நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Baucar Kita Selangor: ஏழைக் குடும்பங்கள், வேலை இழந்தோர், ஜேகேஎம் பதிவு பெற்ற பாதிக்கப்படக்கூடியோர், தனித்து வாழும் தாய்மார்களுக்கு முன்னுரிமை

ஷா ஆலம்: 

சிலாங்கூர் மாநில அரசின் ‘பௌச்சர் கித்தா சிலாங்கூர்’ (Baucar Kita Selangor) உதவித் திட்டத்தின் கீழ், தகுதி பெற்ற குடும்பங்களுக்கு ஆறு மாதங்களுக்கு மாதந்தோறும் 100 ரிங்கிட் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஏழைக் குடும்பங்கள், வேலை இழந்த நபர்கள், சமூக நலத் துறையில் (JKM) பதிவு செய்யப்பட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், தனித் தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாநிலச் செயலாளர் அலுவலகம் (SUK) தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலகத்தின் நிறுவனப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது பொதுமக்களுக்காக திறக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள், முகமைகளால் வழங்கப்பட்ட தரவுகள், பட்டியல்களின் அடிப்படையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தகுதியான பயனாளர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் eKasih தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஏழைக் குடும்பங்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், JKM-இல் பதிவு செய்யப்பட்ட பாதிக்கப்படக்கூடியோர், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் தனித் தாய்மார்கள் ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான பயனாளர்களுக்கு வரும் ஜூன் 23 முதல் குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும். அதன்மூலம் அவர்கள் தங்களது தகவல்களை உறுதிப்படுத்தி, தேவையான ஆவணங்களுடன் Baucar Kita Selangor இணையத்தளம் வழியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும்.

எனவே, இத்திட்டம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன், ஜூன் 22 அன்று வெளியிடப்படும் மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கொண்ட குறுஞ்செய்திகள் அல்லது தகவல்களைப் பெற்றால் அவற்றைத் திறக்க வேண்டாம் என்றும் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற மூலங்களிலிருந்து வரும் இணைப்புகளைச் சொடுக்குவது இணைய மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்கள் சிலாங்கூர் மாநில அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளின் மூலம் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, கடந்த ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப்பட்ட ‘Pakej Pengukuhan Daya Tahan Selangor Fasa 1’ திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள 50,000 குறைந்த வருமானக் குடும்பங்கள் இந்த உதவியைப் பெறவுள்ளதாக அறிவித்திருந்தார்.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு, பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதே இந்த உதவித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என அவர் விளக்கினார்.

மேலும், பயனாளர்கள் தேர்வு செயல்படுத்தல் ஒருங்கிணைப்பு அலகு (ICU), BINGKAS, eKasih உள்ளிட்ட பல்வேறு தரவுத்தளங்களின் ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset