நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரானுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த மலேசியா நோக்கம் கொண்டுள்ளது: பிரதமர்

புதுடில்லி:

புவிசார் அரசியல் அபாயங்கள், சர்வதேசத் தடைகள் போன்ற சவால்களுக்கு மத்தியில், ஈரானுடனான பொருளாதார உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இங்கு ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் பல மலேசியப் பிரதிநிதிகள் குழுக்களும் இங்குள்ள ஓபராய் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்ட அமர்வு, இருதரப்பு உறவுகள், குறிப்பாக மலேசியா, ஈரானுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் மீது கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெஹ்ரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த போதிலும், மலேசியா ஈரானுடன் வர்த்தக, தூதரக உறவுகளைத் தொடர்ந்து பேணிவரும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வலியுறுத்தினார்.

ஈரானுடனான மலேசியாவின் உறவு அப்படியே நீடிக்கிறது என்றும், அது விவேகம், தேசிய நலன் மற்றும் பிற நாடுகளின் இறையாண்மைக்கு மரியாதை அளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து அமைந்திருக்கும்.

மேலும், நாடு பலவீனமாகத் தோன்றாமலும், தேசிய நலன்களைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்காமலும் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், சர்வதேச உறவுகளை நிர்வகிப்பதில் மலேசியா விவேகத்தைக் கையாளும் என்று டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset