நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டு குளியலறையில் உயிரிழந்த நிலையில் மாது கண்டுபிடிக்கப்பட்டார்

ஜாசின்: 

கம்போங் உம்பாயில் உள்ள தனது வீட்டின் குளியலறையில், நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த தனித்து வாழும் தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் லத்தீஃபா முஹம்மது யாசின் (51) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வீட்டிற்கு திரும்பிய அவரது 19 வயது மகன், தாயார் குளியலறைக்குள் அசைவின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உயிரிழந்தவரின் நெருங்கிய தோழி நொராய்னி அப்துல்லாஹ் (51), ஆயர் கெரோவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் அவரது ஒரே மகன், குளியலறைக்குள் குழாய் நீர் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தாயார் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டதாக தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மலேசிய சுகாதார அமைச்சு (KKM) அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் லத்தீஃபா ஏற்கனவே உயிரிழந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், குளியலறையின் குறுகலான அமைப்பு காரணமாக உடலை வெளியே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டதால், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவி நாடப்பட்டது.

நொராய்னியின் கூற்றுப்படி, லத்தீஃபா கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு வலிப்பு நோய், நீரிழிவு நோய், பக்கவாதம், முதுகுத்தண்டு தட்டு சரிவு (Slipped Disc) போன்ற பிரச்சினைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது அன்றாட நடமாட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

“தினசரி தேவைகள், வெளிச்செல்லும் நடவடிக்கைகளுக்காக அவர் பெரும்பாலும் நண்பர்களின் உதவியையே நம்பியிருந்தார். மாலை சுமார் 6 மணியளவில் மெர்லிமாவ் காவல் நிலையத்தில் இறப்பு அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது,” என நொராய்னி தெரிவித்தார்.

இதற்கிடையில், மலாக்கா தீயணைப்பு, மீட்புத் துறையின் (JBPM) பொதுத் தொடர்பு அதிகாரி துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் II முஹம்மத் ஹாஃபிட்ஸாதுல்லா ரஷிட், இரவு 8.24 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து மெர்லிமாவ் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது என்றார்.

சம்பவ இடத்தை அடைந்தபோது, சுகாதார அமைச்சினரால் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணின் உடல் குளியலறைக்குள் இருந்தது கண்டறியப்பட்டது.

PBK I TBK II முஹம்மத் சுகூர் முஹம்மது அலி தலைமையிலான குழு, உடலை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடவடிக்கை இரவு 9.50 மணியளவில் நிறைவடைந்ததாக அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset