நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள் - வெள்ளிச் சிந்தனை

சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள்.

அறிவு, அழகு, செல்வம், பதவி போன்றவற்றால் தன்னைப் புகழ்வதும், மற்றவர்களை விட தன்னை சிறந்தவனாகக் கருதுவதும் அல்லாஹ்வின் அருளை மறக்கும் செயல்கள். 

இஸ்லாம் இதனை 'உஜுப்’ (Self Conceit, Self Satisfaction) என்கிறது.
இதனை இருவகையாகப் பிரிக்கலாம்:

1. மற்றவர்களை இழிவுபடுத்தாமல் தன்னைப் புகழ்வது.

2. மற்றவர்களை இழிவுபடுத்தி உண்மையை மறைப்பது.

இரண்டுமே ஆபத்தான மன நோய்கள்.

அல்குர்ஆன் இதனைக் கடுமையாக எச்சரிக்கிறது:

"உங்களை நீங்களே தூயவர்கள் என வாதிடாதீர்கள்!” (53:32)

நபி (ஸல்) கூறினார்கள்: "மூன்று விஷயங்கள் பேரழிவு தரும்: பேராசை, மனோ இச்சை, ஒருவன் தன்னைப் புகழ்ந்து கொள்வது” (ஸஹீஹ் அல்பானி)

இஸ்லாமிய வரலாற்றில் எதிரிகளைவிட முஸ்லிம் வீரர்கள் அதிகமாக இருந்த ஒரே போர் ஹுனைன். ஆனால் அந்தப் போரில் முஸ்லிம்கள் தோல்வியுற்றனர். காரணம், எதிரிகளைவிட நாங்கள் அதிகமாக இருக்கிறோம் என்று ஒருவகை தம்பட்டம் அவர்களிடம் இருந்தது.

அதற்காக அந்தப் போரிலேயே அவர்களுக்கு அல்லாஹ் தகுந்த பாடம் கற்பித்தான்:

"ஹுனைன் போர் நடைபெற்ற அன்று உங்களின் படைப்பெருக்கம் உங்களை பெருமையில் ஆழ்த்தியிருந்தது. ஆயினும் அது உங்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை” (9:25)

சுவனம் குறித்து சுபச் செய்தி சொல்லப்பட்டவர் உமர் (ரலி). ஆயினும் நயவஞ்சகர்களின் பட்டியலில் தமது பெயர் இருக்குமோ என்று அஞ்சிய நிலையிலேயே இருந்தார். அவரிடம் சுய தம்பட்டம் இருக்கவில்லை.

ஆனால் இன்று.. நாங்கள்தான் சத்தியத்தில் இருக்கிறோம்... நாங்கள்தான் தூய சக்தி.. எங்கள் பாதைதான் நேரான பாதை.. என்று தம்பட்டம் அடிக்கும் கூட்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

பிறரால் மதிக்கப்படும் தலைவர்களை பகடி செய்வதும், அநாகரிகமாக கேலி செய்வதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நம்மவர்களும் இத்தகைய இழி செயல்களில் ஈடுபடுவதுதான் பெரும் வேதனை.

தற்பெருமை.. நன்மைகளை அழித்துவிடும், கண்ணியத்தை போக்கிவிடும். எச்சரிக்கை!

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset