நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

எதையும் செய்யாத பெண்ணா? - வெள்ளிச் சிந்தனை

ஸ்பெயினில், 'லா முஜெர் கியூ நுன்கா ஹிசோ நாடா’ என்று அழைக்கப்படும் நெகிழ்ச்சியான சிற்பம் ஒன்று உள்ளது. "எதையும் செய்யாத பெண்" என்று இதற்குப் பெயர்.

தாய்மார்கள், இல்லத்தரசிகள் செய்யும் கண்ணுக்குத் தெரியாத, ஊதியம் பெறாத, வீட்டைக் கட்டிக்கொண்டு அன்றாடம் மன்றாடும் வேலைக்கு இதுவொரு சக்திவாய்ந்த அஞ்சலி.

2001-ஆம் ஆண்டு ஜோஸ் லூயிஸ் பெர்னாண்டஸ் என்பவரால் இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டது.

ஒரு சலவை இயந்திரம், ஒரு வாளி, ஒரு துடைப்பம் இன்னும் பிற வீட்டுப் பொருட்களை முதுகில் குவித்து வைத்திருக்கும், கனமான சுமையைச் சுமக்கும் ஒரு பெண்ணை சித்தரிக்கிறது.

அதே நேரத்தில் அவர் தனது குழந்தைகளின் கைகளையும் பாதுகாப்பாகப் பிடித்திருக்கிறார்.

பெண்கள் தினமும் சுமக்கும் மூன்று மடங்கு சுமையின் சக்திவாய்ந்த படம் இது.

பெண்கள் நீண்ட காலமாக ஊதியம் பெறாமல் செய்யும் பராமரிப்புப் பணியை இது எடுத்துக்காட்டுகிறது.

நமது சமூகத்தில் பெண்களின் அன்றாட வீட்டு வேலைகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதெல்லாம் ஒரு வேலையா என்றும் சிலபோது நிராகரிக்கப்படுகிறது.

இத்தகைய காலாவதியான சிந்தனையை இந்த கலைப்படைப்பு உடைக்கிறது.

வீட்டு வேலையால் ஏற்படும் உடல், உள்ளத்தின் வேதனையை ஒருசேர உணர்த்துகிறது.

தாய்மார்கள், இல்லத்தரசிகளின் பங்களிப்புகள் பெரும்பாலும் மறைக்கப்பட்டே இருக்கும். இந்தச் சித்திரம் அதை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது.

நாம் அவர்களையும் அவர்களின் பணியையும் மதிக்க வேண்டும். அவர்களின் பணி கண்ணுக்குத் தெரியாததுதான்... ஆனால் அது அற்பமானதல்ல! மகத்தானது!!

வீடு பெண்களுக்குச் சொந்தமானது என்று அல்லாஹ் கூறுகின்றான்:

"பெண்களை அவர்களின் இல்லங்களில் இருந்து நீங்கள் வெளியேற்ற வேண்டாம்” (65:01)

அதனால்தான் அவர்கள் இல்லத்தரசிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset