நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜப்பானில் கைது செய்யப்பட்ட ஐந்து மலேசியர்கள்: விசாரணை நடத்த புக்கிட் அமான் போலிஸ் தனிப்படை ஜப்பானுக்கு விரைந்தது 

கோலாலம்பூர்: 

ஐப்பானில் உள்ள ஹனடோ சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5KG கொகைன் போதைப்பொருளை கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் 5 மலேசியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புக்கிட் அமான் காவல்துறை ஜப்பானுக்கு ஒரு விசாரணைக் குழுவை அனுப்பியுள்ளது. 

இந்த கைது நடவடிக்கை தொடர்பாக ஜப்பானிய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்த மலேசிய காவல் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கும் மலேசியாவிலும் சர்வதேச அளவிலும் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் இந்த சிறப்புப் படையினர் தீவிரமாக ஆராய்வர் என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசேன் ஒமர் கான் தெரிவித்தார்.

அதே வேளையில், பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து ஜப்பானிய அதிகாரிகளும் தனி விசாரணை நடத்தி வருவதாக 'பெர்னாமா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று, ஜப்பானிய அதிகாரிகள் சந்தேக நபர்களின் காலணிகளின் உட்பகுதியில் (அடிப் பாகத்தில்) மறைத்து வைக்கப்பட்டிருந்த கொகைன் போதைப்பொருளைக் கண்டுபிடித்ததை அடுத்து இந்த 5 மலேசியர்களும் கைது செய்யப்பட்டனர்.

19 முதல் 26 வயதுக்குட்பட்ட இரு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்கிய இந்த குழுவினர், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KLIA) இந்த போதைப்பொருளைக் கடத்திச் சென்றதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மலேசிய காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பைக் கண்டறியும் நோக்கோடு தங்களின் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தெரியாத நபர்களிடமிருந்து எந்தவொரு பொருளையும் அல்லது பைகளையும் வாங்கிச் செல்ல வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ஜப்பானிய அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு விசாரணை, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவர்களைக் கைது செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset