செய்திகள் தொழில்நுட்பம்
அன்றாடத் தொழில்நுட்பத்தில் தமிழ் நுழைந்த கதை - முத்து நெடுமாறன்
தமிழ் மொழியை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றவர். செல்லியல், செல்லினம், முரசு அஞ்சல் நிறுவனர்.Apple தொழில்நுட்ப கருவிகளில் தமிழையும் 13 இந்திய மொழிகளையும் கொண்டு சேர்த்தவர். இன்று உலகம் முழுவதும் இவரது செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன்.
நம் நாட்டின் மூத்த கவிஞர் நெடுமாறன் அவர்களின் புதல்வர்.
இன்று நம் கைப்பேசிகளில் செல்லினம் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து எளிதாக நாம் டைப் செய்து செய்திகளை, தகவல்களை அனுப்பி வருகிறோம் என்றால் அது முத்து எனும் தனி மனிதரின் அறிவியல் தேடலில் விளைந்தது.
அவரது இந்த தொழில்நுட்பக் கட்டுரை நம்பிக்கை வாசகர்களுக்கு பயனளிக்கும். இது சில தொடர்களாக இடம் பெறும்.
அனுப்பி தந்த சிங்கப்பூர் சிராங்கூன் டைம்ஸ் இதழாசிரியர் ஷா நவாஸுக்கு நன்றி.
மின்னிலக்க உலகிலேயே பிறந்து வளரும் இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கணினியிலும் திறன்பேசிகளிலும் தமிழை வாசிப்பதிலோ எழுதுவதிலோ செய்தி அனுப்புவதிலோ பெரிய ஆச்சரியம் இருக்காது. “ஆங்கிலத்தைப் போலத் தமிழும் இருக்கிறது, என்ன பிரமாதம்?” என்று அவர்கள் கேட்கக்கூடும். ஆனால் கணினிக்குள் தமிழ் எழுத்துகள் தானாகப் புகுந்துவிடவில்லை. அதற்கு சுமார் நாற்பதாண்டுகளுக்குமுன் விதைபோட்டவர், இன்றும் தொடர்ந்து அழகிய செடிகளாகத் தமிழெழுத்துகளின் தோற்றத்தை வடிவமைத்து வளர்த்துக்கொண்டிருப்பவர் மலேசியாவின் முத்து நெடுமாறன்.
தமிழ்நாட்டின் உத்திரமேரூரிலிருந்து இவரது தாத்தா மலேசியாவிற்குக் கங்காணியாக வேலை செய்யப் புலம்பெயர்ந்தவர். இவரது தந்தை முரசு நெடுமாறன் தமிழாசிரியர். தாயார் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர். முத்து நெடுமாறன் தமிழ்ப்பற்று ஊறியிருந்த குடும்பச் சூழலில் வளர்ந்தார். அதனால் எதையும் இயல்பாகவே தமிழ்க் கண்ணோட்டத்துடன் அணுகினார்.
தொடக்கப்பள்ளிக் காலத்திலிருந்தே எழுத்துருக்களின் மீதும் அவற்றின் அமைப்புகளின் மீதும் தணியாத ஆர்வம் கொண்டார். அப்போது கணினி வந்திருக்கவில்லை. பின்னாளில் கணினிப் பொறியியலாளராக ஆனபோது தமிழ் எழுத்துகளைக் கணினிக்குள் கொண்டுவந்தார். இன்று இக்கட்டுரையை நீங்கள் தமிழில் இலகுவாக வாசிப்பதற்குப் பின்னால் முத்து நெடுமாறனின் தீராத ஆர்வமும், தனிப்பட்ட பெருமுயற்சியும், அயராத நெடுங்கால உழைப்பும் மறைந்திருக்கிறது.
எழுத்து வடிவங்களைக் குறித்த தன் இளமைக்கால ஆர்வம், தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தக்க தமிழை ஈடுகொடுக்கவைக்க எதிர்கொண்ட சவால்கள், கட்டம் கட்டமாக அடைந்த வளர்ச்சிகள், இன்றைய நிலை, எதிர்காலத் திட்டங்கள் என்று இங்கே நம்மிடம் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைப் பகிர்ந்துகொள்கிறார் முத்து நெடுமாறன்.
எழுத்துகளின் வரிவடிவம் என்பதை நான் முதன்முதலில் உற்றுப் பார்த்தது என் தொடக்கப்பள்ளியில்தான் (1968-69). வரிவடிவம் (typeface), எழுத்துரு (font), வடிவமைப்பு (design) இவற்றைக் குறித்தெல்லாம் எனக்கு அப்போது அறவே ஏதும் தெரியாது. என்னுடைய ஆசிரியர் செகு தாமீன் (Chigku Mohn Tamin) ஆங்கில எழுத்துகளை எழுதுவதற்குப் பயிற்றுவித்தார்.
எனக்கு எழுத்துகளின் வடிவத்தைவிட ஆங்கிலத்திலுள்ள 26 எழுத்துகளும் ஒரு செவ்வக வடிவத்திற்குள் சென்று அமர்ந்துவிடும் அழகு ஏதோ மாயாஜாலத்தைப் போல இருந்தது. அவற்றுடன் புழங்கத் தொடங்கினேன். அப்போதே சில சோதனைகளும் செய்தேன் எனலாம். எடுத்துக்காட்டாக, ‘M’ என்ற எழுத்துக்குப் பிற எழுத்துகளைக் காட்டிலும் கொஞ்சம் அதிக இடம் தேவைப்பட்டது. ஆனாலும் அதைப் பிற எழுத்துகளைப் போலவே ஒரே சீரான அளவில் தோன்றச்செய்ய வேண்டியிருந்தது. அதை நானாக முயன்று வரைந்து ஆசிரியரிடம் காட்டினேன்.
என் தந்தையார் ஆழ்ந்த பற்றுள்ள தமிழாசிரியர், அற்புதமான பாடலாசிரியர். இனிமையான சிறுவர் பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ‘ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்பதுபோல அவர் பிற பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பாடம் கற்பிப்பதைக் கேட்டுக்கேட்டு என் தமிழறிவும் ஆர்வமும் தானாகவே வளர்ந்தன. அவர் தமிழ் அமைப்புகளிலும் செயலாற்றினார்.
என் தந்தையின் பெயர், முகவரியைத் தலைப்பில்கொண்ட கடிதத்தாள்களை (letterheads) உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. கையால் எழுதுவதற்கு பதிலாக நாளிதழ்களிலிருந்து வெட்டியெடுத்த தனித்தனி எழுத்துகளை வரிசைப்படுத்தி அவற்றை உருவாக்கினேன். அப்போது 70களில் கணினி இல்லை. அன்றைக்கு இருந்த அதிநவீனத் தொழில்நுட்பம் ஒளிப்பிரதி எடுக்கும் இயந்திரம்தான் (photocopier). ஆனால் சாதாரண வெள்ளைத்தாளில் நகல் எடுப்பது போலல்ல. அந்த வசதி பின்னாளில்தான் வந்தது. அப்போது நகல் எடுப்பதற்காகவே தயாரிக்கப்பட்டத் தாள்களைப் பயன்படுத்தவேண்டும். அவற்றில் ஒருவகை வேதிப்பொருள் பூசப்பட்டிருக்கும். அசலில் உள்ள கருமை, நகலிலும் விழ இந்தப் பொருள் உதவும்.
பிறகு ‘லெட்ராசெட்’ (letraset) எனப்பட்ட எழுத்துச் சட்டகங்கள் வந்தன. அவை விலையுயர்ந்தவை, ஒருமுறைதான் பயன்படுத்தலாம். அதுபோன்ற பிரச்சனைகள் ஒருபக்கம் என்றால் அவற்றில் தமிழ் எழுத்துகள் இல்லை என்பதுதான் முக்கியப் பிரச்சனை. அதற்கு ஒரு சுற்றுவழித் தீர்வாக இருந்தது கைகளால் சுற்றிப் பிரதியெடுக்கும் ‘சைக்ளோஸ்டைல்’ (cyclostyle) இயந்திரம். அதன் வெட்டுத்தாளில் (stencil) பேனா போன்ற ஒரு கோலைக்கொண்டு எழுதினால் எழுத்துகள் கீறல்களாக விழுந்துவிடும். அக்கீறல்கள் வழியாக உருளையிலுள்ள மை வெளியேறி எழுத்துகளாக வெள்ளைத்தாளில் படியும். அதோடு ஒவ்வொருமுறை அச்சிட்டு முடிக்கும்போதும் கையெல்லாமும் மை படிந்துவிடும்.
வெட்டுத்தாளிலும் தமிழைக் கையால்தான் எழுதவேண்டும். ஆங்கிலத்திற்கும், ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துவதால் மலாய் மொழிக்கும், தட்டச்சு செய்யமுடிந்தது. அதனால் சைக்ளோஸ்டைல் அச்சுப் பிரதிகள் தெளிவாக இருந்தன. கையால் எழுதும்போது வெட்டுத்தாள் பல இடங்களில் கிழிபடும். பிறகு கிழிந்த இடங்களை ஒருவகை கோந்து வைத்து ஒட்டவேண்டும். அப்போதும் எழுத்துகள் தெளிவாக இரா. இப்படியாக ஏகப்பட்ட பிரச்சனைகள்!
பிறகு ஒரு தமிழ்த் தட்டச்சு இயந்திரம் எங்கள் வீட்டுக்கு வந்தது. சொந்த இயந்திரம் அல்ல, என் தந்தை செயலாளராக இருந்த ஓர் அமைப்புக்குச் சொந்தமானது. மலேசியாவில் மொத்தமாகவே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தமிழ்த் தட்டச்சு இயந்திரங்கள் அப்போது இருந்திருக்கும். நான் விரைவிலேயே அதில் தட்டச்சு செய்யத் தானாகவே கற்றுக்கொண்டேன். என் தந்தை பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிய நாடக வசனங்களை நான் உற்சாகத்தோடு தட்டச்சு செய்தேன். கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பெற்ற பெரும் விடுதலையை உணர்ந்து அனுபவித்தேன்.
நான் 70களின் பிற்பகுதியில் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது ‘மாணவர் பண்பாட்டு விழா’ ஆண்டுதோறும் கிள்ளானில் நடக்கும். ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகளை உள்ளடக்கிய அவ்விழாக்கள் மாணவர்களின் உற்சாகமான பங்கேற்புடன் ஒருமாதம் நடக்கும். மாத இறுதியில் பல போட்டிகளிலும் வெற்றிபெற்றோருக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் ஒரு விழாவில் வழங்கப்படும். அவ்விழாக்களுக்கு பின்புலத் திரைகளில் பெரிய எழுத்துகளை எழுதவேண்டும். அதில் எனக்கு ஆர்வம் உண்டானது. அச்சில் வந்த பெரிய எழுத்துகளைப் பார்த்து ஓர் எழுத்தில் எங்கே மெலிதாகவும் எங்கே தடிமனாகவும் எழுதினால் தெளிவும் அழகும் கூடும் என்றெல்லாம் ஓரளவுக்குத் தெரிந்துகொண்டேன். அப்போது எழுத்துருக்களில் ‘வேறுபாடு’ (contrast) செய்வது குறித்தெல்லாம் ஏதும் தெரியாது.
அந்தப் பண்பாட்டு விழாக்களுக்கான விழாமலர் உருவாக்கம்தான் என்னை முதன்முதலில் தமிழ் அச்சு குறித்துத் தீவிரமாக சிந்திக்க வைத்தது. மலாய், ஆங்கிலத்திற்கு ஒரு பக்கத்திற்கு 7 ரிங்கிட். ஆனால் தமிழுக்கு 35 ரிங்கிட். ஒருமுறை அச்சுக் கோர்த்துவிட்டால் பிழையாக இருந்தாலும் மாற்றமுடியாது. ஒரேயொரு எழுத்துரு, வரிவடிவம்தான். இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்றொரு வேகம் வந்தது. இந்தத் தடையை உடைத்தால்தான் தமிழில் எழுத்துகள் பெருகும்; தமிழுக்கான இடம் நிலைக்கும் என்றும் தோன்றியது.
பல்கலைக்கழகத்தில் சேர்ந்தபிறகும் அந்த சிந்தனை என்னைத் தொடர்ந்து அரித்துக்கொண்டே இருந்தது. பல்கலையில் முதல் ஆண்டைக் கோட்டைவிட்டேன். ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ் இருவரும்கூட அவரவர் பட்டப்படிப்பில் முதல் ஆண்டைக் கோட்டை விட்டவர்களே. ஏனோ அப்படியொரு ஒற்றுமை! அதுபோகட்டும். கணிப்பொறியியலில் பட்டம்பெற்று 1985-இல் நான் வெளிவந்தபோது தமிழ் அச்சுக்கலையை அடியோடு மாற்ற ஏதாவது செய்யவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன்.
(தொடரும்)
தொடர்புடைய செய்திகள்
November 10, 2024, 2:57 pm
WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்
November 6, 2024, 3:12 pm
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
November 1, 2024, 10:38 am
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
October 29, 2024, 12:54 pm
ஆப்பிள் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
October 18, 2024, 8:32 am
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
October 8, 2024, 9:07 pm
போட்டி நிறுவனங்களின் செயலிகளுக்கு Google playstoreஇல் இடம்தர வேண்டும்: Googleக்கு நீதிமன்றம் உத்தரவு
September 20, 2024, 12:43 pm
சமூக ஊடகங்களில் அழகை அதிகரித்துக் காட்டும் Filters அடுத்தாண்டு முதல் நீக்கப்படும்: மெட்டா தகவல்
September 10, 2024, 5:26 pm
செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் iPhone 16-யைப் பொதுமக்கள் வாங்கலாம்
August 28, 2024, 1:13 pm
ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 16 செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது
August 13, 2024, 6:57 pm