நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் “Deepavali” என்ற சொல்லின் பயன்பாட்டை நிலைநிறுத்துவோம்: மலேசிய இந்து சங்கம்

கோலாலம்பூர்:

மலேசியாவில் “தீபாவளி” என்ற சொல்லின் பயன்பாட்டை நிலைநிறுத்துவோம் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கூறினார்.

தேசிய அளவிலான இந்து சமய, பண்பாட்டு அமைப்பு என்ற வகையில், இந்து சமய விழாக்கள் மற்றும் மரபுகள் தொடர்பான விவகாரங்களில் தெளிவையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாக மலேசிய இந்து சங்கம் கருதுகின்றது.

அந்த வகையில், இந்துக்களின் முக்கியமான சமயத் திருநாளான தீபாவளியைக் குறிப்பிடுவதில் “Deepavali” மற்றும் “Diwali” ஆகிய சொற்களின் பயன்பாடு தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளுக்குத் தெளிவளிப்பது அவசியமெனச் சங்கம் கருதுகின்றது.

“தீபாவளி”, “திவாலி” ஆகிய இரு சொற்களும் ஒரே புனிதமான இந்துத் திருநாளைக் குறிப்பவை என்பதுடன், மொழி மற்றும் பண்பாட்டு அடிப்படையில் இரண்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கவையாகும்.

இவை இந்து சமய மரபுகளின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கின்றன.

இருப்பினும், “தீபாவளி” என்ற பெயர் மலேசியாவின் வரலாற்று, பண்பாட்டு மற்றும் தேசிய அடையாளத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. 

குறிப்பாக, பெரும்பான்மையாக விளங்கும் தென்னிந்திய வம்சாவளி இந்துச் சமூகத்தினரால் பல தலைமுறைகளாக இப்பெயர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

மேலும், 1951ஆம் ஆண்டு விடுமுறைச் சட்டத்தின் (Holidays Act 1951 – Act 369) முதலாவது அட்டவணையிலும் “Deepavali” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மலேசியாவின் அதிகாரப்பூர்வ நடைமுறையில் இப்பெயர் நீண்டகாலமாக நிலைபெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றது.

காலங்காலமாக நிலைபெற்றுள்ள பண்பாட்டு மரபுகளும் தேசிய நடைமுறைகளும் படிப்படியாக மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மலேசிய இந்து சங்கம் உறுதியாக உள்ளது. 

எனவே, அரசாங்கத் துறைகள், ஊடகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் தங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், வாழ்த்துச் செய்திகள், பதாகைகள், பொதுக் கொண்டாட்டங்களில் “Deepavali” என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்துமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset