நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏற்றுமதி பொருட்களின் கண்காணிப்பை மலேசியா கடுமையாக்க வேண்டும்; அரசாங்க வருவாய் இழப்பைத் தடுக்க இந்தோனேசியாவைப் பின்பற்ற வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்

கோலாலம்பூர்:

அரசாங்கத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்கும் வகையில், செம்பனை எண்ணெய், பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய பொருட்களின் ஏற்றுமதி கண்காணிப்பை மலேசியா மேலும் கடுமையாக்க வேண்டும்.

மேரிடைம் நெட்வோர்க்  நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் உண்மையான மதிப்பைவிடக் குறைவான தொகையை விலைப்பட்டியலில் குறிப்பிடும் முறைகேடுகளால் அரசாங்கத்திற்கு வரி, சுங்க வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க இந்தோனேசியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, மலேசியாவும் தனது தற்போதைய ஏற்றுமதி கண்காணிப்பு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

மலேசியாவில் பல்வேறு மின்னணு கண்காணிப்பு முறைகளும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகளும் செயல்பட்டு வந்தாலும், அவற்றுக்கிடையிலான தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இந்தோனேசியா தனது டிஎஸ்ஐ அமைப்பின் மூலம் ஆரம்பக்கட்டமாக சுமார் 6,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிலக்கரி, செம்பனை எண்ணெய் மற்றும் பெரோ அலாய் ஏற்றுமதிகளைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளதாக புளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு டன் பொருளுக்கும் சில அமெரிக்க டாலர்கள் சேவைக் கட்டணமாக வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான கட்டண விவரங்கள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு, 2027 ஜனவரி மாதம் முழுமையான செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக ஏற்றுமதி ஆவணங்களில் குறிப்பிடப்படும் பொருட்களின் அளவு மற்றும் மதிப்பு, உண்மையில் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்குகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜெயந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset