நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாள வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட 28 குடும்பங்களுக்கு பெர்கேசோவின் இழப்பீடுகள் வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

நேப்பாளம் – திபெத் எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட 28 குடும்பங்கள் பெர்கேசோவின் நிதியுதவியைப் பெறத் தகுதி பெற்றுள்ளன

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்ட 54 பேரின் விவரங்களைப் பெர்கேசோ ஆய்வு செய்ததில், அவர்களில் 28 பேர் பங்களிப்புத் தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள 28 குடும்பங்களுக்கும் தலா 3,000 ரிங்கிட் அவசரகால நிதியுதவி வழங்கப்படும்.

மேலும், அவர்கள் பெர்கேசோவின் இயலாமை ஓய்வூதியத் திட்டத்தின் (Skim Keilatan) கீழ் சார்ந்தோர் ஓய்வூதியத்தையும் (Pencen Penakat) பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

தேவையான தகவல்கள் ஆவணங்கள் முழுமையாகச் சமர்ப்பிக்கப்பட்டதும் அதற்கான பணம் வழங்கப்படும் என்றார்.

கோலாலம்பூரில் உள்ள பெர்கேசோ தலைமையகத்தில் நடைபெற்ற வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பெர்கேசோ குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஜீஸ் முகமதுவும் கலந்து கொண்டார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கண்டறிந்து அவர்களின் விவரங்களை விரைவாகச் சேகரித்த பெர்கேசோவின் சிறப்புக் குழுவினருக்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

தகுதியுள்ள எந்தவொரு குடும்பமும் சமூகப் பாதுகாப்பிலிருந்து விடுபடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இதுவரை பெர்கேசோவில் பங்களிப்புப் பதிவுகள் இல்லாத பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்காக 130 தொடர்புடைய முகமைகள் உட்பட 990 மூலோபாயப் பங்காளிகள் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு, சமூக ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset