நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரந்தாவ் ஆற்றோர நீர்த்தேக்கத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மாடு வளர்ப்பாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு; பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: டத்தோ மோகன்

சிரம்பான்:

ரந்தாவ், லிங்கி ஆற்றோரத்தில் செயல்படுத்தப்படும் ஆற்றோர நீர்த்தேக்கத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாடு வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரின் இந்திய சமூக விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகர் டத்தோ வி.எஸ். மோகன் இதனை தெரிவித்தார்.

அப்பகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக மாடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் 18 மாடு வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பாக, நேற்று அவர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலில் நெகிரி செம்பிலான் மாநில நிலம் மற்றும் சுரங்கத்துறை, சிரம்பான் மற்றும் போர்ட் டிக்சன் மாவட்ட நில அலுவலகங்களின் அதிகாரிகள், சைன்ஸ் நீர் நிறுவன அதிகாரிகள், சூத்ராகோம் நிறுவனத்தின் நிர்வாகப் பிரதிநிதிகள் மற்றும் 18 மாட்டுக் கொட்டகைகளின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் காரணமாக அங்குள்ள மாட்டுக் கொட்டகைகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட வளர்ப்பாளர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்களது தொழிலைத் தொடர்ந்து மேற்கொண்டு வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தையின்போது, மாடு வளர்ப்பாளர்கள் தங்களது தொழிலைத் தொடரும் வகையில், மேம்பாட்டுப் பகுதியில் அருகிலுள்ள மாற்று இடத்தில் புதிய மாட்டுக் கொட்டகைகளை அமைத்துக்கொள்ள வாய்ப்பு வழங்குவதாக மேம்பாட்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

முக்கியமாக, நீண்டகாலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் 18 மாடு வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும் என்றார்.

மேலும், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட மாடு வளர்ப்பாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset