
செய்திகள் சிகரம் தொடு
கிரிக்கெட்டிலிருந்து கண்ணீருடன் விடைபெற்ற Brad Hogg
Brad Hogg - 2008 சிட்னி டெஸ்ட் முழுவதும் கண்ணில் கண்ணீருடனே பந்து வீசினார். இத்தனைக்கும் அந்த போட்டியில் 70 ரன்கள் அவர் அடித்திருந்தார். இருந்தாலும் கண்ணீர் நிறைந்த முகத்துடன் ஆஸ்திரேலிய நிர்வாகத்தை சந்தித்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதற்கு ஓராண்டுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் பிரதான ஸ்பின்னர் வார்னே ஓய்வு பெற அந்த இடத்தை ஹாக் பிடித்திருந்தார். ஆனாலும் பிராட் ஹாக் தான் ஓய்வு பெறுவதாக கூறினார்.
காரணம் அவர் மிகவும் நேசித்த காதலி. தனக்கு விருப்பமே இல்லை என்றாலும் காதலியின் வற்புறுத்தல் காரணமாக ஓய்வு பெற்றார் ஹாக். காதலுக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்தார். தனது காதலையே திருமணம் செய்தார். ஆனால் அது அவருக்கு நினைத்தது போல செல்லவில்லை. எங்கோ ஒரு விசயத்தில் ஹாக் தவறான ஆளை தேர்ந்தெடுத்து விட்டார். அதற்காக அவர் கொடுத்த விலை தனது கிரிக்கெட் வாழ்க்கை. பிரச்சனைகள் முற்றி முற்றி இருவரும் பிரிந்தனர்.
ஹாக் தான் மிகவும் நேசித்த கிரிக்கெட், காதல் இரண்டும் இல்லாமல் தனியே நின்றார்.
அந்த break up நடந்த நேரத்தில் ஹாக் முற்றிலும் முடங்கிவிட்டார். குடிப்பழக்கம் அவரை ஆட்கொண்டது. தனது பழைய கிரிக்கெட் வீடியோக்களைக் கூட பார்க்க அவருக்கு தைரியமில்லை. புதிய காதல், புதிய மனைவி என வந்தாலும் அந்த பழைய காதல் கொடுத்த ரணமும் வலியும் அப்படியே இருந்தது.
ஹாக் தன் சுயசரிதையில் இவ்வாறு எழுதுகிறார். "எத்தனையோ முறை கடலுக்குள் நீந்தும் போது ஏதாவது ஒரு பெரிய அலை என்னை அப்படியே அடித்துச் சென்று விடாதா என்று நினைத்துள்ளேன். நானே கூட பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். ஆனால் தைரியம் வரவில்லை".
ஹாகால் தற்காலத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒன்று ஏதோ ஒரு ரூபத்தில் அவரது பழைய வாழ்க்கையை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. மூன்று ஆண்டுகளாக கிரிக்கெட் பேட் பந்தை தொடவில்லை. வேலையில் திருப்தி இல்லை. குடும்பத்தில் ஒரு பிணைப்பு இல்லை. ஏதோ பிறந்துவிட்டோமே என்பது போன்ற வாழ்க்கை.
நம்மில் பலருக்கு இருக்கும் அதே வாழ்க்கை. இப்படி இருக்க, ஒரு குட்டி grade கிரிக்கெட் அணியிடமிருந்து ஹாகுக்கு ஒரு போன் வருகிறது. "எங்களின் வீரர் ஒருவரால் வர முடியவில்லை. நீங்கள் வந்து ஆடித்தர முடியுமா?".
அவரது மனைவி உற்சாகப்படுத்தினார். அவரை சென்று ஆடச் சொன்னார். இம்முறை அவர் மிகச் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து இருந்தார். எந்த ஒரு உறவின் பெயரால் அவரது கிரிக்கெட் முடிவுக்கு வந்ததோ அதே உறவினால் அது துளிர்க்க ஆரம்பித்தது. வாழ்க்கை பிரகாசிக்க தொடங்குவதற்கான முதல் அறிகுறி இது தான். நாம் சரியான தேர்வை செய்துள்ளோம் என்று நமக்கு நாமே ஒரு thumbs up காட்டிக்கொள்ளும் சமயம் தான் எவ்வளவு அழகானது.
அந்த ஆட்டத்தில் எந்த ஒரு பயிற்சியும் இன்றி 96 ரன்கள் எடுத்தார் ஹாக். தன்னுடைய கிரிக்கெட் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை ஹாக் உணர்ந்தார்.
40 வயதில் மீண்டும் பந்தை எடுத்தார். கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் தொப்பையுடன் Instagram-ல் போட்டோ போடும் 42 மற்றும் 44 வயதுகளில் ஆஸ்திரேலியாவுக்காக உலகக்கோப்பை ஆடினார் ஹாக்.
இளைஞர்களே பெரிதாக ஆடும் BBL தொடரில், அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்காக IPL கூட ஆடினார் தனது 46வது வயதில். 48 வயது வரை கிரிக்கெட் ஆடி முழுமையாக ஓய்வு பெற்றார்.
பிரிவு, வலி, துக்கம் எல்லாம் வருவதும் போவதும் தான். அதற்காக இரண்டு துளி கண்ணீரை சிந்தி விட்டு எதிர்காலத்தில் கவனம் செலுத்த சென்றுவிட வேண்டும். மறக்க முடியாது தான்... ஆனால் அந்த நினைவுகள் நம் எதிர்காலத்தை சிதைக்க அனுமதிக்கக் கூடாது. ஏதோ ஒரு தோல்வியையும் ஏமாற்றத்தையும் நினைத்து நினைத்து ஏங்குவதில் என்ன பயன் இருந்துவிடப் போகிறது?
Brad Hogg-ன் வாழ்க்கை அவரது 40ல் துளிர்த்தது. நமக்கு 2025இல் துளிர்க்கட்டும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 25, 2025, 8:58 am
தோற்கும் போதெல்லாம் என் வாழ்வை எண்ணிப் பாருங்கள்: Muneeba Mazari
January 10, 2025, 2:10 pm
கூரையில்லாத பள்ளியில் தமிழ்வழியில் கற்று இஸ்ரோ தலைவராக உயர்ந்த நாராயணன்
September 20, 2024, 7:09 pm
70 லிருந்து 120 கி.மீ வேகத்தில் கார் ஓட்ட யார் காரணம்?
July 3, 2024, 8:18 pm
இலங்கையில் பஸ் ட்ரைவராக இருந்தவர் இன்று கோலியின் அருகில் உலகக்கோப்பையுடன்! யார் இவர்?
November 24, 2023, 12:38 am
மாற்றத்தை எதிர்கொண்டு அழையுங்கள்! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
September 26, 2023, 10:53 am
இளம் வயதில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மோகன தர்ஷினி; தமிழ்ப்பள்ளி மாணவியின் சாதனை
March 20, 2023, 11:31 am