செய்திகள் மலேசியா
ரோஹிங்கியா சிறார்கள் மீதான மனிதாபிமானமற்ற நடத்தையா?: குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த உள்துறை அமைச்சு
கோலாலம்பூர்:
ரோஹிங்கியா சமூகத்தினர் உட்பட குடியேறியோர், அகதி சிறார்கள் மனிதாபிமானமற்ற சூழலில் தடுத்து வைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை மலேசிய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
உள்துறை அமைச்சு (KDN) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறார்கள் பாதுகாப்பு, அடிப்படை நலன்கள் இன்றி அடைக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள், ஒழுங்கற்ற குடியேற்றப் பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையிலும் தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்கவும் அரசு கையாளும் முயற்சிகளைப் பிரதிபலிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் விளக்கத்தின்படி, சிறார்களின் நலன், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘பைத்துல் மஹப்பா’ (Baitul Mahabbah) எனும் சிறப்பு தங்குமிட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறார்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான மாற்று வழிமுறைகள் தொடர்பான விரிவான கட்டமைப்பும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஆறு பைத்துல் மஹப்பா மையங்களில் 188 சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு பேர் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களிடமிருந்து பிரிந்த நிலையில் உள்ள சிறார்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மையங்கள், 12 வயதிற்குட்பட்ட சிறார்களையும் அவர்களது பராமரிப்பாளர்களையும் வழக்கமான குடிவரவு தடுப்பு மையங்களிலிருந்து மாற்றி, பாதுகாப்பான, சிறார்களுக்கு ஏற்ற சூழலில் தற்காலிகமாக தங்க வைக்கும் இடைக்கால ஏற்பாடாக செயல்படுகின்றன.
அங்கு தங்க வைக்கப்படும் சிறார்களுக்கு அடிப்படை வசதிகள், சுகாதார சேவைகள், முறைசாரா கல்வி நடவடிக்கைகள், வழிகாட்டுதல், வயதுக்கேற்ற பொழுதுபோக்கு வசதிகள் வழங்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில், ரோஹிங்கியா சமூக ஆர்வலர் நூர் அசிசா, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மலேசியாவில் 2,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா சிறார்கள் குடிவரவு தடுப்பு மையங்களில் அடைக்கப்பட்டு கல்வி வாய்ப்பின்றி வளர்ந்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சு, சிறார்களின் நலன், பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக வலியுறுத்தியது.
மேலும், பைத்துல் மஹப்பா திட்டத்தின் வசதிகளையும் திறனையும் கட்டங்களாக விரிவுபடுத்தும் திட்டம் அரசிடம் இருப்பதாகவும், சிறார்களின் பாதுகாப்பு, நலனை மையமாகக் கொண்டு தொடர்ந்து மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கட்டாய இடம்பெயர்வுக்கு வழிவகுக்கும் அடிப்படைக் காரணிகளைக் களைவதற்கும், மனிதக் கடத்தல், குடியேற்றக் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதற்கும் சர்வதேச அமைப்புகள், பிராந்திய நாடுகள், மனிதாபிமான அமைப்புகள் இணைந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 16, 2026, 4:02 pm
ஹோபார்ட் முகாமில் பயிற்சியின் போது குண்டு வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் மரணம்
June 16, 2026, 12:04 pm
போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் விற்பனை: செவிலியர் உட்பட 5 பேர் கைது
June 16, 2026, 10:49 am
தைப்பிங் சிறை சம்பவம்; ஒருவர் மீது குற்றச்சாட்டு: ஐவர் மீது ஒழுங்கு நடவடிக்கை
June 16, 2026, 10:47 am
