நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

போட்டியை எதிர்க்க, சிங்கம் போல் கர்ஜிக்க வேண்டும் - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் 

'பொதுவாக என் மனசு தங்கம்!  ஒரு  போட்டியின்று வந்துவிட்டா சிங்கம்'. இது ஒரு பிரபல திரைப்பாடலின் வரிகள்.

நல்ல மனசு ஒரு மனிதனுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் முதல் வரி, போட்டி உருவானால் அதை துணிந்து எதிர்கொள்ள வேண்டும்; உறுதியோடு செயல்பட வேண்டும்; தயவுதாட்சண்யம் பார்ப்பது கூடாது என்பதை பளிச்சென்று உரைக்கின்றது.

இது போட்டி நிறைந்த உலகம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முண்டிப் பிடித்து உயர வேண்டும் என்று முனைப்புக் காட்டுபவர்கள் முன்பை விட இப்போது அதிகரித்து வருகின்றனர்.

போதும் என்ற மனப்பக்குவம் போய் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற மோகமே முன் நிற்கின்றது. அதிலும் வியாபாரத்தில் வெற்றிக்கான போட்டி சிந்தனை கூடவே தேவைப்படுகிறது. வியாபாரத்தில் போட்டிக்கான களத்தை நான்கு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

ஒன்று :

இடம் : நல்ல வியாபாரம் நடக்கும் இடத்தில்தான் நாலு பேர் போட்டிக்கு வருவார்கள். போட்டிக்கு வருபார்கள் புதுப்புது வியூகங்களுடன் களம் இறங்கும்போது நாம் பழைய பாணியில் பழைய இடத்திலேயே இயங்கினால், போட்டியை சமாளிக்க முடியாது. வியாபார இடம் பற்றிய மாற்று சிந்தனையை போட்டி, வருவதற்கு முன்பு நாமே ஆரம்பித்துவிடுவது நல்லது.

இரண்டு:

விற்பனைப் பொருள் : உருவாக்கம், புத்தாக்கம் என்று பொருள்கள் நாளுக்கு நாள் உருமாற்றங்கள் கண்டு வாடிக்கையாளர்களை இழுக்கின்றன. போட்டிப் பொருள்கள் குவிந்த வண்ணம் இருக்கும்போது, நம் பொருள்களுக்கு மட்டும் மவுசு தொடர்ந்து இருக்கும் என்று எண்ணுவது தவறு. புதுப் பொருள்கள், புதிய மோஸ்தர்களை மற்றவர்கள் கொண்டு வருவதற்கு முன்னர் நாமே அவற்றைப் பற்றி அறிந்து அறிமுகப்படுத்த முந்திக் கொள்வதே சாலச் சிறந்தது.

Top External Business Challenges Today

மூன்று :

விலை: இது வாங்கும் சக்தியையும் பயனீட்டாளர்களின் முடிவையும் நிர்ணயிக்கும் பொருளாதார காரணி. இப்போதுள்ள மந்தமான மற்றும் கடின சூழலில், விலை நிர்ணயம் ஒரு பொருளை இந்தக்கடையில் இந்த இடத்தில் வாங்குவதா இல்லையா என்பதை முடிவு செய்யும். மற்றவர்கள் விலையைக் குறைத்துவிட்ட பின்னர் நாம் அதனைப் பின்பற்றுவது போட்டியின் யதார்த்தத்தை அறியாது செய்யும் செயல். 

நான்கு:

விளம்பரம்: ஒரு காலத்தில் கூவி விற்ற பொருள்களே விற்றன. இன்று விளம்பரமில்லாத வர்த்தகமே இல்லையெனலாம். ஏதாவது ஒரு வகையில் விளம்பரம் செய்துதான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உண்டாகிவிட்டது. அதுவும் இணையவழி விற்பனையும் சேருவதினால், இப் புதிய வழிகளில் தடம் பதிக்காவிட்டால் போட்டியை எதிர்கொள்ள முடியாது. நம் வியாபாரத்தை மற்றவர்கள் தட்டிக் கொண்டு சென்றுவிடுவார்கள். அதற்கு விளம்பர அணுகமுறையை ஆரம்பத்திலேயே உண்டாக்கிவிட வேண்டும்.

எனவே, வியாபாரத்தில் களம் இறங்கிவிட்டால், போட்டியைத் தவிர்க்க முடியாது. எங்கே, எப்படி, எதனைக் கொண்டு போட்டியைத் தொடங்குவது, அல்லது எதிர்கொள்வது என்பதில் தொடர் சிந்தனையும் கவனமும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சொல்லப் போனால் சிங்கம் போல் கர்ஜித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset