க முடியும். அவன் நம்முடைய வாழ்வுக்கான குறிக்கோள் ஒன்றை வரையறுத்திருக்கின்றான். அவனுடன் தொடர்பு கொள்ளாமல் நம்மால் அந்தக் குறிக்கோளை வென்றடையவே முடியாது போன்ற விவரங்களையெல்லாம் அறிந்துகொள்கின்றோம். எந்தவொரு மனிதருக்கும் இவையெல்லாமே வெறுமனே தகவல்கள் மட்டும் தாம். வெற்று அறிமுகம் மட்டும்தாம்.
அவர் பேரண்டத்தைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்றும் அவன் வாழ்வில் கடைப்பிடிக்கப்படவேண்டிய நெறிமுறையை வகுத்துத் தந்துள்ளான்; அந்த நெறிமுறையை நடைமுறைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்துக்காகவே அவன் பேரண்டத்தைப் படைத்திருக்கின்றான் போன்ற விவரங்களையெல்லாம் அவன் அறிந்திருக்கின்றான். ஆனால் அதற்கு மேலாக எத்தகைய கூடுதலான விவரங்களையும் அவன் அறிந்திருக்கவில்லை எனில், கூடுதல் விவரங்களை அறிந்துகொள்கின்ற ஆசையும் அவனுக்கு இல்லை எனில், இது போன்ற தொடர்பு பெயரளவிலான தொடர்பாகத்தான் கருதப்படும்.
இந்த மாதிரியான தொடர்பாலும் உறவாலும் மனித வாழ்வில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இவற்றால் எவருடைய வாழ்விலும் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கூட கொண்டு வர இயலாது.
இனிமையான பழங்கள் பற்றிய விவரங்களையும் தகவல்களையும் மட்டுமே வைத்துக்கொண்டு நம்மால் அந்தப் பழங்களின் சுவையையும் ருசிக்க முடியாது; அந்த வெற்று தகவல்களால் நம்முடைய உடல்நலமும் செழிக்காது. மிதமிஞ்சிப் போனால் அவற்றை பொது அறிவுக்கான (எஞுணஞுணூச்டூ ஓணணிதீடூஞுஞீஞ்ஞு) விஷயங்களாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.
இது போன்ற எத்தனையோ தகவல்களை நாம் நம்முடைய மூளைக்குள் சேமித்து வைக்கின்றோம். ஆனால் அவற்றால் நம்முடைய வாழ்வில் எந்தவிதமான நேரடிப் பயனும் கிடைப்பதில்லை.
2). ஒத்துழைப்பு (Co-operation)*
தொடர்பின் இரண்டாவது வகையை நாம் ‘ஒத்துழைப்பு’ என்றே சொல்வோம்.
எடுத்துக்காட்டாக, ஏதேனுமோர் வேலையைச் செய்து முடிப்பதற்காக ஒருவர் திட்டமிடுகின்றார் எனில் அவருடைய திட்டத்தை நிறைவேற்றி முடிப்பதில் நாம் அவருக்கு ஆதரவளிப்பதாகும். ஆனால் திட்டம் வகுப்பவரைக் குறித்தும் திட்டத்தைக் குறித்தும் நாம் நல்ல முறையில் அறிந்திருப்பது அவசியமாகும். மேலும் திட்டத்துக்குப் பின்புலமாக திட்டம் வகுப்பவர் வரையறுத்திருக்கின்ற நோக்கங்களுடன் நமக்கு முழுமையான உடன்பாடு இருப்பதும் அவசியமாகும்.
குர்ஆனை முழுமையாக வாசிக்கின்ற போது வல்லமையும் மாண்பும் நிறைந்த இறைவன் ஒரு மகத்தான திட்டத்தின் கீழ்தான் நமக்கு இந்த வாழ்வை அளித்திருக்கின்றான் என்பது தெரிய வரும்.
மேலும் நம்முடைய வாழ்வுக்கென ஒரு முக்கியமான குறிக்கோள் - மகத்தான, நுட்பமான குறிக்கோள் - இருக்கின்றது என்பதும் நமக்கு விளங்கிவிடும்.
இந்தக் குறிக்கோளின் மூலமாகத்தான் நமக்கு நம்முடைய வாழ்வின் உண்மையான பொருளே பிடிபடும். அது இல்லாமல் போனால் வாழ்வுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகின்றது.
இன்னும் சொல்லப் போனால் வாழ்வின் அழகும் அர்த்தத்மும் நிலைத்திருக்க வேண்டுமெனில் நாம் அதன் குறிக்கோளைப் பற்றிய அறிவையும் உணர்வையும் சுவாசத்துக்கு இணையானவையாய் கருத வேண்டும்.
உயிர் வாழ்வதற்கு எப்படி சுவாசம் இன்றியமையாததாய் இருக்கின்றதோ, முழுக்க முழுக்க அதே போன்று நம்முடைய வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கிக் கொள்வதற்கு நாம் வாழ்வின் உண்மையான இலட்சியத்தை நல்ல முறையில் விளங்கிக்கொண்டிருப்பதும் கட்டாயமாகும்.
ஏனெனில் இதில் இம்மியளவு அலட்சியமாக நடந்துகொண்டாலும் அது ஆன்மாவின் மரணத்துக்கு இணையானதாகும்.
வல்லமையும் மாண்பும் நிறைந்த இறைவன் நம்முடைய வாழ்வை முழுமைப்படுத்தவே விரும்புகின்றான். அந்த ‘முழுமையை’ அடைவதற்காக நாம் நம்முடைய வாழ்வில் நமக்கான பங்கை நிறைவேற்ற வேண்டியிருக்கும்.
இது தொடர்பாக பொருத்தமான, சிறப்பான வழிகாட்டுதல்கள் அனைத்தும் நமக்கு கிடைப்பதற்காக இறைவன் எல்லா ஏற்பாடுகளையும் முழுமையாகச் செய்திருக்கின்றான்.
ஆக, நாம் இந்தக் குறிக்கோளை நம்முடைய குறிக்கோளாக ஆக்கியவாறு அதனை அடைவதற்காக அல்லாஹ்வுக்கு துணை நிற்கின்ற போது, அவனுக்கு எதிராக எதுவும் செய்யாமல், அவனுக்கு மாறு செய்வதை முழுமையாகத் தவிர்க்கின்ற போது, அல்லாஹ்வுடனான எத்தகைய தொடர்பு வலுப்பெறுகிறது எனில் அது ‘ஒத்துழைப்பதற்கான’ தொடர்பாகும்.
நம்முடைய வாழ்வில் இந்த ஒத்துழைப்பு இடைவிடாமல் தொடருமேயானால் அதன் பிறகு நமக்கு வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வின் முழுமையான தோழமை கிடைத்துவிடுகின்றது.
அல்லாஹ்வுடன் ஒத்துழைப்பதில் நாம் வெற்றி பெற்றுவிடுகின்றோம் எனில் இயல்பாகவே அல்லாஹ்வுடனான தொடர்பிலும் உறவிலும் எந்தளவுக்கு ஆழமும் கனமும் கூடிவிடுகின்றதெனில், அதில் எந்த அளவுக்கு இனிமையும் அழகும் கலந்து விடுகின்றதெனில் அதனைச் சொற்களால் விவரிக்கவே இயலாது.
அறிவுக்கான அகராதிகள் அனைத்துமே அந்த உணர்வையும் நிலையையும் விவரிப்பதற்கு இயலாதவையாய்த்தாம் இருக்கும்.
இறைத் தொடர்பின் இந்த தன்மையைத்தான் நாம் இறைநெருக்கம் என்றும் இறை உணர்வில் மூழ்கித் திளைத்தல் என்றும் உருவகப்படுத்துகிறோம்.
3). நெருக்கம் உணர்வில் மூழ்கித் திளைத்தல் (Closeness and Immersion)
தொடர்பின் இந்த மூன்றாவது வகை - அதாவது நெருக்கமும் உணர்வில் மூழ்கித் திளைத்தலும் - மூலமாக நாம் முழுமை என்கிற படித்தரத்தை அடைகின்றோம். இந்தத் தன்மையும் உணர்வும்தாம் இறைவனுக்கு மட்டுமே அடிபணிந்து வாழ்தல் முழுமையடைந்துவிட்டதற்கான சான்றுகள் ஆகும்.
வாழ்வில் எதனை அடைய வேண்டுமோ அதனை நாம் அடைந்து விட்டோம் என்றே இதற்குப் பொருள். எது நடக்க வேண்டுமோ என்று வாழ்நாள் முழுக்கக் காத்திருந்தோமோ அது நிகழ்ந்துவிட்டது என்றே அதற்குப் பொருள்.
இப்போது நமக்குள்ளும் அன்பிலும் இம்மியளவுகூட தொலைவு எஞ்சி இருக்கவில்லை. வாழ்வில் இந்த நெருக்கமும் உணர்வில் மூழ்கித் திளைத்தலும் தமக்குள் எல்லாவற்றையும் - மனித வாழ்வில் எல்லாவற்றையும் விட உயர்வான அனைத்தையும் - குவித்துக் கொள்கின்றது.
இந்த இயல்பையும் தன்மையையும் குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் இது ஒரு ‘மௌனம்’ - மௌனத்தின் உச்சம் ஆகும். சிலர் இதனை ‘தியானம்’ என உருவகப்படுத்துகின்றார்கள்.
மேலும் சிலர் இதனையே ‘சமாதி’ - ‘அனைத்தையும் அர்ப்பணித்தல்’ என்கிற பெயரைக் கொண்டு அழைக்கின்றார்கள்.
இதனுடைய இயல்பு என்னவெனில் இலட்சியமற்ற நிலையிலிருந்து நம்முடைய வாழ்வை இது தூய்மைப்படுத்திவிடுகின்றது.
மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான்
தமிழில்: அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
December 20, 2024, 9:22 am
கவலைகள், தோல்விகள் ஏற்பட்டால் உங்களை நீங்களே மீள்பரிசீலனை செய்து கொள்ளுங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 13, 2024, 7:47 am
நீங்கள் நீங்களாக இருங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 11, 2024, 6:49 pm
பாரதி செல்லம்மாள் சிலை - சிறப்புக் கட்டுரை
December 6, 2024, 7:17 am
பெருமை அடித்துக் கொண்டிருக்காதீர்கள் - வெள்ளிச் சிந்தனை
November 29, 2024, 7:00 am
நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனாகவே இருப்பான்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am