செய்திகள் மலேசியா
அரசாங்கத்தில் பதவிகளில் இல்லாததால் மஇகா பலவீனமாகிவிட்டது என்று அர்த்தமல்ல: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
சுங்கை சிப்புட்:
மஇகா அரசாங்கத்தில் பதவி வகிக்காத தற்போதைய சூழ்நிலையிலும், இந்திய சமூகத்தின் உரிமைகள், நலன்களுக்காக எவ்வித தயக்கமுமின்றி தொடர்ந்து போராடும்.
அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
மஇகா என்பது பதவி, அதிகாரத்தை நம்பி செயல்படும் கட்சி அல்ல.
இந்திய சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட இக்கட்சி, எந்தச் சூழ்நிலையிலும் மக்களின் தேவைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு கொண்டது.
அரசாங்கத்தில் பதவி இல்லாததால் மஇகா பலவீனமாகிவிட்டது என்று அர்த்தமல்ல.
மாறாக, பதவி இல்லாத சூழ்நிலையில் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் நமது சமூகத்துக்காக சுதந்திரமாகப் போராடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாம் அரசாங்கத்தை நம்பி வாழ வேண்டியவர்கள் அல்ல. நமது சமூகத்துக்காக நாமே வேலை செய்ய வேண்டும்.
பதவி இல்லாவிட்டாலும் இந்தியர்களுக்காகச் சேவை செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்,” என்றார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதில் ம.இ.கா. மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அப்போது பல்வேறு நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்பதற்காக விமானச் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அவர்களை நாட்டிற்கு அழைத்து வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தச் சேவைகளை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக நாங்கள் செய்யவில்லை. இந்தியர்கள் சிரமத்தில் இருந்தார்கள்; அவர்களுக்கு உதவுவது நமது கடமை என்ற அடிப்படையில்தான் செயல்பட்டோம்.
சமூகத்துக்காகச் செய்யும் சேவைக்கு பதவி அல்லது தேர்தல் வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது.
மக்களுக்கு உதவிய பின்னர் கிடைக்கும் மனநிறைவே நமக்கான மிகப்பெரிய பலன் என்றார்.
மஇகா கடந்த காலத்தில் இந்திய சமூகத்துக்காக ஆற்றிய பங்களிப்புகளை மட்டும் எடுத்துக்கூறி இன்றைய தலைமுறையினரின் ஆதரவைப் பெற முடியாது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நாம் 1950-களில் என்ன செய்தோம், 1960-களில் என்ன செய்தோம், 1970-களில் என்ன செய்தோம் என்பதைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் மட்டும் இன்றைய இளைஞர்களை ஈர்க்க முடியாது.
இன்றைய மக்கள், குறிப்பாக இளைஞர்கள், ‘இப்போது எங்களுக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்றுதான் கேட்கிறார்கள்.
எனவே, வரலாற்றைப் பேசுவதுடன் நிற்காமல், இன்றைய சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணியில் நாம் இறங்க வேண்டும், என்றார்.
மஇகாவின் ஒவ்வொரு கிளையும் வெறுமனே பதவிகளை வைத்திருப்பதற்காக இல்லாமல், தங்கள் வட்டாரத்தில் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத் தரும் மையங்களாக செயல்பட வேண்டும்.
மக்களுக்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்தான் உண்மையான தலைவர்.
வெறுமனே பதவியை வைத்திருப்பதால் ஒருவர் தலைவராகிவிட முடியாது.
பேரா மாநில மஇகா பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2026, 5:21 pm
அரசியல் அல்ல, நேர நெருக்கடியே காரணம்: பிரதமரின் தமிழக பயணம் ரத்தானது குறித்து டத்தோஸ்ரீ ரமணன் முற்றுப்புள்ளி
September 12, 2026, 4:56 pm
குறைக்கடத்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க மலேசியாவும் இந்தியாவும் விருப்பம்
September 12, 2026, 2:38 pm
மலாக்கா தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட நம்பிக்கை கூட்டணி தயார்: ஆடம் அட்லி
September 12, 2026, 2:37 pm
ஈரானுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த மலேசியா நோக்கம் கொண்டுள்ளது: பிரதமர்
September 12, 2026, 1:31 pm
