செய்திகள் இந்தியா
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
புதுடெல்லி:
வரும் 2030-ம் ஆண்டுக்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில்களை தயாரிக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை ரயில்வே அமைச்சகம் தயாரித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக ரயில்வே அமைச்சகம் சமர்ப்பித்துள்ள முன்மொழிவில், வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு மணி நேரத்துக்கு 350 கி.மீ. வேகத்தில் இயங்கும் ‘பி35’ ரக சுதேசி புல்லட் ரயில்களை தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதே 2030-ம் ஆண்டில்தான் ஜப்பான் தனது அடுத்த தலைமுறை ‘ஈ10’ தொடர் புல்லட் ரயில்களின் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஈ10 ரயில்களுக்கு நிகரானது இந்தியாவின் பி35 என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை - அகமதாபாத் இடையேயான 508 கி.மீ. நீள அதிவேக ரயில் திட்டத்தின் திருத்தப்பட்ட செலவாக ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இது 2015-ல் திட்டமிடப்பட்ட ஆரம்ப மதிப்பீட்டை விட இருமடங்காகும். இந்த கூடுதல் செலவான சுமார் ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசின் வரவுசெலவு ஆதரவு மூலம் பெறப்படும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள ‘ஈ5’ தொடர் ரயில்களின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தப்படுவதாக ஜப்பான் தரப்பில் 2024 டிசம்பரில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ‘பி35’ ரக புல்லட் ரயில்களை உருவாக்கும் பணியை இந்தியா தொடங்கியது. ஜப்பானின் ‘ஈ10’ ரயில்கள் 2030-ல் உற்பத்தியைத் தொடங்கி 2034-ல் பயன்பாட்டுக்கு வரும் என்பதால், அவை தயாரான பிறகு அவற்றை இந்தியத் தடங்களில் இயக்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘பி28’ அதிவேக ரயில்களை இந்தியாவில் தயாரிக்கும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சீனா தனது ரயில் அமைப்புகளில் பயன்படுத்தும் ‘சிடிசிஎஸ்’ சிக்னலிங் முறைக்கு இணையாக, ரயில்களின் வேகம், இடைவெளி மற்றும் பாதுகாப்பைக் கையாள பாரத் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பை (பிசிசிஎஸ்) இந்தியா உருவாக்கி வருகிறது.
மும்பை - அகமதாபாத் இடையே முழுமையான 508 கி.மீ தூரத்துக்கான 350 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் பாதைப் பணிகள் அனைத்தையும் 2030 டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
ஒற்றை மனிதராக ஆற்றை சுத்தம் செய்யும் 21 வயது மாணவர்: சர்வதேச அங்கீகாரம்
September 6, 2026, 10:49 pm
