நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்

சைபர்ஜெயா:

தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே தகவல், தொடர்பு தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பி40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கும் இலக்கவியல் உலகில் சமமான வாய்ப்புகளை உருவாக்கி, எதிர்காலத்திற்குத் தேவையான ஐசிடி திறன்களைப் பெறச் செய்வதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றுவதாக 2026 தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் குணசேகரன் கந்தசாமி தெரிவித்தார்.

தித்தியான் டிஜிட்டல் திட்டம் செயலாக்கம் கண்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர், மாணவர்களின் ஐசிடி திறன்களையும் படைப்பாற்றலையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில், மாநில, தேசிய அளவிலான ஐசிடி போட்டிகள் நடத்தப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டிகளின் மூலம், மாணவர்கள் தங்களுடைய தொழில்நுட்பத் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தளத்தை உருவாக்குவதே எங்களுடைய நோக்கமாகும் எனவும் அவர் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதன் மூலம், மாணவர்களின் தன்னம்பிக்கை, படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு, போட்டித் திறன் ஆகியவை மேலும் வளர்ச்சியடைகின்றன.

அந்த வகையில் 2026-ஆம் ஆண்டு தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி கடந்த சனிக்கிழமை மலேசிய தித்தியான் டிஜிட்டல் அமைப்பின் ஏற்பாட்டில் மலேசிய பல்லூடக பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 

இதன் இணை ஏற்பாட்டாளர்களாக கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கமும் மலேசியத் தமிழ் நுட்பியல் கழகமும் பங்காற்றிய வேளையில் இலக்கவியல் அமைச்சு, மலேசிய பல்லூடக பல்கலைக்கழகம், மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் ஆகியவை ஆதரவாளர்களாக நிகழ்ச்சியின் வெற்றிக்கு துணை நின்றனர்.

நாடு முழுவதுமிருந்து தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு சாரா அமைப்புகளின் நிகராளிகள் என 650-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு வருகையளித்த இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளரும் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான மிஷெல் இங் மெய் ஸ்ஸே அவர் தமதுரையில் மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி பெறவேண்டியதன் அவசியத்தை உணர்த்திய அதே வேளையில், தற்போதைய இலக்கவியல் மேம்பாட்டு தேவைக்கேற்ப மாணவர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியதன் தேவையும் அறிவுறுத்தினார்.

வரைதல், சிறுவர் நிரலாக்கம், இருபரிமாண அசைவூட்டல், இணையத்தளம் வடிவமைத்தல், தகவல் தொடர்பு தொழில்நுட்ப புதிர்போட்டி ஆகிய போட்டிகள் மாணவர்கள் பங்கேற்று தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளில் பங்கெடுத்த மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 10 நிலைகளில் வென்ற மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. முதல் மூன்று நிலைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கையடக்க கருவிகளும் வழங்கப்பட்டன.

வரைதல் போட்டியில் கெடா, சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் நிரல்யா சசி குமார் முதல் நிலையில் வென்ற வேளை; இரண்டாம், மூன்றாம் நிலை பரிசுகளை ஜொகூர் தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளியின் அகல்யா கார்த்தி கேசனும் அனீஷா ஸ்ரீ நாகேந்திர ராவும் தட்டிச் சென்றனர்.

சிறுவர் நிரலாக்கப் போட்டியில் முதல் நிலை சிலாங்கூர், சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் ஈஷ்வர் குமாரன் வசமானது. இரண்டாம் நிலையில் சிலாங்கூர், தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளியில் சரண்யா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற வேளை; மூன்றாம் நிலையில் சிலாங்கூர், சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் திவ்யதாரணி வேலவன் வாகை சூடினார்.

தொடர்ந்து, இருபரிமாண அசைவூட்டல் போட்டியில் ஜொகூர் தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளியின் கீர்த்தன் ஆனந்தன் முதல் நிலையில் வாகை சூடினார். இரண்டாம் நிலையில் கெடா, சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் தர்வின் குமாரும் மூன்றாம் நிலையில் பேராக், கம்போங் சிமீ தமிழ்ப்பள்ளியின் கார்த்திகேயன் கணேஸும் வெற்றி பெற்றனர்.

கெடா, சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் வர்னிகா நோவலன், தருண் மதிவாணன் இணையத்தளம் வடிவமைத்தல் போட்டியில் முறையே முதல் இரு இடங்களை வென்ற நிலையில்; கெடா, பீடோங் தமிழ்ப்பள்ளியின் திவினா சத்தியசீலன் மூன்றாம் நிலையில் வெற்றி பெற்றார்.

இதனிடையே, தகவல் தொடர்பு தொழில்நுட்ப புதிர்போட்டியில் முதல் பரிசினை சிலாங்கூர், எமரல்ட் தோட்ட தமிழ்ப்பள்ளியின் சி. பிரான்செஸ்கோ பியோ தட்டிச் சென்றார். இரண்டாம் பரிசினை சிலாங்கூர், செர்டாங் தமிழ்ப்பள்ளியின் ஜி. சம்விதா கௌரி பெற்ற வேளை; மூன்றாம் நிலை பரிசினை ஜொகூர், ஹாஜி மானான் தமிழ்ப்பள்ளியின் சவீனேஷ் ராம் வாகை சூடினார்.

2026 தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் சன்வே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் மகேந்திரன் நாயர், பேராசிரியர் முனைவர் சாந்தா வைத்தியலிங்கம், டெலிகோம் மலேசியாவின் ஆய்வு, மேம்பாட்டு தலைமைச் செயல் அதிகாரி முனைவர் ஷார்லினி தியாகராஜா, முனைவர் நபிஹா ஹாஷிம், மலேசிய பல்லூடக பல்கலைக்கழகத்தின் முனைவர் நவநீதன் சி. அர்ஜுமன், மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் பழனி சுப்பையா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset