நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமையும் கல்விச் சாதனையும் ஒருங்கிணைந்த மீலாதுன் நபி விழா; ஷேக் அகார் முஹம்மதின் எழுச்சி உரை 

கோலாலம்பூர்:

மக்களின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தலைநகர் மாட்ரேட் சென்டரில் நடைபெற்ற மாபெரும் மீலாதுன் நபி பெருவிழாவில் சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், எஸ்.பி.எம். இறுதித் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களும் சிறப்பிக்கப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அஸ்மி சதக்கத்துல்லாஹ் தெரிவித்தார்.

சிலாங்கூர் முஸ்லிம் முன்னேற்ற சங்கமும் அல் மதரசத்துல் முஹம்மதியாவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த உத்தம நபி (ஸல்) உதய தின விழா, சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வு கடந்த 31 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், சங்கத் தலைவர் ஹாஜி ஹாஜா நஜ்முத்தீன், மதரசா தலைவர் ஹாஜி இப்ராஹிம் ஆகியோரின் சிறப்பான வழிகாட்டுதலின் கீழ் விழாக் குழுவினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததாகவும் அஸ்மி கூறினார். 

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக சர்வதேச மார்க்க அறிஞரும் இலங்கை நளீமியாப் பல்கலைக்கழகத்தின் இயக்குநருமான அஷ் ஷேய்க் அகார் முஹம்மது சிறப்புரையாற்றினார். பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வியல் வழிமுறைகளை எடுத்துரைத்தார். அண்ணலாரின் பெற்றோர் பிள்ளை உறவு எவ்வாறு இருந்தது என்று வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கினார். அவரது எழுச்சி உரை பல உள்ளங்களை தட்டி எழுப்புவதாக அமைந்து இருந்தது. 

 

 

மேலும், சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ, மாணவிகளும் பாராட்டப்பட்டனர். குறிப்பாக, 11 ஏ பெற்ற மாணவர்களுக்கு ஐ-பேட் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

குறிப்பாக சங்கத்திற்காக பாடுபட்ட முன்னாள் தலைவர்கள் டத்தோ ஹாஜி ஜமருல் கான், ஹாஜி அப்துல் ரசாக் அப்துல் அஜீஸ், சங்கத்தின் முன்னோடிகளாக இருந்து பல நற்சேவைகள் புரிந்த அல்மர்ஹும் டத்தோ ஹாஜி கமாலுத்தீன், அல்மர்ஹும் சுல்தான் அலாவுதீன், அல்மர்ஹும் டத்தோ முஹம்மது இக்பால் கனி, அல்மர்ஹும் ஹாஜி டாக்டர் ஹபிபுல்லாஹ் கான் ஆகியோருக்கு தொக்கோ மௌலிதுர் ரசூல் 2026க்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். 

இந்நிகழ்வில் பிரஸ்மா தலைவர் டத்தோ மோசின், டத்தோஸ்ரீ டத்தோ ஸ்ரீ முகம்மது இக்பால், டத்தோ ஜமருல் கான், பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பல்வேறு பள்ளிவாசல்கள், சூராவ்களின் நிர்வாகிகள் உட்பட ஏறக்குறைய ஆயிரம் பேர் கலந்துகொண்டு ஆதரவு வழங்கினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset