நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சிங்கப்பூருக்காக ஆசிய விளையாட்டில் களம் காணும் 19 வயது சீர்காழி இளம் வீரர் முஹம்மது ஜாஹித்

சிங்கப்பூர்:

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை பூர்வீகமாகக் கொண்ட 19 வயது இளம் கூடைப்பந்து வீரர் முஹம்மது ஜாஹித், சிங்கப்பூர் நாட்டின் சார்பில் 3x3 கூடைப்பந்து பிரிவில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

ஜப்பானின் ஐச்சி–நகோயா பகுதியில் நடைபெறும் இப்போட்டிக்காக, முஹம்மது ஜாஹித் சிங்கப்பூர் அணியுடன் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜப்பான் சென்றடைந்துள்ளார்.

தற்போது போட்டிக்கான பயிற்சி, முன் தயாரிப்புகளில் அணியினருடன் ஈடுபட்டு வருகிறார்.

கூடைப்பந்து விளையாட்டில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்ட ஜாஹித், கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

Open, Men’s மற்றும் Under-23 பிரிவுகளில் சிங்கப்பூர் அணிக்காக விளையாடியுள்ள அவர், தனது திறமையான ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

19 வயதிலேயே ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற முக்கியமான சர்வதேச அரங்கில் சிங்கப்பூர் அணிக்காக களம் காணும் வாய்ப்பைப் பெற்றிருப்பது, அவரது விளையாட்டு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.

ஜாஹித்தின் தந்தை கமாலுதீன் முஹம்மது பைஜல். சீர்காழியை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பம், மகனின் விளையாட்டு ஆர்வத்துக்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது.

ஜாஹித்தின் சித்தப்பா ரியாஸ் கூறுகையில், “மிக இளம் வயதிலேயே சிங்கப்பூர் நாட்டுக்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை ஜாஹித் பெற்றிருப்பது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவரது இந்தப் பயணம் சீர்காழிக்கும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும்” என்றார்.

இளம் வயதிலேயே சர்வதேச விளையாட்டு அரங்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ள ஜாஹித்தின் பயணம், கூடைப்பந்து மீது ஆர்வம் கொண்ட இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆசிய விளையாட்டில் சிங்கப்பூர் அணிக்காக களம் காணும் முஹம்மது ஜாஹித்துக்கு சீர்காழி மக்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

சீர்காழியில் வேரூன்றிய இளம் வீரரின் இந்த சர்வதேச பயணம், மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் நோக்கி தொடரட்டும்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset