செய்திகள் சிந்தனைகள்
சிறந்தவர் யார்? - வெள்ளிச் சிந்தனை
அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அறிவிக்கின்றார்: ‘மனிதர்களில் சிறந்தவர் யார்?’ என அன்பு நபிகளாரிடம் வினவப்பட்டது.
அன்பு நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘எவர் மக்முமுல் கல்பு கொண்டவராய், உண்மையையே பேசுபவராய் இருக்கின்றாரோ அவர்தாம் (மக்களில் சிறந்தவர் ஆவார்).’
*ஸதூகுல் லிஸான்* - உண்மையை மட்டுமே பேசுபவர் என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது.
ஆனால் 'மக்முமுல் கல்பு' கொண்டவர் என்றால் என்ன? எங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையே. அதனைத் தெளிவுபடுத்துங்களேன்’ என்று மக்கள் கேட்டார்கள்.
அன்பு நபிகளார்(ஸல்) கூறினார்கள்:
‘அவர் தூய்மையான உள்ளத்தைக் கொண்டவர். அவருடைய உள்ளத்தில் எந்தவொரு பாவத்தின் சுமையும் இருக்காது. கொடுமை, உரிமைப்பறிப்பு, வரம்பு மீறல் போன்ற பாரங்களும் இருக்காது.
அவருடைய உள்ளத்தில் மற்றவர்களைப் பற்றி எத்தகைய கசடோ, தூசோ, (வெறுப்போ, குரோதமோ) பொறாமையோ இருக்காது.’
நூல் : இப்னு மாஜா, பைஹகி
இந்த நபிமொழியில் சிறந்த மனிதரைப் பற்றிய சித்திரம் தரப்பட்டுள்ளது. இது தெள்ளத்தெளிவானதாய், முழுமையானதாய் இருக்கின்றது.
மனித ஆளுமையின் எந்தவொரு பரிமாணமும் இந்தச் சித்திரத்தில் விட்டுவிடப்படவில்லை.
மனிதனின் ஆளுமையைச் செதுக்கி, வார்த்தெடுப்பவை 'மனம், நாவு, நடத்தை' ஆகிய மூன்று அடிப்படையான மூலப்பொருள்கள்தாம்.
இந்த நபிமொழியில் இந்த மூன்று மூலப்பொருள்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட *ஆளுமை* பற்றிய சித்திரம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது எந்த அளவுக்கு மனத்தை ஈர்ப்பதாய் இருக்கின்றது எனில் அதன் *உள் அழகும், வெளி வனப்பும்* இரண்டுமே தூய்மையானவையாய், அழகும் நேர்த்தியும் நிறைந்தவையாய் மிளிர்கின்றன.
இந்த ஆளுமையைக் கொண்ட மனிதர்தாம் *சிறந்த மனிதர்* என்பதில் எவருக்கும் எந்தவிதமான ஐயமும் இருக்காது.
நாவிலோ பொய் இல்லை. பேச்சிலோ மோசடி இல்லை. உள்ளமோ வெறுப்பு, குரோதம், பொறாமை, கடுமை போன்ற அனைத்துவிதமான கசடுகளை விட்டும் தூசுகளை விட்டும் குப்பைகளை விட்டும் தூய்மையானதாய் இருக்கின்றது. நடத்தையிலோ வரம்புமீறல், உரிமைப் பறிப்பு, கொடுமை போன்றவற்றின் நிழல்கூட இல்லை. இத்தகைய நிலையில் அந்த மனிதரின் ஆளுமை எந்த அளவுக்கு மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்ளக்கூடியதாய், அழகும் வனப்பும், நேர்த்தியும் நளினமும் நிறைந்ததாய் ஜொலிக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துப் பார்த்துக்கொள்ளலாம்.
இஸ்லாம் எத்தகைய தூய்மையான, அப்பழுக்கற்ற ஆளுமைகளை வார்த்தெடுக்க விரும்புகின்றது என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
இத்தகைய உயர்ந்த ஆளுமையைக் கொண்ட மனிதர்கள் ஒன்று சேர்ந்து கட்டமைக்கின்ற சமூகம் எந்த அளவுக்குத் தூய்மையும் அழகும் நிறைந்ததாய் மிளிரும் என்பதையும் இந்த நபிமொழி நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
தமிழில்: அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
