நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

’’நீ முகம் பார்க்கும் கண்ணாடி பார்ப்பதுண்டா?’’ - லோகநாயகி ராமச்சந்திரன்

’’நீ முகம் பார்க்கும் கண்ணாடி பார்ப்பதுண்டா?’’ கேட்டாள் அவள்.

‘’அதென்ன அப்படி கேட்டு விட்டாய்? இந்த உலகில் எல்லோருமே முகம் பார்க்கும் கண்ணாடி பார்க்கத்தான் செய்வார்கள்.. பிறகு எப்படி நம் முகத்தைப் பார்த்துக் கொள்வது?’’ என்றான் அவன்.

‘’அது உன் சொந்த முகம்தானே? இதோ எதிரில் இருக்கும் என் முகம் அல்ல, பக்கத்தில்  இருக்கும் உன் தங்கை முகம் அல்ல..  உன் சொந்த முகம் பார்த்துக் கொள்ளவே எதற்கு ஒரு கண்ணாடி?’’ என்ற அவள் சொன்னாள்..

‘’இத்தனைக்கும் உன் இதயம் போல், உன் கிட்னி போல், உன் முகம் உனக்குள் எங்கோ புதைந்து போய் இருக்கவில்லை.. மிக வெளிப்படையாக, உடம்பில் வெளியே தெரியும்படியான ஒரு அங்கமாகத்தானே உன் முகம்  இருக்கிறது. அப்படியிருந்தும் அதைப் பார்க்க கண்ணாடி தேவைப்படுகிறதே!’’

’’ஆமாம், வெளியே இருக்கும் ஒரு அங்கமாக இருந்தாலும், என் முகம் என் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்கிறதே.. ஒரு கண்ணாடி இருந்தால்தான் என் முகம் எப்படியிருக்கிறது என்று  எனக்குத் தெரியும்!’’ என்றான் அவன்.

’’வெளிப்படையாக இருக்கும் உன் சொந்த முகம் பார்க்கவே  உனக்கு ஒரு கண்ணாடி தேவை என்கிறபோது, உனக்குள் மறைந்திருக்கும் உன் திறமைகள், உன் பலம் உனக்கு எப்படி முழுசாகத் தெரியும்? திடீரென்று உன் அப்பா தவறியபோது நீ இருந்த நிலை ஞாபகம் வருகிறதா?’

‘’ஆமாம், என் தங்கை திருமணத்தை நானே முன்னின்று  எடுத்து செய்ய வேண்டி இருந்தது.  தயக்கமும் கூச்ச சுபாவமும் கொண்ட நான் இவ்வளவு பெரிய பொறுப்பை எப்படி  எடுத்துச் செய்வது என முதலில் சற்று பயந்தேன்! அப்புறம் ரொம்ப சிறப்பாக நடத்த முடிந்ததே.. என் அம்மாவும் உறவினர்களும் நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டார்களே.."

"ஆமாம்"

"பல உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் நான் கேட்டதும் பல உதவிகள் வந்தன.. பிறகு பதிலுக்கு நான் பலருக்கும் உதவவும் அதன்பின்பு எனக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தது. நான் இத்தனை அனுசரணையானவனா என்று எனக்கே அப்போதுதான் தெரிய வந்தது..

‘’ஓ!’’

’’சொல்லப்போனால், நான் ‘கூட்டத்தைப் பார்த்தால் கூச்சத்துடன் ஒதுங்கிப் போய்விடுவேன்’ என்றுதான் என்னைப் பற்றி நான் அத்தனை நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அந்த எண்ணமே  மாறி, நானும் நல்ல நிர்வாகத் திறமை கொண்டவன்தான்!’  என்று எனக்கு என் உண்மையான பலத்தை புரிய வைத்தது அந்த சந்தர்ப்பம் தான்...’’ சொன்னான் அவன்.

‘’அதேதான்.. அதேதான். இப்போது முகம் பார்க்கும் கண்ணாடி உதாரணத்தை மறுபடி ஞாபகப்படுத்துகிறேன். நம் முகம் வெளித் தெரியும் ஒரு உடலுறுப்பாக  இருந்தாலும் நம் முகத்தை நாம் பார்க்க எப்படி வாழ்க்கையில் நமக்கு ஒரு கண்ணாடி தேவையாக இருக்கிறதோ, அப்படி நம் பலத்தை நமக்கே தெரிய வைக்கும் ’கண்ணாடி’  போல இருப்பவை, நம் வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும்தான் !’’ என்றாள்.  
பிறகு சொன்னாள்..

‘உலகில் மிக முக்கியமானது வெற்றி அல்ல.. நம் பலத்தை, நம் பலவீனத்தை நாம் உணர்வதுதான். அதுதான் உலகின் மிக பலமிக்க ஆயுதம்! காரணம், அதுதான் அடுத்தடுத்து வாழ்க்கை முழுக்க தொடர்ந்து எல்லா விஷயங்களிலும் பல வெற்றிகளை நாம் பெற உதவும்!.’’ என்றாள் உறுதியான குரலில்...

- லோகநாயகி ராமச்சந்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset