நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் விற்பனை: செவிலியர் உட்பட 5 பேர் கைது

பெக்கான்: 

அரசு மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை (MC) விற்பனை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு செவிலியர் உட்பட ஐந்து பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 முதல் 55 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் மீது மூன்று முதல் நான்கு நாட்கள் வரை தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெக்கான் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் முஹம்மத் ஜைடி மாட் சின், சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பெக்கானிலுள்ள ஒரு சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர்கள் என்றும், நேற்று மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கடந்த மே 12-ஆம் தேதி, அரசு மருத்துவ நிலையம் ஒன்றில் அதிகாரப்பூர்வ மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக பெக்கான் மாவட்ட சுகாதார அலுவலகம் (PKD) கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டு விசாரணையில், ஒரு மருத்துவ அதிகாரியின் பெயர், முத்திரை, கையொப்பம் பயன்படுத்தப்பட்டு போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. எனினும், அந்த மருத்துவ அதிகாரி 2023-ஆம் ஆண்டிலேயே பெக்கான் மாவட்டத்திற்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜூன் 10-ஆம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

விசாரணையில், இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் இடைத்தரகர்களாக செயல்பட்டு போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்ததாக நம்பப்படுகிறது. அதேவேளை, 55 வயதுடைய பெண் செவிலியர் ஒருவர் அந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறார்.

மேலும், தொழிற்சாலை ஊழியரான 34 வயது நபர் ஒருவர் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பக் கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குற்றவாளிகள் ஒவ்வொரு போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழையும் 50 முதல் 200 ரிங்கிட் வரை விற்பனை செய்ததாக நம்பப்படுகிறது.

இந்த வழக்கு, மோசடி நோக்கத்திற்காக ஆவணங்களைப் போலியாக உருவாக்கிய குற்றத்திற்கான குற்றவியல் சட்டம் பிரிவு 468, ஏமாற்று நடவடிக்கைக்கான பிரிவு 420 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset