செய்திகள் சிந்தனைகள்
அது ஒரு பழைய மணி பர்ஸ் - கிறிஸ்துமஸ் சிந்தனை
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது.. குனிந்து அதை எடுத்தார்..
அது ஒரு பழைய மணி பர்ஸ்.. ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி, மெருகு குலைந்திருந்தது..
பர்ஸைத் திறந்தார்.. சில கசங்கிய நோட்டுகளும், சில்லறைகளும் இருந்தன.. அத்துடன் ஏசுநாதர் படம் ஒன்றும் இருந்தது..
பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர், "இது யாருடையது?" என்று குரலை உயர்த்திக் கேட்டார்..
ஒரு முதியவர், "அது என்னுடையது" என்றார்.. பர்ஸின் நிலையையும், முதியவரின் வயதையும் கண்டு ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸைத் தந்திருக்கலாம்..
ஆனாலும் பரிசோதகர், "உம்முடையது தான் என்பதற்கு என்ன ஆதாரம்? "எனக் கேட்டார்..
"அதில் ஏசுநாதர் படம் இருக்கும்.."
"இதெல்லாம் ஒரு ஆதாரமா? யார் வேண்டுமானாலும் ஏசுநாதர் படம் வைத்திருக்கலாமே...?"
"ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார்.. வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.. அனைவரும் அவரது கதையைக் கேட்க ஆர்வமாகினர்..
முதியவர் கூறினார் :
நான் படித்துக் கொண்டிருந்த போது என் அப்பா எனக்கு இந்தப் பர்ஸைக் கொடுத்தார்.. அப்பா அவ்வப்போது தரும் சில்லரைகளை இதில் சேர்க்க ஆரம்பித்தேன்..
வீட்டில் தேடிப் பிடித்து என் அப்பாவும், அம்மாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் கண்டு பிடித்து அதில் வைத்தேன்..
நான் வாலிபனானேன்.. பள்ளித் தகவல்களுக்காக என்னைப் புகைப்படம் எடுத்தனர்..
ஆஹா! அரும்பு மீசையும், குறும்புச் சிரிப்புமாக இருந்த என்னை எனக்கே மிகவும் பிடித்தது.. அம்மா அப்பா படத்தை எடுத்து விட்டு என் படத்தை பர்ஸில் வைத்து, நொடிக்கு 100 தரம் பார்த்துக் கொண்டேன்..
சில வருடங்களில் திருமணமாயிற்று.. இப்போது மனைவியின் முகத்தை அடிக்கடி பார்க்க விரும்பினேன்.. பர்ஸில் மாற்றம். என் படம் இருந்த இடத்தில் என் அன்பு மனைவி.. அலுவலக வேலையின் இடையில் பர்ஸைத் திறந்து புகைப்படத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது..
இதெல்லாம் சில காலம் தான்.. எங்கள் அன்பு மயமான வாழ்க்கையின் சாட்சியாக மகன் பிறந்தான்.. பர்ஸில் மறுபடியும் மாற்றம்!
மனைவியின் இடத்தை மகன் ஆக்கிரமித்துக் கொண்டான்... பலமுறை படத்தைப் பார்ப்பதும்,'என் மகன்' என்று மற்றவர்களுக்குக் காட்டுவதும்.. எனக்கு ஒரே பெருமை தான்..
வருடங்கள் ஓடின.. மனைவி காலமானாள்.. என் மகனுக்குத் தன் குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் போதவில்லை.. என்னை எப்படி கவனிப்பது?
என்னைத் தனிமை வாட்டியது.. கூட்டத்தில் தொலைந்து விட்ட குழந்தையாய்த் தவித்தேன் : தடுமாறினேன்.. அப்போது தான் இந்தப் படத்தை ஒரு கடையில் பார்த்தேன்.. அன்பே உருவான ஏசுநாதரின் கண்கள் என் நெஞ்சை வருடின..
அவரது உதட்டின் முறுவல் என் உள்ளத்தில் நேசத்தையும், பாசத்தையும் நிறைத்தது..
சொன்னால் நம்புங்கள், தன் கையை எடுத்து, என் கரம் பற்ற நீட்டினார் ஏசுநாதர்
என் கண்கள் அருவியாய் நீரைச் சொரிந்தன.. உடனே ஏசுநாதரின் படத்தை வாங்கி பர்ஸில் வைத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்..
என் கவலையும் பறந்தது ; தனிமையும் மறைந்தது.. என்றென்றும் எவருக்கும் நிரந்தரமான துணையாக இருப்பவர் இறைவன் மட்டுமே..
முதியவர் நிறுத்தினார்..
பரிசோதகர் நெகிழ்ச்சியுடன் பர்ஸை முதியவரிடம் கொடுத்தார்.
இவ்வளவு தாங்க மனுஷ வாழ்க்கை.இதுக்குள்ள தாங்க இத்தனை போட்டியும், பொறாமையும், மான அவமானங்களும்.
- விமலா ஜெய்கர் வில்சன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 8:38 am
பூனைகளின் Psi-trailing எனும் பின்தொடரும் ஆற்றல் என்ன என்று தெரியுமா?: வெள்ளிச் சிந்தனை
December 5, 2025, 9:14 am
Are you sleeping alone? - வெள்ளிச் சிந்தனை
November 28, 2025, 7:56 am
படைப்பாளன் கண்களை வித்தியாசமாகப் படைத்ததேன்? - வெள்ளிச் சிந்தனை
November 21, 2025, 7:09 am
யார் இவர்? இவரைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது? - வெள்ளிச் சிந்தனை
November 17, 2025, 11:13 pm
SIR தில்லுமுல்லு: தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது எனத் தோன்றுகிறது
November 7, 2025, 8:16 am
அந்த விமான நிலையம் சொல்லும் பாடம் என்ன? - வெள்ளிச் சிந்தனை
October 24, 2025, 7:31 am
