நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பாரதி - காலாவதியான ரொமாண்டிக் பொயட்டா? - மானசீகன்

பாரதியைப் பற்றிய விவாதங்களை ஒற்றைப் புள்ளியிலிருந்து தொடங்குவது சாத்தியமில்லை.

பாரதியை புத்திசாலித்தனமான சனாதனவாதி, முற்போக்காளர், நவ ஆன்மீகவாதி, பெண்ணியவாதி, சாதி மறுப்பாளர், தலித் வெறுப்பாளர், தேசியக் கவி, காலாவதியான ரொமாண்டிக் பொயட்,  நவீனத்துவர் என்று அவரவர் தரப்பிற்கேற்ப வியாக்கியானம் செய்யலாம் . அனைத்திற்குமான தடங்களை அவர் விட்டுச்  சென்றிருக்கிறார் .

பாரதியின் வாழ்க்கை வரலாறு ஒரு புனைவுக்கான அம்சத்துடனேயே திகழ்கிறது. அதனால் கூட  அடுத்த தலைமுறை அவர் மீது தன் கவனத்தைக் குவித்திருக்கலாம். பாரதிக்கும் , பாரதிதாசனுக்கும் கிடைத்த  புகழிலும், கவன ஈர்ப்பிலும் கால்வாசி கூட புதுமைப்பித்தனுக்கும் கு.அழகிரிசாமிக்கும் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கும் உண்டு.  அதற்காக பாரதியைக் கரித்துக் கொட்டுவது நியாயம் இல்லை.

பாரதி கவிதை , உரைநடை இரண்டிலும் வெவ்வேறான மனிதராகவே எனக்குத் தென்படுகிறார். அவருடைய  அரசியல் எனக்கு உவப்பானதல்ல. அவர் திலகரின் ஆள். அவருடைய காலகட்டத்தில் நின்று அவரால் காந்தியை சரியாக மதிப்பிட முடியவில்லை. அதையும் மீறி 'வாழ்க நீ எம்மான்' பாடியிருக்கிறார். ' பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா' என்பது கவிஞனின் அரசியல் சார்பையும் மீறி வெளிப்படுகிற ஆழ்மனதின் தீர்க்க தரிசனம். ஆனால் காந்தி பாரதியை மிகச்  சரியாகக் கணித்து விட்டார். ' இவரை பத்திரமாக பாதுகாக்க தமிழ்நாட்டில் யாருமில்லையா? ' என்பது காந்தியின் வாயில் வெளிப்பட்ட காலத்தின் குரல்.

 வாழ்வின் மீதான கசப்பால் பிறந்த அங்கதத்தை கலையாக்கியவர் என்று  புதுமைப்பித்தனை மதிப்பிட்டால் பாரதியை 'தத்தளிப்பின் கலைஞன் ' என்று நான் அடையாளப்படுத்துவேன்.

மரபும் , நவீனமும் சந்திக்கிற  இடத்தில் அவர் இருந்தார். இந்திய  ஆன்மீகமும், ஐரோப்பிய தாராளவாதமும் முரண்படுகிற புள்ளியில் அவர் நின்றிருந்தார்.

கவிதையும்,  உரைநடையும் கை குலுக்கும் காலகட்டத்தின் மீது அவர் ஏறி அமர்ந்திருந்தார் . ஏகாதிபத்தியமும் ஜனநாயகமும் மோதிக் கொள்கிற களத்தில் அவர் பார்வையாளராக இருந்தார் .

நிலப் பிரபுத்துவத்தின் எச்சமாகவும்  முதலாளித்துவம் கண்டறிந்த முதல் கனியாகவும் அவரே இருந்தார் .

அவருடைய தத்தளிப்புதான் அவரை கலைஞராக்கியது . அந்தத் தத்தளிப்பு மட்டும் இல்லையென்றால் அவர் அந்தக் காலகட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மீக  அறிஞராக  விளங்கி நிறைய சம்பாதித்து சுடுகாட்டில் சாம்பலாகி மறைந்திருப்பார்.

பாரதியின் பலமே அவரது கட்டுப்பாடின்மைதான். நவீனத்துவம் கண்டறிந்த ' சமநிலை ' அவரிடம் இல்லையென்றாலும்கூட  அதை சமப்படுத்துகிற ஏதோ ஒரு பிரவாகம் அவரிடம் இருந்தது.

அவருடைய கவிதையில் படிமங்களைத் தேடுவதைவிட அந்த உணர்வில் கரைவது மட்டுமே அவரைப் புரிந்து கொள்வதற்கான வழி அவரிடமிருந்து.

எழுத்தாளன் தன்னை மறந்த ஒரு தருணத்தில் ஓர் ஆவேசமான நாதஸ்வர  இசையைக் கேட்டு ரசிப்பதற்கு நிகரானதே அவருடைய கவிதைகள். அவை நேரடியாக நம்மிடம் எதுவுமே சொல்வதில்லை.

அவருடைய கவிதைகளில் பெரும்பகுதி அவர் காலத்திலேயே வெறும் பிரச்சாரம்தான். நம்முடைய காலகட்டத்தில்  அவற்றுக்கு  இலக்கிய மதிப்பும் இல்லை . ஆனால், ஒரு நாதஸ்வரம் கேட்ட பிறகு நம் மனதில் உருவாகும் வெறுமை ஆயிரம் கவிதைகளை நம்மில் மலர்த்தி விட முடியும். 

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி  என்கிற  அமீபாக்களிலிருந்துதான் நவீனத்துவம் பரிணமித்திருக்கிறது. ஆனால், அந்த  அமீபா உருவாவதற்கு முந்தைய நீரின் அசைவுதான் பாரதி .

அவருடைய கண்ணன் பாடல்களையும் , பாஞ்சாலி சபதத்தையுமே நான் இப்போது முக்கியமான படைப்புகளாகக் கருதுகிறேன். சிலர் ' குயில் பாட்டைச் '  சொல்வார்கள் 

அழகான  உணர்வுச் சமநிலை கொண்ட காப்பியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாரதி உணர்வுகளின் குவியலாக மாற்றி விடுகிறார் . அதுதான் பாரதி.

அவர் , பால் ஊற்றும் சடங்கின் அமைதியையும், அர்த்தமின்மையையும் குடுகுடுப்பைச் சத்தத்தால் கலைப்பவர் . பாஞ்சாலியை அவர் படைத்துக் காட்டிய விதமும் அற்புதமானது. பெண்ணியம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு காலத்தில் வெளிப்பட்ட பாரதியின் குரல் உண்மையாகவே முக்கியமானதுதான் .

' நாயகன் தாம்தம்மை இழந்த பின்
எனை நல்கும் உரிமை அவருக்கில்லை 
அவர் சூதிலே விலைப்பட்டவர் 
புவி தாங்கும் துருபதன் கன்னி நான்' என்ற வரிகளில் வெளிப்படும் தர்க்கம் அழகானது.

அதற்கு முந்தைய பகுதியிலும் பிந்தைய பகுதியிலும் உணர்வுகளை காட்டாறாக உருமாற்றி ஓட விடும் பாரதிதான் இந்த இடத்தில் பாஞ்சாலியை அவ்வளவு சமநிலையோடு பேச வைக்கிறார் . இடையில் குறுக்கிடும் அவரே கூட சமநிலையில் இல்லை. 

' வீரமிலா நாய்கள்
விலங்காம் இளவரசன் தன்னை அடித்து தராதலத்தில் போக்கி
பொன்னையவள் அந்தப்புரத்தில் சேர்க்காமல்
நெட்டை மரங்களென நின்றிருந்தார் .
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? '

என்றுதான் அவரே ஆவேசமாக உடுக்கடிக்கிறார் . ஆனால் பாஞ்சாலி சமநிலை தவறவில்லை.  அதில் ஒரு நுட்பமும் உண்டு . இப்போது நான் அவன் மனைவி அல்ல . துருபதன் கன்னி ' என்கிறாள்.

கவனிக்கவும் துருபதன் மகள் அல்ல; துருபதன் கன்னியாம் . பெண்ணின் பிறப்புறுப்பை வைத்தே அவளை நிர்ணயிக்கும் உடலரசியலை சர்வசாதாரணமாகக் கடக்கிறார் . அவள்  மனதளவில் ஒருவனை விட்டு விலகி விட்டாள் என்றாலும் வாழாவெட்டி அல்ல ; கன்னிதான் என்கிறார்.

பிறப்புறுப்பை வைத்துப் பின்னப்பட்ட மாயவலைகளை ஒற்றைச் சொல்லால் அறுத்தெறிகிறார்.

பாதிக்கப்பட்ட தரப்பு எப்போதும் தர்க்கப் பூர்வமாகவும் சமநிலையுடனும் பேசுவதே சரி என்கிற அரசியல் பாடமும் இதற்குள் இருக்கிறது. பீஷ்மருடனான பாஞ்சாலியின் உரையாடலும் அப்படித்தான் இருக்கிறது.

அந்தச் சமநிலையே அர்ச்சுனனை, வீமனைக் கிளர்ந்தெழ வைக்கிறது. அவர்கள் எரிந்து முடிந்த பிறகு அந்தச் சாம்பலில் நின்றபடி அவள் ஊழிக்கூத்து ஆடுகிறாள் . ஒருவகையில் பாரதி  வழிபாட்டின் தரிசனத்தை சமகால  அரசியலோடு இணைத்தவன் .

நான் பேச்சுப் போட்டிக்காக படித்த காலத்தில் ரசித்த பாரதி இப்போது என்னிடம் இல்லை.

இவன் வேறு பாரதி.  இந்த பாரதியை தமிழ்நாடு பத்திரப்படுத்த வேண்டியதில்லை.

அவனே இதற்கான மனிதர்களோடு உரையாட வந்து விடுவான் . தீயை மூட்டுங்கள் . விரலை தயார்படுத்துங்கள் . தீண்டும் இன்பம் நந்தலாலாவால் வாய்க்காவிட்டாலும் பாரதியால் வாய்க்கும்.

பாரதியின் கருத்துக்களை மட்டையடியாக விமர்சிக்கிறவர்களைப் பார்த்து நான் பரிதாபம் கொள்கிறேன்.

நவீனத்துவத்தின் எல்லா அறைகளுக்குள்ளும் நுழைந்து,  வெளியேறி முற்றத்துக்கு வாருங்கள் . அவன் அங்கும் கூட காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு புல்வெளியில் அமர்ந்திருப்பான். நாம் நுழைந்து விட்டு வெளியேறிய இடத்தில் நுழையாமலே அமர்ந்திருப்பவன் அவன்.

அது ஒன்றும் தடையில்லை. அவனோடு தாராளமாகக் கதைக்கலாம். அந்தக் கட்டிடத்தை அவனும் அறிந்தவன்தான் .

அவன்தான் சொன்னான் 'இருள் என்பது குறைந்த ஒளி' என்று. 

பாரதியும் நவீனத்துவத்தின் குறைந்த  ஒளிதான் ...

பாரதி நினைவு நாள்.

- மானசீகன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset