நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சதுரங்கப் பலகையில் நகர்ந்தும் ஒவ்வொரு காயும் மாணவர்களின் சிந்தனை, பொறுமை, தலைமைத்துவத்தை செதுக்கிய அறிவுப் பயணம்: டத்தோ ஙே கூ ஹாம்

ஆயர் தாவார்:

மாணவர்களின் அறிவாற்றல், பகுத்தறியும் திறன், தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் நோக்கில் நடத்தப்பட்ட பேரா மாநில அளவிலான டத்தோ ஙே கூ ஹாம் கிண்ணம் சக்கரவியூகம் 2.0 சதுரங்கப் போட்டி ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம், சதுரங்கம் என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல; வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்கக் கற்றுத் தரும் அறிவுப் பயிற்சி என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் மாணவர்கள் வெற்றி அல்லது தோல்வியை மட்டுமே எண்ணாமல், ஒவ்வொரு ஆட்டத்திலும் புதிய அனுபவத்தையும் சிந்தனைத் திறனையும் பெற்றுக் கொள்வதே முக்கியம்.

இத்தகைய போட்டிகள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கை மிக்க இளைஞர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் சுப்பிரமணியம் ரெங்கசாமி,

இன்றைய தலைமுறை மாணவர்கள் கைப்பேசி மற்றும் பிற மின்னணு சாதனங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, சிந்தனைத்திறன், ஒருமுக கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் சதுரங்கம் போன்ற அறிவுசார் போட்டிகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இவ்வாண்டு இப்போட்டி பெற்றுள்ள வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு சக்கரவியூகம் 3.0 போட்டியை இன்னும் விரிவாகவும் பிரமாண்டமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சி வெற்றியடைய பங்களித்த ஆதரவாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றியைப் பதிவு செய்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset