நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"மருத்துவமனைகள் மட்டும் போதாது; முதலில் மருத்துவ பணியாளர்களை உருவாக்குங்கள்": அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மலேசிய மருத்துவர் சங்கம்

பெட்டாலிங் ஜெயா: 

புதிய மருத்துவமனைகளைக் கட்டுவது மட்டுமே நாட்டின் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது, போதுமான மருத்துவப் பணியாளர்கள் இல்லையெனில் அவை வெறும் கட்டிடங்களாகவே மாறிவிடும் என மலேசிய மருத்துவர் சங்கம் (MMA) அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய அரச மருத்துவமனை அமைக்கும் திட்டத்தை வரவேற்றுள்ள MMA, நாட்டில் தற்போது நிலவும் மருத்துவ பணியாளர் பற்றாக்குறை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் சுமார் 11,000 மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை நிலவுவதோடு, 84,000 செவிலியர் பணியிடங்களில் 14,700 காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாக MMA தலைவர் டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ தெரிவித்தார்.

மேலும், சமீபத்தில் மருத்துவப் பட்டதாரிகளுக்காக அறிவிக்கப்பட்ட 5,000 பணியிடங்களில் வெறும் 529 பேர் மட்டுமே பணியை ஏற்றுக்கொண்டிருப்பது, இளம் மருத்துவர்கள் அரசுத் துறையை விட்டு விலகி வரும் அதிர்ச்சிகரமான சூழலை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

"மருத்துவமனை என்பது வெறும் சுவர்களும் கட்டிடங்களும் அல்ல; அதன் உயிர் மருத்துவர்கள், செவிலியர்கள், நிபுணர்கள்தான். கட்டிடங்களை எழுப்பி இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது," என அவர் வலியுறுத்தினார்.

போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லாத காரணத்தால் முழுமையாக செயல்பட முடியாமல் போன பாசிர் கூடாங் மருத்துவமனையை எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டிய அவர், அது கட்டுமானத் தோல்வி அல்ல, மாறாக மனிதவள திட்டமிடல் தோல்வி எனக் கூறினார்.

"எங்கள் மருத்துவமனைகளில் நோயாளிகள் குறைவில்லை; குறைவாக இருப்பது மருத்துவ பணியாளர்கள்தான்," என்ற அவரது கருத்து சுகாதாரத் துறையின் தற்போதைய சவால்களை வெளிப்படுத்துகிறது.

இதற்கிடையில், பெட்டாலிங் ஜெயாவில் ஏற்கனவே 12 தனியார் மருத்துவமனைகள், 1,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 450-க்கும் அதிகமான தனியார் கிளினிக்குகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த வளங்களை அரசு திறம்பட பயன்படுத்த வேண்டும் என்றும் MMA வலியுறுத்தியுள்ளது.

பொது மருத்துவமனைகளில் மாதக்கணக்கில் காத்திருக்கும் நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கும் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும், இதற்காக சுமார் 100 தனியார் மருத்துவமனைகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீண்ட காத்திருப்பு நேரம், காணாமல் போகும் மருத்துவப் பதிவுகள், மீண்டும் செய்யப்படும் பரிசோதனைகளால் மக்கள் அவதிப்படுவதால், சுகாதாரத் துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் MMA வலியுறுத்தியுள்ளது.

"மருத்துவர்களை வேறு யாரும் பறித்துச் செல்லவில்லை; தற்போதைய அமைப்பே அவர்களை வெளியேறத் தள்ளுகிறது," என்று கூறிய டாக்டர் திருநாவுக்கரசு, மருத்துவ பணியாளர் நெருக்கடியைத் தீர்க்க சுகாதார அமைச்சு மட்டுமல்லாது நிதி அமைச்சு, பொதுச் சேவைத் துறை, உயர்கல்வி அமைச்சும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

"மருத்துவமனையைக் கட்டுங்கள்; ஆனால் முதல் செங்கல் வைக்கப்படுவதற்கு முன்பே அதில் பணியாற்றப்போகும் மருத்துவப் பணியாளர்களைத் திட்டமிடுங்கள்," என அவர் அரசுக்கு வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset