நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புடு சந்தையில் அதிரடி சோதனை: 22 உரிமமற்ற வியாபாரிகள் மீது கோலாலம்பூர் மாநகர் மன்றம் நடவடிக்கை

கோலாலம்பூர்:

ஜாலான் யூவிலுள்ள பிரபலமான புடு சந்தையைச் சுற்றிய பகுதிகளில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடி ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில், உரிமமின்றி வியாபாரம் செய்த 22 வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 16 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL) தனது பேஸ்புக் அறிக்கையில் நேற்று காலை 6 மணியளவில் தொடங்கிய இந்தச் சிறப்பு நடவடிக்கை, மலேசிய குடிநுழைவுத் துறையுடன் (JIM) இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) தனது பேஸ்புக் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

குறிப்பாக, உரிய அனுமதியின்றி, தங்களது வேலை அனுமதிப் பத்திர நிபந்தனைகளை மீறி, காய்கறிகள், பழங்கள், பிற புதிய உணவுப் பொருட்களை விற்பனை செய்து வந்த வெளிநாட்டவர்களே இந்த நடவடிக்கையின் பிரதான இலக்காக இருந்தனர்.

DBKL வெளியிட்ட தகவலின்படி, 13 வெளிநாட்டவர்கள், 9 மலேசியர்கள் உட்பட மொத்தம் 22 உரிமமற்ற வியாபாரிகள் மீது கடும் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிமம் இன்றி வியாபாரம் செய்ததற்கும், பொது இடங்களை ஆக்கிரமித்ததற்கும் அவர்களது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

மேலும், 2016 ஆம் ஆண்டின் கோலாலம்பூர் கூட்டாட்சிப் பிரதேச ஹாக்கர் உரிம விதிமுறைகள், 1974 ஆம் ஆண்டின் தெரு, வடிகால், கட்டிடச் சட்டத்தின் கீழ், அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராத நோட்டீஸ்களும் வழங்கப்பட்டதாக DBKL தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர் நாடுகளைச் சேர்ந்த 62 வெளிநாட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 16 பேர் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள், அனுமதிப் பத்திரங்கள் அல்லது விசாக்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படுவதால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணை, சட்ட நடவடிக்கைகளுக்காக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

"உரிமமற்ற வியாபாரம், அனுமதியற்ற வெளிநாட்டு தொழிலாளர் நடவடிக்கைகள், பொது இட ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்" என்ற தெளிவான செய்தியை இந்த அதிரடி சோதனை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset