நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காட்டை மறைவிடமாக்கிய சட்டவிரோத கும்பல் சிக்கியது: 5 பெண்கள் உட்பட 12 மியான்மர் நாட்டவர்கள் கைது

பாசிர் மாஸ்:

அதிகாரிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க அடர்ந்த காட்டு பகுதியை இடைநிலை முகாமாக (Transit Point) பயன்படுத்திய சட்டவிரோத குடியேறிகள் (PATI) கும்பலின் தந்திரம் அம்பலமாகியுள்ளது. நேற்று பிற்பகல் கிளாந்தான் மாநிலம் மெராந்தி, கம்போங் தொக் ரூசா பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 5 பெண்கள் உட்பட 12 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

22 முதல் 41 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் 'ஓப் தாரிங் வவாசான்' நடவடிக்கையின் கீழ் PGA பெட்டாலியன் 8 பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தமது துறைக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் தாம் விரைந்து செயல்பட்டதாக PGA தென்கிழக்கு படைப்பிரிவு தளபதி, மூத்த உதவி ஆணையர் அஹ்மத் ராட்ஸி ஹுசைன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் பதுங்கியிருந்த 12 மியன்மார்களைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

"முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்காத அவர்கள் அனைவரும் சுங்கை கோலோக் வழியாக மலேசியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதிகாரிகளின் கண்களில் சிக்காமல் இருக்க, அந்தக் காட்டு பகுதி தற்காலிக தங்குமிடமாகவும், அடுத்த இலக்குக்குச் செல்லும் இடைநிலை முகாமாகவும் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது", என்றார் அவர்.

அவர்கள் அனைவரும் மேலதிக நடவடிக்கைக்காக பாசிர் மாஸ் காவல்துறை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset