நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்மொழி பாட நேரத்தை குறைக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: பிரதமர், கல்வி அமைச்சருக்கு டத்தோஸ்ரீ சரவணன் கடிதம்

கோலாலம்பூர்:

தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழி பாட நேரத்தை  குறைக்கும் கல்வியமைச்சின் முன்மொழிவுக்கு மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக்கிற்கு இன்று கடிதம் எழுதியுள்ள அவர், அதன் நகலைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் அனுப்பியுள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்ட மறுசீரமைப்பின் கீழ் தமிழ்மொழிப் பாடவேளைகளைக் குறைக்கும் திட்டம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள், இந்தியச் சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வாரத்திற்கு 12 பாட வகுப்புகளாக உள்ள தமிழ்மொழிப் பாட நேரத்தை தற்போது 10 வகுப்புகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்மொழி என்பது உரையாடலுக்கான மொழி மட்டுமல்ல. மாணவர்களின் அறிவாற்றல், உணர்வுப்பூர்வ வளர்ச்சி, நற்பண்புகள், கலாசார அடையாளம், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் இம்மொழி முக்கியப் பங்கை வகிக்கிறது.

புதிய பாடங்களைஅறிமுகப்படுத்துவதற்காகத் தாய்மொழிப் பாட நேரத்தை ஒருபோதும் குறைக்கக் கூடாது.

தற்போதுள்ள 12 பாட வகுப்புகளுக்கான நேரம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் கல்வியமைச்சு முன்மொழிந்துள்ள ஆளுமை உருவாக்கம் (Character Building) பாடத்திட்டத்தை நன்னெறி கல்வி பாடவேளைகளுடன் இணைத்து செயல்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

இதன் மூலம் தமிழ்மொழிப் பாட நேரம் பாதிக்கப்படாமல் ஆளுமை உருவாக்கத்தை முன்னெடுக்க முடியும் என்று அவர் கூறினா.

இதற்கிடையே சீன ஆரம்பப் பள்ளிகளிலும் மாண்டரின் மொழிப் பாட நேரங்கள் குறைக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள துணைக் கல்வியமைச்சர் வோங் கா வோ,

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் பாடவேளைகளை ஒதுக்கும் அதிகாரம் இருப்பதாகவும், சீனமொழிப் பாடத்திற்குக் கூடுதலாக இரண்டு பாடவேளைகளை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தலைமையாசிரியர் அமைப்புகளுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

_ பார்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset